விளையாட்டு

தோனியின் நம்பிக்கை.. பிசிசிஐ கொடுத்த வாய்ப்பு.. வெற்றியை தேடித்தருவாரா ஹர்திக் பாண்ட்யா?

தோனியின் நம்பிக்கையையும் பிசிசிஐ கொடுத்திருக்கும் வாய்ப்பையும் ஹர்திக் பாண்ட்யா சரியாகப் பயன்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவுவாரா?

தோனியின் நம்பிக்கை.. பிசிசிஐ கொடுத்த வாய்ப்பு.. வெற்றியை தேடித்தருவாரா ஹர்திக் பாண்ட்யா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஹர்திக் பாண்ட்யா என்ன செய்யப்போகிறார்? இதுதான் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய கேள்வி. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா சமீபமாக பந்துவீச தடுமாறி வருகிறார். அவர் பந்துவீசாத பட்சத்தில் 6 வது பௌலிங் ஆப்சன் இல்லாமல் இந்தியா கடுமையாக தடுமாறி வருகிறது. முழுமையாக பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கும் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கிலும் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை.

உலகக்கோப்பையில் ஆடி வரும் பெரும்பாலான அணிகள் ஆல்ரவுண்டர்களை வைத்தே அணியை பலப்படுத்தி பல பிரச்சனைகளை சமாளித்து வருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று அல்லது நான்கு மெயின் பௌலர்களோடு மட்டுமே களமிறங்குகின்றனர். அவர்கள் மூலம் 12-16 ஓவர்களை வீச முடியும். மீதமிருக்கும் ஓவர்களை ஆல்ரவுண்டர்களை வைத்து சமாளித்துக் கொள்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்றோரும் இங்கிலாந்து அணியில் க்றிஸ் வோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் போன்றோரும் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்யும் வகையிலான ஆல்ரவுண்டர்களாக இருக்கின்றனர். இதனால், இருக்கிற 11 வீரர்களில் 8 வீரர்கள் வரை பேட்டிங் ஆடக்கூடியவர்களாக அந்த அணிகளில் இருக்கின்றனர். இப்படி நீண்ட பேட்டிங் லைன் அப்பை கொண்டிருப்பது அதிரடியாக பேட்டிங்கில் கலக்க அந்த அணிக்கு பெரிய உதவியாக இருக்கிறது. இது மிகப்பெரிய அட்வாண்டேஜாக இருக்கிறது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீசாததால் இந்திய அணிக்கு அந்த அட்வாண்டேஜ் கிடைக்காமலேயே இருக்கிறது. 20 ஓவர்களை வீசுவதற்கு தேவையான சரியான 5 பௌலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இந்திய அணி களமிறங்குகிறது. எக்ஸ்ட்ரா பௌலிங் ஆப்ஷன் இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது பயிற்சி ஆட்டங்களிலேயே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட எடுத்திருக்க முடியவில்லை. ஹர்திக் பந்துவீசினால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். அவர் மிதவேகம் என்பதால் அணிக்கு கூடுதலாக ஒரு ஸ்பின்னர் தேவை எனில், ஏற்கனவே இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு ஸ்பின்னரை இணைத்துக் கொள்ள முடியும். பௌலிங்கிலும் நல்ல வேரியேஷன் கிடைக்கும்.

ஆனால், நேற்று வரைக்குமே ஹர்திக் பந்துவீசுவாரா மாட்டாரா என்பதில் பெரும் குழப்பமே இருந்தது. நேற்று பிசிசிஐ ஒரு ட்வீட் செய்திருந்தது. அதில், வலைப்பயிற்சியில் ஹர்திக் பேட்டிங் செய்வதை போலவும் பந்துவீசுவதை போலவும் புகைப்படங்களும் இருந்தன. இதன்மூலம், ஹர்திக் பந்துவீச தயாராகி வருகிறார் என்கிற செய்தியை பிசிசிஐ கூற நினைப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும். ஆக, நியுசிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஹர்திக் பந்துவீசக்கூடும்.

இந்த உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவதில் குழப்பம் இருக்கிறது என தெரிந்தவுடனேயே பிசிசிஐ அவரை அணியிலிருந்து நீக்க முடிவெடுத்ததாகவும், இந்திய அணியின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் கேப்டன் தோனியே அதற்கு மறுப்பு தெரிவித்து, ஹர்திக் போன்ற ஒரு ஃபினிஷர் கட்டாயம் தேவை என கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்தே ஹர்திக்கை நீக்காமல் அக்சர் படேலை நீக்கி ஷர்துல் தாகூர் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

தோனியின் நம்பிக்கையையும் பிசிசிஐ கொடுத்திருக்கும் வாய்ப்பையும் ஹர்திக் பாண்ட்யா சரியாக பயன்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories