விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்.. அப்போ ராகுல் டிராவிட்?

அயர்லாந்து டி20 தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்.. அப்போ ராகுல் டிராவிட்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கப்போகும் தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார் முன்னாள் பேட்ஸ்மேனும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவருமான விவிஎஸ் லட்சுமண். தேசிய கிரிக்கெட் அகாடெமியின் மற்ற பயிற்சியாளர்களான சாய்ராஜ் பஹுதுலே, சிதான்சு கோடக், முனீஷ் பாலி ஆகியோரும் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இரண்டு டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை. கேப்டன் ரோஹித் ஷர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, தொடக்க வீரர் கேஎல் ராகுல், விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி என பலருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்.. அப்போ ராகுல் டிராவிட்?

வீரர்களுக்கு ஒருபக்கம் ஓய்வு கொடுக்கப்பட, பயிற்சியாளார் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவும் இந்தத் தொடரில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோர் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் எட்பாஜ்ஸ்டன் டெஸ்ட், அதன்பிறகு நடக்கும் சர்வதேச டி20 தொடர், ஒருநாள் தொடர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இப்போது மீண்டும் நடக்கவிருக்கிறது. அந்தப் போட்டிக்குத் தயாராகும் விதமாக டிராவிட்டின் பயிற்சிக்குழு நேராக பிர்மிங்ஹம் சென்றுவிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி வீரர்கள் ரோஹித் ஷர்மா, விரார் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் அவர்களோடு இங்கிலாந்தில் இணைந்துகொள்வார்கள்.

இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்.. அப்போ ராகுல் டிராவிட்?

சர்வதேச டி20 தொடருக்கு முன்பாக நார்த்தாம்ப்டன்ஷயர், டெர்பிஷயர் அணிகளுக்கு எதிராக இரண்டு டி20 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. அந்தப் போட்டிகள் டெஸ்ட் போட்டி நடக்கும் நாள்களில் வருவதால், அந்தப் போட்டிகளுக்கும் லட்சுமண் தலைமையிலான பயிற்சியாளர் குழுவே இந்திய அணியை கவனித்துக்கொள்ளும்.

டிராவிட் இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்ற பிறகு, அவர் வகித்துவந்த தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் லட்சுமண். இதற்கு முன் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியோடு இணைந்திருந்தார் லட்சுமண்.

இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்.. அப்போ ராகுல் டிராவிட்?

இரண்டு வேறு இந்திய அணிகள் இரண்டு வேறு தொடர்களில் விளையாடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடிக்கொண்டிருந்தபோது, இன்னொரு இந்திய அணி இலங்கைக்கு எதிரக விளையாடியது. டெஸ்ட் அணி கோலி தலைமையில், ரவி சாஸ்திரியின் பயிற்சியின்கீழ் பங்கேற்றது. இளம் வீரர்களோடு இலங்கையில் ஆடிய அணி ஷிகர் தவான் கேப்டனாக இருந்தார். அந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டார்.

அயர்லாந்து தலைநகர் டுப்லினில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு சர்வதேச டி20 போட்டிகள் நடக்கின்றன. அந்தப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தப்போகிறார் ஹர்திக் பாண்டியா. இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி. இந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 400 ரன்களுக்கு மேல் விளாசினார்.

banner

Related Stories

Related Stories