விளையாட்டு

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனியின் முடிவு - புதிய கேப்டன் ஜடேஜா.. ஆனால்..?

சென்னை அணியின் கேப்டனாக 12 ஆண்டுகள் இருந்துவந்த தோனி தற்போது அந்த பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனியின் முடிவு - புதிய கேப்டன் ஜடேஜா.. ஆனால்..?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் பல்வேறு சுவாரசியங்களுடன் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளார் தோனி.

சென்னை அணியின் கேப்டனாக 12 ஆண்டுகள் இருந்துவந்த தோனி தற்போது அந்த பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். ஜடேஜாவின் ஐ.பி.எல் பயணத்தின் சாதனை என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10 அணிகள் பங்கேற்கும் 15வது ஐ.பி.எல் சீசன் கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. எப்போதுமே ரசிகர்களிடன் தனக்கென தனி இடத்தை பிடித்திரும் சென்னை அணி, இம்முறை ரசிகர்களுக்கு எதிர்பாரா அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

சி.எஸ்.கே அணியின் கேப்டனாக ரவிந்திர ஜடேஜா செயல்படுவார் எனவும், தோனி தன்னுடைய கேப்டன் பதவியை கொடுத்ததாகவும் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.

தொடருக்காக பயிற்சியை முடித்தபின் அணியின் குழு சந்திப்பில் தோனி இதனை அறிவித்தார் எனவும், நடப்பு சீசனிலிருந்து ஜடேஜா சென்னை அணிக்கு கேப்டனாக செயல்படுவார் எனவும் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, 12 சீசனில் 4 கோப்பைகளை வென்றுள்ளார்.

ஆல்ரவுண்டர் ஜடேஜாவை பொறுத்தவரை சி.எஸ்.கே அணிக்காக 2012ஆம் ஆண்டு முதல் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இக்கட்டான நேரங்களில் அணிக்கு தனக்கான பங்களிப்பை ஜடேஜா கொடுக்க தவறியதில்லை எனவும், இதுவே, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜா இந்த பொறுப்பை ஏற்க சரியான தருணம் என தோனி கூறியதாகவும் அணி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் கோலி விலகி வீரராக களமிறங்குவேன் என கூறிய நிலையில், தோனியும் கேப்டன் பதவியை விட்டு வீரராக சிஎஸ்கே அணிக்கு களமிறங்க உள்ளார்.

சி.எஸ்.கே அணி 16 கோடிக்கு ஜடேஜாவை தக்கவைத்தது. 2012 முதல் அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா இதுவரை 200 போட்டிகளில் விளையாடி 2,386 ரன்களும், 127 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

என்னதான், ஜடேஜா அணி கேப்டனாக பொறுப்பேற்றாலும், தோனியை போல் இருக்காது என்றும், சி.எஸ்.கே, தோனி என்பது கேப்டன் என்பதை தாண்டி உணர்வு என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒன்றிப்போனதாக உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என தோனி கூறியிருந்தார். களத்தில் தோனி இனிமேல் வீரராகவே களமிறங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் கண்ணும் இமைக்காமல் தோனியை பார்த்துக்கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதே சமயம், ஜடேஜாவை பின் இருந்து வழிநடத்துவது, முக்கிய முடிவுகள் எடுப்பது, களத்தில் அனுபவங்களை வெளிப்படுத்துவது என தோனிதான் இருப்பார் எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கேப்டனாக இல்லையென்றாலும், களத்தில் அவர் இருந்தால் போதும், அதுதான் எங்களுக்கான கொண்டாட்டம் என எண்ணும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, ஜடேஜாவின் வழி அணி சென்றாலும், தோனியின் வழிநடப்பில் அணி மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே.

banner

Related Stories

Related Stories