விளையாட்டு

IPL2022 : அனுபவமா.. இளமையா.. எக்கச்சக்க வாய்ப்புகள்; CSK அணியின் ஓப்பனராக தோனி தேர்வு செய்யப்போவது யார்?

சென்னை அணி தங்களுடைய அணியின் ஓப்பனராக யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தோனி டிக் அடிக்கப்போகும் அந்த ஒரு வீரர் யார்?

IPL2022 : அனுபவமா.. இளமையா.. எக்கச்சக்க வாய்ப்புகள்; CSK அணியின் ஓப்பனராக தோனி தேர்வு செய்யப்போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022 ஐ.பி.எல் சீசனுக்கு முன்பான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகள் குழு இந்த ஏலத்திற்காக முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி தங்களுடைய அணியின் ஓப்பனராக யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தோனி டிக் அடிக்கப்போகும் அந்த ஒரு வீரர் யார்?

சென்னை ஐ.பி.எல் தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு அந்த அணிக்காக ஆடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். பார்த்திவ் படேல் - மேத்யூ ஹைடன், முரளி விஜய் - ஹைடன், மைக் ஹஸ்சி - முரளி விஜய், ஸ்மித் - மெக்கல்லம், வாட்சன் - அம்பத்தி ராயுடு, வாட்சன் - டூ ப்ளெஸ்சிஸ் என ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணியின் ஓப்பனிங் கூட்டணிகள் அனைத்துமே ஹிட் கூட்டணிகளே.

சென்னை அணி நான்கு முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றதில் இவர்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது. குறிப்பாக, கடைசியாக கடந்த சீசனில் ஓப்பனர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் - டூ ப்ளெஸ்சிஸ் இணை பல ரெக்கார்டுகளை உடைத்திருந்தது. 635 ரன்கள் எடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார்.

அவரை விட வெறும் 2 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்து 633 ரன்களோடு டூப்ளெஸ்சிஸ் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். சென்னை அணியின் பெரும்பாலான ரன்களை இவர்களை அடித்திருந்தனர். வெற்றி கோப்பையையுமே சென்னை அணி இவர்களால்தான் வென்றிருந்தது.

ஆக, குழப்பமே இல்லாமல் தரமான ஓப்பனிங் கூட்டணியை உருவாக்குவது சென்னையின் வெற்றி ரகசியங்களுள் ஒன்றாக இருக்கிறது. அதன்படி பார்த்தால் அடுத்தடுத்த சீசன்களுக்கான ஓப்பனர்களாக தோனி யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார்? 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்ற சூழலில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருத்துராஜ் ஆகிய வீரர்களை சென்னை தக்கவைத்திருக்கிறது.

IPL2022 : அனுபவமா.. இளமையா.. எக்கச்சக்க வாய்ப்புகள்; CSK அணியின் ஓப்பனராக தோனி தேர்வு செய்யப்போவது யார்?

ருத்துராஜ் தக்கவைக்கப்பட்டிருப்பதால் ஓப்பனிங்கில் இருக்கும் இரண்டு இடங்களில் ஒரு இடம் உறுதியாக அவருக்குதான். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்கும் வீரர் யார்? அவரைத்தான் சென்னை அணி ஏலத்தில் தேர்ந்தெடுத்தாக வேண்டும். சென்னை அணிக்கான வாய்ப்புகள் என்னென்ன?

கடந்த சீசனில் ருத்துராஜுடன் ஓப்பனிங் இறங்கி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்த டூப்ளெஸ்சிஸையே சென்னை அணி மீண்டும் ஏலத்தில் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், டூப்ளெஸ்சிஸின் வயது இதற்கு ஒரு தடையாக இருக்கிறது. அவருக்கு 37 வயதாகிறது. அவரை ஏலத்தில் எடுத்தால் அடுத்த மூன்றாண்டுகளுக்கும் அவர் ஆடுவாரா என்பதும் ஆடினாலும் இதே ஃபார்மோடு இருப்பாரா என்பதும் சந்தேகம்.

2018 மெகா ஏலத்தை போன்று சென்னை அணி இப்போது யோசிக்க முடியாது. அந்த சமயத்தில் சென்னை அணி தடையிலிருந்து மீண்டு வந்த காலம் என்பதால் உடனடி வெற்றி தேவைப்பட்டதால், அதை பெற்றுக்கொடுக்கக்கூடிய அனுபவ வீரர்களை வயதை பொருட்படுத்தாமல் எடுத்திருந்தார்கள். ஆனால், இப்போது சென்னைக்கு உடனடி வெற்றி தேவை இல்லை. தோனிக்கு பிறகும் நின்று வேரூன்றி சென்னையின் பெருமையை கட்டிக்காக்கும் ஒரு அணியே தேவை.

அதற்கு நீண்ட கால அடிப்படையிலேயே சென்னை யோசிக்கக்கூடும். அதனாலயே டூப்ளெஸ்சிஸின் வயதை முன் வைத்து அவரை தேர்ந்தெடுக்காமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்த வாய்ப்பாக டேவிட் வார்னரை பார்க்கலாம். இன்றும் சுறுசுறுப்பாக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேன். ஒரு கேப்டன் மெட்டீரியலும் கூட.

ருத்துராஜோடு ஓப்பனிங் இறங்கினால் இந்த கூட்டணி பட்டையை கிளப்பும். ஆனால், டேவிட் வார்னரை ஏலத்தில் எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. அத்தனை அணிகளும் அவருக்காக முட்டி மோதும். இப்படியான பெரிய எதிர்பார்ப்புமிக்க வீரர்களுக்கு சென்னை அணி அரிதாகவே கையை உயர்த்தும்.

வார்னரும் இல்லை டூப்ளெஸ்சிஸும் இல்லை என்றால் இந்திய வீரரான ஷிகர் தவானை முயன்று பார்க்க வாய்ப்பிருக்கிறது. 2023 உலகக்கோப்பை இந்திய அணிக்கான ரேஸில் இருப்பதால் குறைந்தபட்சமாக ஒரு 3 வருடத்திற்கு தவான் நின்று ஆடுவார். ஆனால், தொடக்கத்தில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் மற்றும் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன் எனும் சேர்க்கையைதான் சென்னை அணி பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறது. அப்படி பார்த்தால் தவானுக்கு வாய்ப்பில்லை.

இங்கிலாந்தை சேர்ந்த ஜேசன் ராய் ஒரு நல்ல தேர்வாக இருப்பார். அதிரடி ஆட்டக்காரராக சிறப்பாக ஆடுவார். தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீகிலும் நன்றாக ஆடி வருகிறார். இன்னொரு இங்கிலாந்து பேட்ஸ்மேனான பேர்ஸ்ட்டோவும் நல்ல தேர்வாகவே இருப்பார். பவர்ப்ளேயில் பேர்ஸ்ட்டோவின் அதிரடிக்கும் ருத்துராஜின் நிதானத்துக்கும் நன்றாகவே பொருந்திப்போகும். ஆனால், இவருக்கும் அதிக டிமாண்ட் இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் அனுபவ வீரர். ஆனால், ஐ.பி.எல் இல் பெரிதாக சாதித்ததில்லை. அதே ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான ஜோஸ் பிலிப்பே பிக்பேஸ் லீகில் பட்டையை கிளப்பியவர். ஐ பி.எல் இல் அவருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. தோனியின் கீழ் அந்த வாய்ப்பு கிடைத்தால் சாதிக்கக்கூடும்.

உஸ்மான் கவாஜா ரைசிங் புனே அணியில் தோனியோடு ஆடியவர். அவருமே ஒரு இடக்கை பேட்ஸ்மேனாக நல்ல தேர்வாகவே இருப்பார். இந்தியாவை சேர்ந்த ராகுல் திரிபாதி ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் இரண்டிலும் ஆடக்கூடியவர். அவரும் புனே அணியில் தோனியோடு ஆடியிருக்கிறார்.

இப்படி எக்கச்சக்க வாய்ப்புகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன் இருக்கிறது. தோனியும் சென்னை நிர்வாகமும் யாரை டிக் அடிக்கப்போகிறார்கள் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.

banner

Related Stories

Related Stories