விளையாட்டு

#IPL2022 : தோனியை தவிர வேறு ஆப்சனே இல்லையா? - சென்னை அணியின் முடிவும் பின்னணியும்!

தோனி அடுத்த சீசனிலும் ஆடப்போகிறபட்சத்தில் அணியில் சரிவிலிருக்கும் போது அவரை வெறும் வீரராக மட்டுமே ஏன் வைத்திருக்க வேண்டும்? தோனி ஒரு ப்ராண்ட்..

#IPL2022 : தோனியை தவிர வேறு ஆப்சனே இல்லையா? - சென்னை அணியின் முடிவும் பின்னணியும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜடேஜா அந்த பதவியிலிருந்து விலகி, பழையபடியே கேப்டன் பதவியை தோனியிடமே கொடுத்திருக்கிறார். சன்ரைசர்ஸுக்கு எதிராக சென்னை இன்று ஆடப்போகும் போட்டியில் சென்னை அணியின் சார்பில் தோனிதான் டாஸ் போட வரப்போகிறார்? இந்த திடீர் முடிவு ஏன்? தோனியை தவிர சென்னை அணியில் வேறு ஆப்சனே இல்லையா?

தோனிக்கு 40 வயதை கடந்துவிட்டது. ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றுவிட்டார். உள்ளூர் போட்டிகளில் ஆடுவதே இல்லை. ஐ.பி.எல் இல் மட்டுமே தோனி ஆடி வந்தார். அதிலுமே ஒரு கட்டத்தில் ஓய்வு பெறும் முடிவை பற்றி தோனி யோசிக்க தொடங்கிவிட்டார். 2021 சீசனில் சாம்பியன் ஆனபோதே அந்த வெற்றியுடனே தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கக்கூடும். ஆனால், அந்த சீசன் கொரோனா காரணமாக துபாயில் வைத்தே நடந்திருந்தது.

அதனால்தான் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடாமக் இருந்தார். தனது கடைசி போட்டியை சென்னனை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ஆட வேண்டும் என்பதே தோனியின் விருப்பம். ஆனால், சூழல் காரணமாக அது தள்ளிக்கொண்டே போனது. இந்த சீசனிலும் சேப்பாக்கத்தில் வைத்து போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை எனும் சூழல் உருவானது.

தோனி தனது விருப்பத்திற்காக தொடர்ந்து ஆட விரும்பினாலும் சென்னை அணியில் தனது முக்கியத்துவத்தை மெது மெதுவாக குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். ஓய்வு முடிவு பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். வீரர்கள் ரீட்டெய்ன் செய்யப்பட்ட போது, தன்னை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை கொடுங்கள் என தானே முன் வந்து தோனி கூறினார். இதன் நீட்சியாகத்தான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார். ஆக, தோனி ஓய்வுக்கு தயாராகிவிட்டார். அவர் எதிர்பார்க்கும் அந்த சேப்பாக்க போட்டிக்காக மட்டுமே காத்திருக்கிறார்.

#IPL2022 : தோனியை தவிர வேறு ஆப்சனே இல்லையா? - சென்னை அணியின் முடிவும் பின்னணியும்!

இந்த சீசசின் அட்டவணை வெளியான போது லீக் போட்டிகள் நடக்கும் இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. ப்ளே ஆஃப்ஸுக்கான இடம் அறிவிக்கப்படவில்லை. சென்னை அணி ப்ளே ஆஃப்ஸுக்கு செல்வது போல் இருக்கும்பட்சத்தில் ப்ளே ஆஃப்ஸை சேப்பாக்கத்தில் நடத்துவதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால், இப்போதைய சூழலில் சென்னை அணிக்கான ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு ரொம்பவே குறைவாகத்தான் இருக்கிறது. மேலும், சமீபத்தில்தான் ப்ளே ஆஃப்ஸ் நடக்கும் இடங்களும் அறிவிக்கப்பட்டது. அதில், சென்னை சேப்ப்பாக்கம் இல்லவே இல்லை. ஆக, தோனி இந்த சீசனில் எப்படியும் சேப்பாக்கத்தில் அவர் விரும்பிய படி ஒரு போட்டியை ஆடவே போவதில்லை.

அவர் விருப்பத்திற்கு கடைசி போட்டியை சேப்பாக்கத்தில் ஆட வேண்டுமெனில், அடுத்த சீசனுக்கும் அவர் வீரராக வந்தாக வேண்டும். இந்த சமயத்தில்தான் புதிய கேப்டனான ஜடேஜாவின் தலைமையில் சென்னை தொடர் தோல்விகளையும் சந்தித்தது.

தோனி அடுத்த சீசனிலும் ஆடப்போகிறபட்சத்தில் அணியில் சரிவிலிருக்கும் போது அவரை வெறும் வீரராக மட்டுமே ஏன் வைத்திருக்க வேண்டும்? தோனி ஒரு ப்ராண்ட். அவர் இருந்து அணி தோற்றே போனாலும் அணியின் மீதான வசீகரம் குறையாது. உதாரணம் 2020 சீசனே. ஆனால், ஜடேஜா அப்படியில்லை. அவர் சொதப்பும்பட்சத்தில் அணியின் மீதான ஈர்ப்பே குறையும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் தோனியையே மீண்டும் கேப்டன் ஆக்கியிருக்கிறார்கள். அடுத்த சீசனிலும் தோனி முழுவதுமாக ஆடுவார் என்கிற உத்தரவாதத்தை பெற்ற பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கக்கூடும்.

2020 தோல்விக்கு பிறகு 2021 இல் சென்னை சாம்பியன் ஆனதை போல, இந்த சீசனின் சறுக்கலிலிருந்து மீண்டு அடுத்த சீசனில் அணியை சாம்பியன் ஆக்கிவிட்டு தோனி தனது ஓய்வு பற்றிய முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருக்கும். தோனி மீண்டும் கேப்டன் ஆகியிருப்பதில் ரசிகர்கள் மகிழ்ச்சியே. ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தோமேயானால் இது எந்தளவுக்கு பயனளிக்கக்கூடிய முடிவாக இருக்கும் என்பது கேள்விக்குறியே!

banner

Related Stories

Related Stories