விளையாட்டு

#U19WorldCupFinal - முழுபலத்துடன் அசத்தும் இளைஞர்கள்.. 5வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்தும் இன்று மோதவிருக்கின்றன.

#U19WorldCupFinal - முழுபலத்துடன் அசத்தும் இளைஞர்கள்.. 5வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்தும் இன்று மோதவிருக்கின்றன. ஏற்கனவே நான்கு முறை உலகக்கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணி ஐந்தாவது முறையாக வெல்லும் முனைப்போடு களமிறங்க இருக்கிறது. 1998ஆம் ஆண்டிற்கு பிறகு உலகக்கோப்பையையே வெல்லாமல் இருக்கும் இங்கிலாந்து 23 ஆண்டுகால உலகக்கோப்பை ஏக்கத்தை தீர்க்கும் முனைப்போடு இருக்கிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளுமே இந்த தொடரில் இதுவரை ஆடிய அத்தனை போட்டிகளிலுமே வென்றிருக்கின்றனர். கடைசியாக இந்திய அணி அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணியையும் இங்கிலாந்து அணி அரையிறுதியில் ஆஃப்கானிஸ்தானையும் வீழ்த்தியிருந்தது.

இந்திய அணி இந்த தொடரில் பல தடைகளை தாண்டியிருக்கிறது. குறிப்பாக, இந்திய அணியை சேர்ந்த 7 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலிறுதிப்போட்டி வரை பலரும் ஆட முடியாமல் போயிருந்தது. முதல் போட்டிக்குப் பிறகு கடைசியாக நடந்த அரையிறுதி போட்டியிலேயே இந்திய அணி தேர்வுக்கு அத்தனை வீரர்களும் தகுதியுடன் இருந்தனர்.

ஆனால், இந்திய அணி அத்தனை போட்டிகளிலும் வென்றிருக்கிறது. ஓப்பனரான ரகுவன்சி இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக இருக்கிறார். சேக் ரஷீத், கேப்டன் யாஷ் துல் ஆகியோர் மிடில் ஆர்டரில் அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்களை வழங்கி வருகின்றனர். அரையிறுதியில் இவர்கள் இருவரின் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப்பே இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஹங்ககேகர், தினேஷ் பனா ஆகியோரும் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றனர்.

ஸ்பின்னரான விக்கி ஆஸ்ட்வால், வேகப்பந்து வீச்சாளார்கள் ஹங்ககேகர் மற்றும் ரவிக்குமார் ஆகியோரும் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். பேட்ஸ்மேன்கள் வலுவானவர்களாக இருந்தாலும் இந்திய பௌலர்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த தொடரில் இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளிலுமே எதிரணியை வெறும் 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கின்றனர்.

#U19WorldCupFinal - முழுபலத்துடன் அசத்தும் இளைஞர்கள்.. 5வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?

இங்கிலாந்து அணியும் இதுவரை ஆடியுள்ள அத்தனை போட்டிகளிலும் வென்றிருக்கின்றனர். டாம் ப்ரெஸ்ட் பேட்டிங்கிலும் பாய்டன் பந்துவீச்சிலும் அசத்தி வருகிறார்கள். அதிகமான நாக் அவுட் போட்டிகளில் குறிப்பாக இறுதிப்போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆடியதில்லை. இந்திய அணியின் நிதானமான அணுகுமுறைக்கு நேர் எதிராக இறங்கி அடிக்கும் அக்ரசிவ்வான அணுகுமுறையை கொண்டிருப்பது இங்கிலாந்திற்கு பலமாக அமையும். 1998இல் இங்கிலாந்து கடைசியாக உலகக்கோப்பையை வென்ற போது இப்போதைய அணியில் உள்ள எந்த வீரர்களும் பிறந்திருக்கக்கூட இல்லை என்பது சுவாரஸ்யமான விஷயம்.

ஒரு அணியாக முழுமையாக இந்திய அணி பெர்ஃபார்ம் செய்வதாலும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருப்பதாலும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது. கெய்ஃப், விராட் கோலி, உன்முகுந்த் சந்த், ப்ரித்திவி ஷா ஆகியோரை தொடர்ந்து யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியும் உலகக்கோப்பை கையிலேந்துமா என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

banner

Related Stories

Related Stories