விளையாட்டு

“தோனியோட Finisher இடம் காலியா இருக்கு” : மனம் திறந்த ரோஹித் சர்மா!

டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து தற்போதைக்கு எதுவும் நினைக்கவில்லை. அணியை முன்னோக்கி வழிநடத்துவதே நோக்கம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

“தோனியோட Finisher இடம் காலியா இருக்கு” : மனம் திறந்த ரோஹித் சர்மா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து இப்போது எதுவும் எண்ணவில்லை என்றும், கோலிக்கு பிறகு அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதே நோக்கம் எனவும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மூலம் இந்திய அணியின் ஒருநாள், டி20 முழுநேர கேப்டனாக ரோஹித் செயல்பட இருக்கிறார். இந்தியா விளையாடும் ஆயிரமாவது ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார்.

நாளை இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரோஹித், “தென்னாப்ரிக்க தொடர் மூலம் நிறைய பாடங்களை கற்றுள்ளோம். இப்போதுள்ள அணியை மாற்றுவது குறித்து நினைக்கவில்லை.

அணியின் செயல்பாடு குறித்து அச்சப்பட தேவையில்லை, ஒரு அணியாக, சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்துவோம். எல்லா சூழ்நிலைக்கும் ஏற்றதுபோல் அணியை கட்டமைக்க வேண்டியது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. அணியில் மாற்றம் செய்யவேண்டிய தேவை எதுவும் இல்லை. சிறந்த வீரர்களை கொண்டுள்ளோம்.

டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து இப்போது எதுவும் நினைக்கவில்லை. ஒருநாள், டி20 தொடர்களில் கேப்டன் பொறுப்பில் சிறப்பாகச் செயலாற்ற நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரை வெல்லும் நோக்கமே இப்போது உள்ளது.

கொரோனா காலத்தில் பயணம் என்பது சவாலானதுதான். காயமின்றி வீரர்கள் உடல்நிலையை தொடர்வது முக்கியமானதாக அமைந்துள்ளது.

தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் ஃபினிஷர் ரோல் என்பது வெற்றிடமாகத்தான் உள்ளது. ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்றோர் சிறப்பாகச் செயல்படுகின்றனர். ஆனாலும், ஃபினிஷர் இடத்திற்கு வீரர்களை தயார் செய்யவேண்டியது அவசியம்.

முக்கிய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இஷான் கிஷான் என்னுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார்” எனத் தெரிவித்துள்ளார்.

முழுநேர கேப்டனாக ரோஹித் செயலாற்றவுள்ளது, இந்திய அணியின் ஆயிரமாவது போட்டி என இரட்டிப்பு சாதனைகளை ஒட்டுமொத்த அணியினரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நிகழ்த்துவார்களா என்ற எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர் ரசிகர்கள்.

- மீனா

banner

Related Stories

Related Stories