விளையாட்டு

தீபக் சஹார் விலகுவதாக அறிவிப்பு.. CSK-வுக்கு மேலும் ஒரு தலைவலி - சென்னை அணியின் அடுத்த திட்டம் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய தூண்களுள் ஒருவராக இருந்த தீபக் சஹார் காயம் காரணமாக முழுமையாக இந்த சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

தீபக் சஹார் விலகுவதாக அறிவிப்பு.. CSK-வுக்கு மேலும் ஒரு தலைவலி - சென்னை அணியின் அடுத்த திட்டம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவர் தீபக் சஹார். கடந்த 4 சீசன்களாக சென்னை அணியின் முக்கிய தூண்களுள் ஒருவராக இருந்தார். இந்த சீசனிலும் சென்னை அணிக்கு இவரின் பங்களிப்பு பெரிதாக தேவைப்பட்டது. ஆனால், தீபக் சஹார் காயம் காரணமாக முழுமையாக இந்த சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சுமாராக பெர்ஃபார்ம் செய்து வரும் சென்னை அணிக்கு இது மேலும் ஒரு தலைவலியாக மாறியிருக்கிறது.

தீபக் சஹார் கடந்த 4 சீசன்கள் 58 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதில் பெரும்பாலான விக்கெட்டுகள் பவர்ப்ளேயில் வீழ்த்தப்பட்டவை. பௌலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலுமே சமீபமாக மிகச்சிறப்பாக ஆடி வந்தார். இதனாலயே சென்னை அணி இவரை அதிகபட்சமாக 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியது. ஆனால், இந்த ஏலமெல்லாம் முடிந்த பிறகுதான் சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காயம் காரணமாக தீபக் சஹார் பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் ஓய்வில் இருந்தார். சென்னை அணியின் வீரர்கள் மும்பையில் பயிற்சியை தொடங்கிய பிறகும் தீபக் சஹார் மட்டும் அணியோடு இணையாமல் இருந்தார். சீசன் தொடங்கி இரண்டு வாரங்களில் அவர் அணியோடு இணைந்துவிடுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்போது மீண்டும் காயம் ஏற்பட்டு குணமடையாததால் இந்த சீசனிலிருந்தே முழுமையாக விலகுவதாக அறிவித்திருக்கிறார். சென்னை அணி ஆடியிருக்கும் முதல் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்திருந்தது. அந்த தோல்விகளுக்கு தீபக் சஹார் அணியில் இல்லாததும் ஒரு காரணமாக அமைந்தது. ஏனெனில், தீபக் சஹார் ஒரு பவர்ப்ளே ஸ்பெசலிஸ். நியுபாலில் பந்தை நன்றாக மூவ் செய்து தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுப்பார் அல்லது டைட்டாக வீசி மற்ற பௌலர்களுக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பார்.

இப்படிப்பட்ட ஒரு பௌலர் இல்லாமல் சென்னை அணி பவர்ப்ளேயில் மொத்தமாக திணறியது. முதல் 4 போட்டிகளில் பவர்ப்ளேயில் சென்னை அணி எடுத்திருந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை வெறும் 2 மட்டும்தான். அதிலும் ஒன்று ரன் அவுட் மூலம் வந்தது. இன்னொன்று மட்டுமே பௌலரால் வீழ்த்தப்பட்டது. பவர்ப்ளேயில் எதிரணியிம் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த முடியாதது சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. பெங்களூருவிற்கு எதிரான 5 வது போட்டியில் ஸ்பின்னர் மஹீஸ் தீக்சனா இந்த குறையை ஓரளவுக்கு தீர்த்து வைத்திருந்தார். ஆனாலும், ஒரு இந்திய பௌலரால் அதை செய்ய முடியவில்லை என்பது சென்னைக்கு பிரச்சனையாகவே இருக்கிறது. முகேஷ் சௌத்ரி ரொம்பவே சுமாராகவே வீசிக்கொண்டிருக்கிறார்.

இரண்டு வாரத்தில் தீபக் சஹார் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நினைத்திருந்த சூழலில் அவரின் விலகல் செய்தி அதிர்ச்சியளித்திருக்கிறது. தீபக் சஹாருக்கு பதில் சென்னை அணி வேறு வீரர்கள் யாரையாவது பதில் வீரராக ஒப்பந்தம் செய்து முயன்று பார்க்குமா? அல்லது பென்ச்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories