விளையாட்டு

அடுத்தடுத்து வெற்றி பெறும் பெங்களூரு அணி.. ’ஈசாலா கப்’ இம்முறை நிஜமாகுமா?

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்தடுத்து வெற்றி பெறும் பெங்களூரு அணி..  ’ஈசாலா கப்’ இம்முறை நிஜமாகுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு டூப்ளெஸ்சிஸும் ஹேசல்வுட்டும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தனர்.

பெங்களூரு அணியே முதலில் பேட் செய்திருந்தது. ஆனால், அந்த அணிக்கி எதிர்பார்த்த நல்ல தொடக்கம் கிடைக்கவே இல்லை. இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே சமீராவின் பந்தில் அனுஜ் ராவத்தும் விராட் கோலியும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். விராட் கோலி இந்த சீசனில் இன்னமுமே ஒரு நல்ல பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை. அந்த ஏமாற்றம் இந்த போட்டியிலும் தொடர்ந்திருந்தது. எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து டக் அவுட் ஆகியிருந்தார். சமீரா வீசீய பந்து கொஞ்சம் அதிகமாகவே பவுன்ஸ் ஆகி வர அதை பாய்ண்ட் ஃபீல்டர் இருந்த போதும் அந்த திசையிலேயே தட்டிவிட முயன்றார். ஆனால், அது சரியாக அதி அந்த பாயிண்ட் ஃபீல்டரிடமே கேட்ச் ஆனது.

இந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு பிறகு, நம்பர் 4 இல் உள்ளே வந்த மேக்ஸ்வெல்லும் பவர்ப்ளேயை முழுவதுமாக பயன்படுத்த எண்ணி அதிரடியில் இறங்கினார். சில பவுண்டரிக்களையும் அடித்து வெளுத்தார். ஆனால், இவருமே நீண்ட நேரம் நிற்கவில்லை. க்ரூணால் பாண்ட்யாவின் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று ஹோல்டரால் அசாத்தியமாக கேட்ச் பிடிக்கப்பட்டார்.

அடுத்தடுத்து வெற்றி பெறும் பெங்களூரு அணி..  ’ஈசாலா கப்’ இம்முறை நிஜமாகுமா?

44 ரன்களுக்குள் பவர்ப்ளேக்குள்ளேயே பெங்களூரு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது. வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதை போல தெரிந்தது. ஆனால், அதை கேப்டன் டூப்ளெஸ்சிஸ் தடுத்து நிறுத்தினார். நின்று நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்க தொடங்கினார். இவருக்கு ஷபாஷ் அஹமதுவும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார். 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த அணி, ஷபாஷ் அஹமதுவும் டூப்ளெஸ்சிஸும் பேட்டிங் ஆடிய போது 70 ரன்களுக்கு விக்கெட்டே விடவில்லை. இந்த 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் அணியை மொத்தமாக சரிவிலிருந்து மீட்டது. ரவி பிஷ்னோய், க்ரூணால் பாண்ட்யா போன்ற ஸ்பின்னர்களை குறிவைத்து டூப்ளெஸ்சிஸ் அடித்து வெளுத்திருந்தார். பிற்பகுதியில் ஹோல்டர், ஆவேஷ்கான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் பிறுத்தெடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் சராசரியை தாண்டி, நல்ல நிலைமைக்கு முன்னேற தொடங்கியது. டூப்ளெஸ்சிஸ் 64 பந்துகளில் 96 ரன்களை எடுத்து சதத்தை தவறவிட்டிருந்தார்.

லக்னோ அணிக்கு டார்கெட் 182. ஆனால், லக்னோ அணியால் 20 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லக்னோ அணியை கட்டுப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் ஹேசல்வுட்தான். இவர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிந்தார். நான்குமே மிக முக்கியமான விக்கெட்டுகள். வீசிய முதல் ஓவரிலேயே ஓவர் தி விக்கெட்டில் வந்து குட்லெந்தில் டீகாக்கை எட்ஜாக்கி அவுட் ஆக்கினார்.

பவர்ப்ளேக்குள் அடுத்த ஓவரிலேயே மணீஷ் பாண்டேவின் விக்கெட்டையும் ஹேசல்வுட் வீழ்த்தினார். பிட்ச்சின் மூலம் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆஸ்திரேலியாவின் இந்த உயர்ந்த மனிதருக்கு ஒத்துழைக்கும் வகையில் அமைந்தது. பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியவர், பின்னர் கடைசிக்கட்டத்தில் டெத் ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் 17 வது ஓவரில் ஆயுஷ் பதோனியின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். பின் 19 வது ஓவரில் அபாயகரமான வீரரான ஸ்டாய்னிஸை வீழ்த்தியிருந்தார். டெத் ஓவர்களில் ஒயிட் அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்ப் டெலிவரிக்களை சிறப்பாக வீசியிருந்தார்.

அடுத்தடுத்து வெற்றி பெறும் பெங்களூரு அணி..  ’ஈசாலா கப்’ இம்முறை நிஜமாகுமா?

ஹேசல்வுட் கட்டுப்பாட்டை மீறி ஒயிடாக வீசிய பந்துக்கு ஸ்டாய்னிஸ் கொஞ்சம் நகர்ந்து வந்து ஷாட் ஆட முயன்றிருப்பார். இதற்கு ஒயிடு வழங்கப்பட்டிருக்காது. இது ஸ்டாய்னிஸை அதிருப்தி அடைய வைத்தது. அடுத்த பந்து ஹேசல்வுட்டின் கையிலிருந்து ரிலீஸ் ஆகும் முன்பே ஸ்டாய்னிஸ் நன்றாக நகர்ந்து வந்துவிடுவார். ஆனால், ஹேசல்வுட் இந்த முறை கொஞ்சம் உள்பக்கம் தள்ளி வீசவே, ஸ்டாய்னிஸின் பேடில் பந்து பட்டு ஸ்டம்புகள் தகர்க்கப்பட்டிருக்கும். ஸ்டாய்னிஸால் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஸ்டாய்னிஸ் Vs ஹேசல்வுட் என்றமைந்த இந்த மோதல் சுவாரஸ்யமான விஷயமாக அமைந்தது. ஹர்சல் படேல் கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியதும் ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

பெங்களூரு அணி தொடர்ச்சியாக வென்று கொண்டே இருக்கிறது. ரசிகர்களின் கனவுப்படி இந்த முறை ஈசாலா கப் நமதே நிஜமாவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories