விளையாட்டு

உம்ரான் மாலிக் - ஐ.பி.எல் 2022 தொடரை மிரட்டும் காஷ்மீர் எக்ஸ்பிரஸ்!

ஐ.பி.எல் 2022 தொடரில் வேட்ஸ்மேன்களை தனது வேகபந்து வீச்சால் மிரட்டி வருகிறார் உம்ரான் மாலிக்.

உம்ரான் மாலிக் - ஐ.பி.எல் 2022 தொடரை மிரட்டும் காஷ்மீர் எக்ஸ்பிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சம்பவம் 1 :

சன்ரைசர்ஸ் Vs கொல்கத்தாவிற்கு எதிரான போட்டி அது. முக்கியமான கட்டத்தில் அந்த அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அந்த ஓவரை வீசுகிறார். ஸ்ரேயாஸுக்கு ஷார்ட் பாலுக்கான ஃபீல்ட் செட்டப் வைக்கப்படுகிறது. வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டிய 5 ஃபீல்டர்களும் ஸ்கொயருக்கு பின்னால் மட்டுமே நிற்க வைக்கப்பட்டிருந்தனர். இதை பார்த்து ஸ்ரேயாஸும் ஷார்ட் பாலுக்காக தயாராகினார்.

அவர் எதிர்பார்த்ததை போலவே நல்ல வைடாக ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரி வந்தது. ஸ்ரேயாஸால் அதை அடிக்க முடியவில்லை. அவர் பீட்டன் ஆனார். அடுத்த பந்து, இப்போதும் 5 ஃபீல்டர்களும் அங்கேயேத்தான் நிற்கின்றனர். பெவிலியனிலிருந்து மேட்ச்சை பார்த்துக்கொண்டிருந்த பந்துவீச்சு பயிற்சியாளர்கள் டேல் ஸ்டெய்னும் - முரளிதரனும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். 'இந்த பந்தை யார்க்கராக வீசுவார் என தோன்றுகிறது' என முரளிதரன் கூறுகிறார்.

வேகப்பந்துவீச்சு பயிற்சியாளரான ஸ்டெய்னோ 'யார்க்கருக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அப்படி யார்க்கர் வீசினால் ஸ்ரேயாஸ் அந்த பந்தை பௌலரின் தலைக்கு மேல் பறக்கவிடுவார்' என கூறுகிறார். ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கில் தயாராக இருக்கிறார். பௌலர் ஓடி வருகிறார். அதே ஃபீல்ட் செட்டப் அப்படியே இருக்கிறது.

ஷார்ட் பாலா....யார்க்கரா...யார்க்கரா...ஷார்ட் பாலா? பௌலரின் கையிலிருந்து பந்து ரிலீஸ் ஆகிறது. 150+ கி.மீ வேகத்தில் யார்க்கர் விழுகிறது. ஸ்டெய்ன் சொன்னதை போல ஸ்ரேயாஸ் அதை பௌலரின் தலைக்கு மேலேயே அடித்துவிட்டாரா? இல்லவே இல்லை. ஸ்ரேயாஸ் அந்த பந்தை தொடக்கூட முடியவில்லை. சீறிக்கொண்டு வந்த பந்து ஸ்டம்புகளை சிதறடித்தது. ஒட்டு மைதானமும் ஆராவாரத்தில் அதிர்ந்தது. தான் கணித்த விஷயம் தவறான போதும் ஸ்டெய்ன் துள்ளிக்குதித்தார்.

உம்ரான் மாலிக் - ஐ.பி.எல் 2022 தொடரை மிரட்டும் காஷ்மீர் எக்ஸ்பிரஸ்!

சம்பவம் 2:

அதே எதிரணி. அதே போட்டி. இப்போது எதிர்திசையில் ஸ்ரேயாஸை விட இன்னும் அபாயமான ரஸல் நிற்கிறார். அந்த வேகப்பந்து வீச்சாளர் கைக்கு மீண்டும் பந்து செல்கிறது. இவர்தான் ஐந்தாவது பௌலர் என்பதால் இவரை அடித்து வெளுக்க ரஸல் தயாராகிறார். குறைந்தபட்சம் ஒரு 20 ரன்களையாவது இந்த ஓவரில் தேற்றிவிட வேண்டும் என்பது ரஸலின் எண்ணம். ஆனால், நடந்ததோ வேறு. இந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே வந்தது. அந்த பந்துவீச்சாளர் வீசிய 6 பந்துகளில் ஒரே ஒரு பந்தில் மட்டுமே ரஸலால் ஸ்கோர் செய்யவே முடிந்தது. அதுவும் ஓடிதான் ரன் எடுக்க முடிந்தது. மற்ற 5 பந்துகளுமே டாட். பௌலர் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை எதிர்கொள்ள முடியாமல் ரஸல் க்ரீஸுக்குள் தட்டுதடுமாறினார். ஆஜானுபாகுவாக ஒற்றை ஆளாக மைதானத்தை தாண்டி சிக்சர்களை பறக்கவிடும் ரஸலுக்கு இந்த ஓவரில் பேட்டில் பந்து படுவதே பெரிய சாதனையாக தெரிந்தது.

சம்பவம் 3:

வேறு போட்டி. வேறு அணி. வேறு பேட்டர்கள். ஆனால், எதிரில் நின்றது அதே வேகப்புயல். பஞ்சாபிற்கு எதிரான அந்த போட்டியின் கடைசி மற்றும் 20 வது ஓவர் அது. அத்தனை சக்திகளையும் திரட்டி முழுபலத்தோடு ஓங்கி அடிக்க பஞ்சாப் பேட்டர்கள் தயாராக இருந்தனர். ஆனால், மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். ஸ்ரேயாஸை போல, ரஸலை போல பஞ்சாப் பேட்ஸ்மேன்களும் ஏமாந்து போயினர். அந்த ஒரே ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. ஒரு ரன் கூட கொடுக்கப்படவில்லை. அந்த ஓவர் முழுவதுமாக மெய்டன் ஆனது. சன்ரைசர்ஸ் மீண்டும் பழைய கம்பீரத்தோடு மீண்டெழுந்தது.

உம்ரான் மாலிக் - ஐ.பி.எல் 2022 தொடரை மிரட்டும் காஷ்மீர் எக்ஸ்பிரஸ்!

இந்த அத்தனை சம்பவங்களையும் நிகழ்த்திய அந்த ஒரு பௌலர், உம்ரான் மாலிக். வெறும் 22 வயதே ஆன இளைஞன். காஷ்மீரின் பனிப்படலத்திலிருந்து புறப்பட்டு நெருப்பாக தகித்துக் கொண்டிருக்கிறார். வீசும் பெரும்பாலான பந்துகள் 150 கி.மீ வேகத்திற்கும் அதிகமானவே. கண்ணிமைக்கும் வேகத்தில் காற்றை கிழ்த்துக் கொண்டு பேட்ஸ்மேன்களை தாண்டி கீப்பரின் கைகளுக்குள் இடியாக மோதி விழுகின்றன. தொடக்க போட்டிகளில் இவரிடம் வேகம் மட்டும்தான் இருக்கிறது. விவேகம் இல்லை என விமர்சிக்கப்பட்டார்.

அதற்கேற்ற வகையில் உம்ரானும் ரன்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தார். ஆனால், வைரம் கூட தீட்ட தீட்டதான் பளிச்சிடும் இல்லையா? உம்ரான் மாலிக்கும் அப்படித்தாம். ஸ்டெய்னால் பட்டை தீட்டப்பட்டார். ஒவ்வொரு போட்டியிலுமே உம்ரான் மாலிக்கின் பெர்ஃபார்மென்ஸ் மெருகேறிக் கொண்டே சென்றது. விவேகம் இல்லை என கூறிவர்களுக்கான பதிலடியாக ஸ்ரேயாஸுக்கு எதிரான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டினார். ரன்களை வாரி வழங்குகிறார் என்பதற்கான பதிலடியாக ரஸலுக்கு எதிரான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டினார். அபாயகரமான பௌலர் என்பதற்கான சாட்சிதான் பஞ்சாபிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவம்.

'Fastest delivery of the match' விருதை மட்டுமே வஞ்சப்புகழ்ச்சியாக வாங்கிக்கொண்டிருந்த உம்ரான் மாலிக் இப்போது 'Man of the Match' விருதை வெல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். இதுவே மிகப்பெரிய சம்பவம்தான். உம்ரான் மாலிக்கின் சம்பவங்கள் இனியும் தொடரும்!

banner

Related Stories

Related Stories