விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் ஆறாவது தோல்வி.. 100-வது போட்டியில் சதம் அடித்து அசத்திய ராகுல்! #IPL2022

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியிலும் தோற்று மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஆறாவது தோல்வி.. 100-வது போட்டியில் சதம் அடித்து அசத்திய ராகுல்! #IPL2022
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022 ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து ஆறாவது தோவியைச் சந்தித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். விளையாடிய 6 போட்டிகளிலும் தோற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி.

2022 ஐ.பி.எல் தொடருக்கு முன்பு மெகா ஏலம் நடந்தது. அந்த ஏலத்தினால் பல முன்னணி வீரர்களை இழந்தது மும்பை இந்தியன்ஸ். கடந்த ஆண்டு அந்த அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, குவின்டன் டி காக், டிரென்ட் போல்ட், ராகுல் சஹார் போன்ற முன்னணி வீரர்களை அவர்களால் எடுக்க முடியவில்லை. இஷன் கிஷனை வாங்கவேண்டுமென்று தீர்க்கமாக முடிவெடுத்திருந்ததால், பல வீரர்களைத் தியாகம் செய்யவேண்டியிருந்தது. அதனால், ஏலத்துக்குப் பின்பே கொஞ்சம் பலவீனமான அணியாகத்தான் கருதப்பட்டது மும்பை இந்தியன்ஸ்.

பேட்டிங் ஓரளவு சுமாராக இருந்தாலும், பௌலிங் மிகவும் பலவீனமாகக் காட்சியளித்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு ஆடமாட்டார் என்பது மேலும் பின்னடைவாக இருந்தது. இருந்தாலும், அந்த அணி இவ்வளவு மோசமாக விளையாடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 23 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், பேட் கம்மின்ஸ் அதிரடி அரைசதம் அடிக்க ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தது மும்பை இந்தியன்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் ஆறாவது தோல்வி.. 100-வது போட்டியில் சதம் அடித்து அசத்திய ராகுல்! #IPL2022

நான்காவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக மும்பையை வீழ்த்தியது. அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 198 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணியால் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இப்படி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்ற நிலையில், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனில் முதல் முறையாக இந்தப் போட்டியில்தான் 4 வெளிநாட்டு வீரர்களை களமிறக்கியது அந்த அணி. டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா பௌலிங் தேர்வு செய்தார்.

தொடக்கத்திலிருந்தே லக்னோ பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதிரடியாக ஆடிய குவின்டன் டி காக், 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு போட்டிகள் கழித்து கம்பேக் கொடுத்த மனிஷ் பாண்டே சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தாலும், கேப்டன் கெ.எல்.ராகுல் மிகச் சிறப்பாக ஆடினார்.

தன்னுடைய 100-வது ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் ராகுல், 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார். இதில் 9 பௌண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ். மும்பை தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மும்பை இந்தியன்ஸ் ஆறாவது தோல்வி.. 100-வது போட்டியில் சதம் அடித்து அசத்திய ராகுல்! #IPL2022

200 ரன்களை சேஸ் செய்த மும்பைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரோஹித். அதிரடியாக விளையாடிய இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸ் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி அவுட் ஆனார். 3 பந்துகள் கழித்து இஷன் கிஷனும் ஆட்டமிழக்க, மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது மும்பை இந்தியன்ஸ்.

சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் ஒரு நல்ல கூட்டணியை உருவாக்கினர். ஹோல்டர் பந்துவீச்சில் திலக்கும், பிஷ்னாய் பந்துவீச்சில் சூர்யாவும் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். அதன்பிறகு பொல்லார்ட் கொஞ்சம் போராடியும் அவரால் அணியை வெற்றி பெறவைக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களே எடுத்து, 18 ரன்கள் வித்தியாசாத்தில் தோல்வியடைந்தது. லக்னோ வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 6 போட்டிகளில் விளையாடியிருக்கும் லக்னோ, 4 போட்டிகளை வென்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories