விளையாட்டு

யுவராஜின் ரசிகர்... ஒலிம்பியனின் ‘பேரன்’ : இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் - யார் இந்த ‘ராஜ் பவா’ ?

இந்திய அணி இந்த வெற்றியை குறிப்பாக இறுதிப்போட்டி வெற்றியை பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ராஜ் பவா.

யுவராஜின் ரசிகர்... ஒலிம்பியனின் 
 ‘பேரன்’ : இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் - யார் இந்த ‘ராஜ் பவா’ ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வென்றிருக்கிறது. இது இந்திய அணியின் ஐந்தாவது உலகக்கோப்பை வெற்றியாகும். இந்திய அணி இந்த வெற்றியை குறிப்பாக இறுதிப்போட்டி வெற்றியை பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ராஜ் பவாவே. அவர்தான் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். இந்த ராஜ் பவா குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கிறது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. 189 ரன்களுக்குள் இங்கிலாந்தை இந்தியா சுருட்டியிருந்தது. இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கியதில் ராஜ் பவாவின் பங்கு அதிகமாக இருந்தது. 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குறிப்பாக, 7 வது ஓவரில் வந்து ராஜ் பவா வீசிய முதல் ஸ்பெல்லில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவர் வீசிய அந்த முதல் ஸ்பெல்தான் இங்கிலாந்தை நிலைகுலைய வைத்திருந்தது. அதேமாதிரி, பேட்டிங்கிலும் இக்கட்டான சூழலில் இறங்கி 35 ரன்களை எடுத்திருந்தார். நிஷாந்துடன் ஒரு 60+ பார்ட்னர்ஷிப்பையும் அமைத்திருந்தார். இந்த பார்ட்னர்ஷிப்பே இந்திய அணி சிரமமின்றி வெல்வதற்கு காரணமாக அமைந்தது.

இந்த போட்டி இல்லை. இந்த தொடர் முழுவதுமே ராஜ் பவா நன்றாக செயல்பட்டிருக்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அயர்லாந்துக்கு எதிராக 42 ரன்களை எடுத்திருந்தார். உகாண்டாவிற்கு எதிராக 162 ரன்களை எடுத்திருந்தார். U19 உலகக்கோப்பையில் இந்திய வீரர் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இப்போது இறுதிப்போட்டியிலும் 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தியிருக்கிறார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

யுவராஜின் ரசிகர்... ஒலிம்பியனின் 
 ‘பேரன்’ : இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் - யார் இந்த ‘ராஜ் பவா’ ?

இந்த ராஜ் பவாவின் பின்னணி சுவாரஸ்யமானது. ராஜ் பவாவின் தந்தை சுக்விந்தர் சிங் பவா இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் உலகக்கோப்பை வெற்றியாளருமான யுவராஜ் சிங்கின் பயிற்சியாளர் ஆவார். யுவராஜ் சிங் தன்னுடைய தந்தையிடம் பயிற்சி பெறுவதை பார்த்தே வளர்ந்த ராஜ் பவாவும் யுவராஜின் ரசிகராக மாறினார். யுவராஜின் ஆட்டத்தின் பாதிப்பு ராஜ் பவாவிடமும் அதிகம் வெளிப்படும். யுவராஜை போன்றே இவரும் ஒரு இடக்கை பேட்ஸ்மேன் தான். மேலும், யுவராஜின் ஜெர்சி நம்பரான 12 தான் இவருடைய நம்பரும் கூட.

ராஜ் பவாவின் தாத்தாவான தர்லோச்சன் பவா ஒரு ஒலிம்பியன். 1948 லண்டன் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தவர். பிரிட்டனுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ராஜ் பவாவின் தாத்தாவும் ஒரு கோல் அடித்திருப்பார். தலைமுறை தலைமுறையாக இந்திய விளையாட்டில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் குடும்பமாக ராஜ் பவாவின் குடும்பம் அசத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories