விளையாட்டு

“ஒரு கேப்டன் எப்படி இருப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள் எதுவும் இல்லை” : ஹர்திக் பாண்டியா!

ஒரு அணிக்கு எப்படி கேப்டனாக இருப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் புத்தகங்கள் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் குஜராத் ஐ.பி.எல் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

“ஒரு கேப்டன் எப்படி இருப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்க  புத்தகங்கள் எதுவும் இல்லை” : ஹர்திக் பாண்டியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒரு அணிக்கு எப்படி கேப்டனாக இருப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் புத்தகங்கள் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் குஜராத் ஐ.பி.எல் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

புதிதாக ஐ.பி.எல் தொடரில் இணைந்திருக்கும் குஜராத் அணி, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. பெரிய அரங்கில் ஒரு அணிக்குத் தலைமை தாங்கிய அனுபவம் அவருக்கு இல்லாததால், பலரும் அம்முடிவை விமர்சித்தனர். இந்நிலையில், அந்த அணியைத் தலைமை தாங்குவது பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

"நான் அண்டர்-16 அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். ஒரு அணியை வழிநடத்துவதற்கு நீங்கள் கேப்டனாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பல்வேறு வகையில் ஒரு அணியை நீங்கள் வழிநடத்தலாம்" என்று கூறியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. சமீபத்தில் இந்திய அணியின் கேப்டனாக இல்லாதது பற்றி விராட் கோலியிடம் ஒரு பாட்கேஸ்டில் கேட்கப்பட்டது. அதற்கு அவரும் இப்படியான பதிலைத்தான் சொல்லியிருந்தார்.

இந்திய அணியின், ஐ.பி.எல் தொடரின் வெற்றிகரமாந கேப்டன்களாக இருந்த தோனி, கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரிடமிருந்து எந்தெந்த குணங்களை தான் தன் லீடர்ஷிப்பில் காட்ட விரும்புவதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "விராட் கோலியிடமிருந்து அவருடைய அக்ரஷனையும், வேட்கையையும் நான் எடுத்துக்கொள்ள விரும்புவேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அவருடைய எனர்ஜி நினைத்துப்பார்க்க முடியாது ஒன்று.

மஹேந்திர சிங் தோனியிடம் இருந்து அவருடைய நிதானம், அமைதியான போக்கு, எந்தவொரு தருணத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும் குணம், புதிய விஷயங்கள் என்ன கொடுக்கும் என்று சோதித்துப் பார்க்கும் முயற்சி போன்றவற்றை எடுத்துக்கொள்வேன். ரோஹித் ஷர்ம, ஒரு வீரர் என்ன செய்யவேண்டும் என்பதை அந்த வீரரிடமே விட்டுவிடுவார். அவருடைய அந்த குணத்தை நான் எடுத்துக்கொள்வேன். அவர்களிடமிருந்து நான் எடுத்துக்கொள்ளும் குணங்கள் இவைதான். இவை மிகச் சிறப்பான காம்பினேஷனாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

குஜராத் அணியின் கேப்டனாக இருப்பது, இந்திய அணிக்கான கதவுகளைத் திறந்தால், அதைத் தான் வரவேற்பதாக ஹர்திக் கூறியிருக்கிறார். "ஐ.பி.எல் தொடரில் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகச் சிறந்த தொடக்கம். ஏனெனில், இத்தொடர் பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். ஒரே மாதிரியான நெருக்கடியைக் கொடுக்கும் புதிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொடுக்கும். தேசிய அணியின் கேப்டனாவதற்கு இது சரியான படிதான். ஆனால், அதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஒருவேளை அந்த வாய்ப்பு என்னைத் தேடிவந்தால், அதை ஏற்க எப்போதும் தயாராக இருப்பேன்" என்று கூறினார் ஹர்திக்.

மேலும், குஜராத் அணியின் இந்த சீசன் எப்படியிருக்கும் என்றும் தெரிவித்தார். "குஜராத் அணிக்கு இதுவொரு புத்தம் புது தொடக்கமாக இருக்கும் என்று உளமார நம்புகிறேன். தொடக்கத்திலிருந்தே ஒரு நல்ல அணியை கட்டமைக்க முடியும். ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அதிகம் பந்துவீசாத ஹர்திக், இந்த சீசனில் தான் பந்துவீசக்கூடும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்தார். "பேட்டிங் மட்டுமே செய்யும் ஹர்திக் பாண்டியாவை விட பேட்டிங், பௌலிங் என இரண்டுமே செய்யுமே ஹர்திக் தான் சிறப்பாக இருக்கும்" என்று தான் பந்துவீச விரும்புவதை அறிவுறுத்தியிருக்கிறார் ஹர்திக்

    banner

    Related Stories

    Related Stories