விளையாட்டு

பிக்பேஸ் லீகில் Player of the tournament விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுரின் கவலை!

இந்திய வீராங்கனை ஒருவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் இப்படி ஒரு விருதைப் பெறுவது இதுவே முதல் முறை.

பிக்பேஸ் லீகில் Player of the tournament விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுரின் கவலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பிக்பேஸ் லீகின் இந்த சீசனின் 'Player of the tournament' விருது இந்திய வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வீராங்கனை ஒருவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் இப்படி ஒரு விருதைப் பெறுவது இதுவே முதல் முறை.

இந்திய அணியின் கேப்டன்களுள் ஒருவரான ஹர்மன்ப்ரீத் கவுர்தான் இந்தியாவிலிருந்து முதன் முறையாக ஆஸ்திரேலியாவின் பிக்பேஸ் லீகில் ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஆவார். இதுவரை மொத்தமாக 47 போட்டிகளில் ஆடியிருக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் 1000+ ரன்களை குவித்திருக்கிறார்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் பெண்களுக்கான பிக்பேஸ் லீகில் இந்தியாவிலிருந்து ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, பூனம் யாதவ் போன்ற 8 வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். வெவ்வேறு அணிகளுக்காக ஆடிவரும் இந்த 8 வீராங்கனைகளில் ஹர்மன்ப்ரீத் கவுர் மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து வருகிறார்.

மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத்தும் ஜெமிமா ரோட்ரிக்ஸும் ஆடி வருகின்றனர். அந்த அணிக்காக இந்த சீசனில் மட்டும் 12 போட்டிகளில் ஆடியிருக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் 399 ரன்களை அடித்திருக்கிறார். பேட்டராக மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டராகவும் கலக்கி வருகிறார். ஆஃப் ஸ்பின் வீசும் ஹர்மன்ப்ரீத் 12 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்களுக்கு எதிரான போட்டியில் 46 பந்தில் 73 ரன்களை அடித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருப்பார். அதே போட்டியில் 4 ஓவர்களை வீசி 31 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார். பிரிஸ்பேன் ஹீட்ஸுக்கு எதிரான இன்னொரு போட்டியில் 32 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருப்பார். அந்த போட்டியிலும் பந்துவீச்சில் 2 ஓவர்களை வீசி 19 ரன்களை வீசி 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருப்பார். சிட்ன் தண்டர்ஸுக்கு எதிரான இன்னொரு போட்டியில் 55 பந்துகளில் 81 ரன்களை அடித்திருப்பார். பந்துவீச்சில் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருப்பார்.

இப்படி எல்லா போட்டிகளிலுமே ஒரு ஆல்ரவுண்டராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடியிருந்தார். மெல்பர்ன் அணி ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கினார். அந்த அணியில் இந்த சீசனில் அதிக ரன்களை அடித்தவராகவும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் திகழ்கிறார்.

பிக்பேஸ் லீகில் Player of the tournament விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுரின் கவலை!

இதனாலயே ஹர்மன்ப்ரீத் கவுருக்கு Player of the tournament விருது வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களான அம்பயர்களே இந்த விருதுக்கான வீராங்கனையை தேர்வு செய்யும் குழுவில் இருந்தனர். அவர்களின் தேர்வுப்படி 31 புள்ளிகள் பெற்று ஹர்மன்ப்ரீத் கவுர் முதலிடத்தில் இருந்தார். நியுசிலாந்தை சேர்ந்த சோஃபி டிவைன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெத் மூனி போன்றோரே 28 புள்ளிகளை பெற்று ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அடுத்த இடத்திலேயே இருந்தனர்.

பிக்பேஸ் லீகில் Player of the tournament விருதை பெறும் மூன்றாவது வெளிநாட்டு வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றிருக்கிறார். மேலும், இந்த சீசனில் சிறப்பாக ஆடிய 11 வீராங்கனைகளை உள்ளடக்கிய ஒரு அணியை பிக்பேஸ் லீக் வெளியிட்டிருந்தது. அந்த அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டுமே.

இத்தனை பெருமைகளை பெற்ற போதும், இதேமாதிரியான ஒரு தொடர் இந்தியாவில் இல்லையே என்பதே ஹர்மன்ப்ரீத் கவுரின் வருத்தமாக இருக்கிறது. 'எங்களால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. வெளிநாட்டு வீராங்கனைகள் இந்தியாவிற்கு வந்து நம் வீராங்கனைகளுடன் ஆடினால் மிகச்சிறப்பாக இருக்கும். ஆனால் பிசிசிஐயிடம் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும். அதையும் நாங்கள் நீண்ட நாட்களாக செய்து கொண்டிருக்கிறோம்' வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு உலகின் செல்வமிக்க கிரிக்கெட் போர்டான பிசிசிஐ செவி மடுக்குமா?

banner

Related Stories

Related Stories