விளையாட்டு

இந்தியாவை கரை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர், சஹா.. கடைசி நாள் பரபரப்பில் வெல்லப்போவது யார்?

நியுசிலாந்துடனான முதல் டெஸ்ட போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 280 ரன்கள் தேவை.

இந்தியாவை கரை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர், சஹா.. கடைசி நாள் பரபரப்பில் வெல்லப்போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நியுசிலாந்து அணி வெற்றி பெற கடைசி நாளில் 280 ரன்கள் தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டியிருக்கிறது.

கான்பூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணியின் சார்பில் அறிமுக போட்டியில் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். அதிகபட்சமாக அவர் 105 ரன்களை அவுட் ஆகியிருந்தார். சுப்மன் கில் மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியுசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியுசிலாந்து அணியின் ஓப்பனர்களான வில் யங்கும் டாம் லேதமும் மிகச்சிறப்பாக ஆடி தொடக்க விக்கெட்டுக்கே 151 ரன்களை சேர்த்து நியுசிலாந்தை வலுவான நிலைக்கு கொண்டு சென்றிருந்தனர். ஆனால், அதன்பிறகு மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பவே நியுசிலாந்து 296 க்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 49 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியின் சார்பில் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. சீக்கிரமே முதல் 5 விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. 51 ரன்களுக்குள் டாப்5 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். நம்பிக்கையளிக்கும் வகையில் அறிமுக வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் களத்தில் நின்றார். அவருக்கு துணையாக அஷ்வினும் கொஞ்ச நேரம் நின்று சிறப்பாக ஆடினார்.

இந்தியாவை கரை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர், சஹா.. கடைசி நாள் பரபரப்பில் வெல்லப்போவது யார்?

நியுசிலாந்தின் அபாயகரமான பௌலரான டிம் சவுத்தியை எதிர்கொள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது, அஷ்வின் மட்டும் துணிச்சலாக பேட்டைவிட்டு சவுத்தியின் பந்திலும் பவுண்டரிக்களை அடித்தார். ஸ்ரேயாஸ் பொறுமையாக நின்று நிதானமாக ஆடினார். அஷ்வின் 32 ரன்களில் அவுட் ஆக, ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களில் அவுட் ஆனார். இதன்பிறகு, சர்ப்ரைஸாக விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹா நின்று நிதானமாக அக்சர் படேலுடன் ஒரு அற்புதமான கூட்டணியை போட்டார். இந்த கூட்டணி 67 ரன்களை சேர்த்தது. சஹா 61 ரன்னிலும் அக்சர் 28 ரன்னிலும் நாட் அவுட்டாக இருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸ் முன்னிலையோடு நியுசிலாந்து அணிக்கு 284 ரன்களை இந்தியா டார்கெட்டாக நிர்ணயித்தது. இன்றைய நாள் முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த போது நியுசிலாந்து சேஸிங்கை தொடங்கியது. 4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் ஆடி 4 ரன்களை சேர்த்தனர். அஷ்வினின் ஓவரில் வில் யங் 2 ரன்னில் lbw ஆகினார்.

கடைசி நாளில் நியுசிலாந்தின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. நான்காவது இன்னிங்ஸில் 280 ரன்கள் சேஸிங் அவ்வளவு எளிதான காரியமில்லை. நியுசிலாந்தின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்திவிடும்பட்சத்தில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கிறது. அசாத்தியத்தை நிகழ்த்த நினைக்கும் நியுசிலாந்தை தடுத்து நிறுத்தி இந்தியா முதல் வெற்றியை பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories