விளையாட்டு

60,000 கோடி இலக்கு.. 40,000 கோடியை தாண்டிய வியாபாரம்.. உச்சத்தைத் தொடும் ஐ.பி.எல் ஏலம் !

குறைந்தபட்சமாக 45,000 கோடிக்கும் வரை உரிமங்கள் விலைபோகும் என பி.சி.சி.ஐ எதிர்பார்த்தது. முதல் நாள் முடிவிலேயே ஏலத்தொகை 43,000 கோடியை தாண்டியிருக்கிறது.

60,000 கோடி இலக்கு.. 40,000 கோடியை தாண்டிய வியாபாரம்.. உச்சத்தைத் தொடும் ஐ.பி.எல் ஏலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவே, ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடரின் மீதாப எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேதான் இருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பை மையமாக ஐ.பி.எல் தொடரின் வியாபார எல்லையும் கற்பனைக்கு எட்டாத வகையில் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

2023 முதல் 2027 வரையிலான ஐந்து சீசன்களுக்கான ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமைக்கான இணையதள வழியிலான ஏலம் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. மலைப்பை ஏற்படுத்தும் வகையில் பல நிறுவனங்களும் கோடிகளை அள்ளி வீசி ஒளிபரப்பு உரிமையை பெற போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஏலத்தின் முதல் நாளான நிகழ்வுகள் முடிந்திருக்கும் நிலையில் தொலைக்காட்சி ஒளிபரப்புதலுக்கான உரிமம் மட்டும் 23,370 கோடியை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமம் 19,680 கோடியை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன் 2018-22 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் என ஒட்டுமொத்த உரிமத்தையும் ஸ்டார் குழுமம் ஏறக்குறைய 16,000 கோடிக்கு வாங்கியிருந்தது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான உரிமத்தை பி.சி.சி.ஐ நான்கு விதமாக பிரித்து விற்க திட்டமிட்டிருந்தது.

தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், இந்தியாவிற்கு வெளியே ஒளிபரப்பும் உரிமம், ஒரு சில குறிப்பிட்ட போட்டிகளுக்கு மட்டுமான பிரத்யேக ஒளிபரப்பு உரிமம் என நான்கு விதமாக பிரித்து நான்கிற்கும் தனித்தனியாக ஏலம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நான்கு விதமான உரிமத்திற்கும் சேர்த்து அடிப்படை விலை 32,890 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறைந்தபட்சமாக 45,000 கோடிக்கும் வரை உரிமங்கள் விலைபோகும் என பி.சி.சி.ஐ எதிர்பார்த்தது. முதல் நாள் முடிவிலேயே ஏலத்தொகை 43,000 கோடியை தாண்டியிருக்கிறது.

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டலுக்கான உரிமங்களின் ஏலம்தான் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகள் மற்றும் பிரத்யேக போட்டிகளுக்கான உரிமங்களின் ஏலம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அவை நாளை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றையும் சேர்த்தால் இப்போதைய நிலவரப்படி 60,000 கோடி வரை ஒட்டுமொத்த ஒளிபரப்பு உரிமமும் விலைபோனாலும் ஆச்சர்யம் இல்லை என கூறப்படுகிறது.

ஐ.பி.எல் தொடங்கப்பட்ட 2008 லிருந்து 2017 வரை 10 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை சோனி குழுமம் 8200 கோடி ரூபாய்க்கே வாங்கியிருந்தது. இப்போது அதைவிட பலமடங்கு அதிக தொகைக்கு வியாபாரம் நடக்கவிருக்கிறது.

15 ஆண்டுகளில் வியாபாரரீதியில் ஐ.பி.எல் எட்டியிருக்கும் வளர்ச்சி மலைப்பை ஏற்படுத்துகிறது.

banner

Related Stories

Related Stories