விளையாட்டு

#IPL-ல் அசத்தும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள்.. தவறை திருத்திக் கொள்ளுமா இந்திய அணி?

2022 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இந்த 9 பேரில் ஃபில்டர் செய்யப்பட்ட நான்கைந்து பேரில் ஒருவராவது இந்தியாவின் துருப்புச்சீட்டாக இடம்பெற வேண்டும்.

#IPL-ல் அசத்தும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள்.. தவறை திருத்திக் கொள்ளுமா இந்திய அணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2013 க்கு பிறகு இந்திய அணி எந்த ஐ.சி.சி கோப்பைகளையுமே வெல்லவில்லை. இந்த ஏமாற்றங்களுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது இந்திய அணியில் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது.

2021 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களான ஷாகீன் ஷா அஃப்ரிடி, ட்ரெண்ட் போல்ட் போன்றோருக்கு எதிராக கடுமையாக திணறியிருந்தனர். இந்த பௌலர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அனுபவம் வாய்ந்த ரோஹித், ராகுல், கோலியால் கூட ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்திய வீரர்கள் என்றில்லை, பொதுவாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆபத்தானவர்களே எல்லா அணியின் பேட்ஸ்மேன்களுமே திணறவே செய்வர். இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர் தி விக்கெட்டில் வந்து வீசும் போது வலக்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இயல்பிலேயே கிடைக்கும் அவே ஆங்கிளும், கொஞ்சம் ஸ்விங் இருந்தால் கூட கணிக்க முடியாத வகையில் பந்தை பேட்ஸ்மேனின் உடம்புக்குள் திருப்பும் திறனும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களின் பெரும்பலம்.

உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் எப்போதுமே இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றனர். 2019 ஓடிஐ உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்கே எடுத்திருந்தார். 2015 உலகக்கோப்பையில் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் என இரண்டு இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 22 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களாக இருந்தனர். 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார்.

டி20 உலகக்கோப்பை என்று எடுத்துக் கொண்டால் கூட, 2007 இல் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற போது இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது ஆர்.பி.சிங்கும் இர்ஃபான் பதானுமே. இருவருமே இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்.

உலகக்கோப்பைகளை வெல்வதில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு என்ன என்பதை இதன்மூலம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், சமீபமாக நடந்து முடிந்த உலகக்கோப்பைகளில் இந்திய அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருக்கவே இல்லை. 2022 நவம்பரில் டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 இல் ஓடிஐ உலகக்கோப்பைகளில் இந்திய அணி ஆடவிருக்கிறது. அதற்கு முன்பாக நல்ல இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டிய தேவை இந்திய அணிக்கு இருக்கிறது.

டி20 உலகக்கோப்பைக்கு பிறகு நடந்த நியுசிலாந்து தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க தொடர் போன்றவற்றில் இந்திய அணியில் ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கூட இல்லை. அந்த டி20 உலகக்கோப்பை தோல்வியை மனதில் வைத்து உடனடியாக அடுத்து நடந்த நியுசிலாந்து தொடரிலேயே ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரையாவது அணிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். சில மாதங்களை வீணடித்துவிட்டார்கள்.

ஒன்னும் பிரச்சனையில்லை. இந்த சீசனில் மட்டும் ஒரு 9 இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இதுவரை போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். பிரதீப் சங்வான், மோஷின் கான், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹமது, நடராஜன், சேத்தன் சர்க்காரியா, யாஷ் தயாள், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் சௌத்ரி என இந்த 9 இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுமே அந்தந்த அணிகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றனர். பஞ்சாப் அணிக்காக ஆடும் அர்ஷ்தீப் சிங் மிரட்டலாக வீசுகிறார். விக்கெட்டுகள் எடுக்காவிடிலும் எக்கனாமிக்கலாக வீசி அதிக தாக்த்தை உண்டாக்குகிறார். இந்த சீசனில் டெத் ஓவர்களில் குறைந்த எக்கானமி வைத்திருப்பவர் இவர்தான். இந்த சீசனிலேயே குறைந்த சிக்சர்களை கொடுத்திருப்பவரும் இவரே. தமிழக வீரரான நடராஜன் காயங்களிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பழைய ஃபார்முக்கே திரும்பி அசத்தி வருகிறார். சேத்தன் சர்க்காரிய டெத் ஓவர்களில் மட்டுமல்ல பவர்ப்ளேயிலும் பந்தை நன்றாக திருப்பக்கூடியவர். மோஷின் கான் லக்னோ அணியில் நம்பி எடுக்கப்பட்டதற்கான பலனை அவர்களுக்கு வழங்கி வருகிறார். சென்னை அணிக்காக ஆடிவரும் முகேஷ் சௌத்ரியும் பவர்ப்ளேக்களில் நல்ல விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக இந்த 9 பேரில் ஒரு நான்கைந்து பேர் மிகச்சிறப்பாகவே வீசுகிறார்கள். அவர்களில் வேண்டியோரை உடனடியாக அணியில் எடுத்து பட்டை தீட்ட வேண்டும். உலகக்கோப்பையை வெல்வதில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு அதிகம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. இன்னும் காலதாமதம் செய்து கொண்டே இருக்காமல் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் தேர்வு செய்து நல்ல வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

2022 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இந்த 9 பேரில் ஃபில்டர் செய்யப்பட்ட நான்கைந்து பேரில் ஒருவராவது இந்தியாவின் துருப்புச்சீட்டாக இடம்பெற வேண்டும்.

banner

Related Stories

Related Stories