விளையாட்டு

IPL-ல் கிளம்பும் WIDE சர்ச்சை.. தாக்கம் ஏற்படுத்தும் தவறான முடிவுகள்; தடுமாறும் அம்பயர்கள்!

முக்கியமான கட்டங்களில் நடுவர்கள் வழங்கும் விவாதத்திற்குரிய முடிவுகளால் வீரர்களும் அணி நிர்வாகங்களும் அதிருப்தியடைய தொடங்கியிருக்கின்றனர்.

IPL-ல் கிளம்பும் WIDE சர்ச்சை..  தாக்கம் ஏற்படுத்தும் தவறான முடிவுகள்; தடுமாறும் அம்பயர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

தாக்கம் ஏற்படுத்தும் தவறான முடிவுகள்; தடுமாறும் அம்பயர்கள்!

நடப்பு ஐ.பி.எல் சீசனில் கள நடுவர்கள் வழங்கும் முடிவுகள் சர்ச்சையாக தொடங்கியுள்ளன. சில போட்டிகளில் முக்கியமான கட்டங்களில் நடுவர்கள் வழங்கும் விவாதத்திற்குரிய முடிவுகளால் வீரர்களும் அணி நிர்வாகங்களும் அதிருப்தியடைய தொடங்கியிருக்கின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் கொல்கத்தா சேஸிங் செய்த போது பரபரப்பான 19 வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசியிருந்தார். இந்த ஓவரில் 3 ஒயிடுகளை பிரசித் கிருஷ்ணா வீசியிருந்தார். இந்த 3 ஒயிடுகள் மூலம் கொல்கத்தா அணிக்கு 5 ரன்கள் கிடைத்திருந்தது. ஆனால், இந்த 3 ஒயிடுகள் வழங்கப்பட்ட விதத்திலுமே ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனுக்கு உடன்பாடே இல்லை.

ஸ்ட்ரைக்கில் நின்ற ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அதிக தூரம் நகர்ந்து வர பிரசித் கிருஷ்ணா அவர்களை பின் தொடர்ந்து தள்ளி வீசிய பந்துகளுக்கும் அம்பயர் ஒயிடு கொடுத்திருந்தார். பொதுவாக பேட்ஸ்மேன்கள் ரொம்ப தூரம் நகர்ந்து வந்து ஆடினால் ஒயிடு கொடுக்கப்படமாட்டாது. ஆனால், நேற்று ஒயிடு கொடுக்கப்பட்டது. பௌலர்கள் பிரசித் கிருஷ்ணா, கேப்டன் சஞ்சு சாம்சன் உட்பட அத்தனை பேருமே அதிருப்தி அடைந்திருந்தனர். பிரசித் கிருஷ்ணா அம்பயரிடம் நீண்ட விளக்கம் கேட்டார். சஞ்சு சாம்சன் ஒயிடுக்கே ரிவியூவ் கேட்டு கொஞ்சம் கூடுதலாகவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

பெங்களூரு vs லக்னோ போட்டி ஒன்றிலும் இதே மாதிரியான ஒயிடு சர்ச்சை எழுந்தது. அதிலும் ஆட்டத்தின் முக்கியமான கடைசிக்கட்டத்தில் ஸ்டாய்னிஸூக்கு ஹேசல்வுட் வீசிய பந்துகள் சர்ச்சையானது. ஹேசல்வுட் ஒயிடாக வீச ஸ்டாய்னிஸ் நகர்ந்து வந்து ஆட முயன்றிருப்பார். பந்து ஒயிடு கோட்டிற்கு வெளியேதான் சென்றிருக்கும். ரிங்கு சிங்க்கும் ராணாவும் ஆடிய போது வழங்கிய ஒயிடு முடிவுகளை அடிப்படையாக வைத்து பார்த்தால் ஸ்டாய்னிஸ் ஆடிய போதும் ஒயிடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அங்கே அப்படி வழங்கப்படவில்லை. ஸ்டாய்னிஸ் இந்த முடிவில் அதிருப்தியடைந்திருப்பார். அடுத்த பந்தில் இன்னும் கூடுதலாக வெளியே வந்து ஆடி விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

டெல்லியும் ராஜஸ்தானும் மோதிய ஒரு போட்டியிலும் பரபரப்பான கடைசிக்கட்டத்தில் அம்பயரின் முடிவு சர்ச்சையானது. ரோவன் பவல் கடைசி ஓவரில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது ஒபெட் மெக்காய் ஒரு ஃபுல் டாஸை வீச அதில் பவல் சிக்சர் அடித்திருப்பார். ஆனால், ஒட்டுமொத்த டெல்லி அணியுமே இந்த முடிவில் அதிருப்தியடைந்தது. அந்த ஃபுல் டாஸ் நோபாலாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது மூன்றாவது நடுவருக்கு முடிவு சென்றிருக்க வேண்டும் என நினைத்தனர். டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் களத்திலிருந்த பேட்ஸ்மேன்களை ஆட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியே வருமாறு அழைத்தார். மைதானமே பரபரப்பானது.

பின்னர் ஷேன் வாட்சன் தலையிட்டு ரிஷப் பண்ட்டை அமைதிப்படுத்தியிருந்தார். போட்டி முடிந்த பிறகு பேசிய ரிஷப் பண்ட், 'நாங்கள் செய்தது தவறுதான். அதேநேரத்தில் அவர்கள் செய்ததும் தவறுதான்' அம்பயரின் விவாதத்திற்குரிய முடிவை சுட்டிக்காட்டி பேசியிருப்பார். இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டும்தான். இதைத்தாண்டி இன்னும் பல முடிவுகள் ஆட்டத்தின் பல்வேறு கட்டங்களில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அம்பயர்கள் வழங்கும் முடிவுகள் பற்றி விவாதிக்க வேண்டும். அவர்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆனால், அது ரிஷப் பண்ட் செய்ததை போல ஒரு அடாவடித்தனத்தோடு இல்லாமல் ஆரோக்யமானதாக இருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories