உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியது. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 187 நாடுகளைச் சோந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இந்த தொடருக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து அசத்தியது . முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள் போன்றவை செஸ் விளம்பரத்தால் ஜொலித்த நிலையில், காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் கட்டங்களை போல வண்ணம் தீட்டப்பட்டு சுற்றுலா இடமாகவும் மாறியுள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொண்ட சர்வதேச வீரர்கள் போட்டிக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து பாராட்டி தள்ளியிருந்தனர். "சிறந்த விளையாட்டு அரங்கத்தை உலகில் நான் எங்குமே பார்த்ததில்லை. எங்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்துமே அற்புதமாக உள்ளன" என உலகளாவிய செஸ் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் 'women chess grand prix' என்ற மாபெரும் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் மிக மோசமான நடத்தப்படுத்தாகவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் சர்வதேச செஸ் வீராங்கனைகள் கூறி வருகின்றனர்.
இந்த போட்டியில் இருந்து விலகிய உலகின் முன்னணி செஸ் வீராங்கனை ஜான்சயா அப்துல்மாலிக் "நிகழ்ச்சிக்கான தயாரிப்பு போதுமானதாக இல்லாததால் நான் போட்டியிலிருந்து வெளியேறினேன். நான் 1.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தேன், ஆனால் என்னை யாரும் சந்திக்க வரவில்லை. நாங்கள் வருவதற்கு முன்பு எங்கள் மின்னஞ்சலில் அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்தேன். ஆனாலும் வரவேற்க யாரும் வரவில்லை. இதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.
அதன்பின்னர் ஹோட்டல் சென்றபின்னரும் அங்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை மோசமாக இருந்தது. நான் இந்தியாவை நேசிக்கிறேன். நாங்கள் சென்னையில் ஒரு சிறந்த ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய இனிமையான நினைவு உள்ளது. ஆனால் இந்த முறை ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது. இது உலகின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும். ஆனால்இரண்டு வாரங்கள் அங்கு விளையாடுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இதனால் இந்த தொடரில் இருந்து விலகுகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதுபோல பல்வேறு வீராங்கனைகளும் சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு இது தொடர்பாக புகார் தெரிவித்திருந்த நிலையில், ர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். ஜான்சயா அப்துல்மாலிக் தவிர இன்னும் ஏராளமான வீராங்கனைகள் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.