விளையாட்டு

T20 WC: பழி தீர்த்த நியுசிலாந்து.... அரையிறுதியில் நெருங்கி வந்து தோற்ற இங்கிலாந்து!

டாஸை வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த உலகக்கோப்பை சம்பிரதாயப்படி சேஸிங்கை தேர்வு செய்தார்.

T20 WC: பழி தீர்த்த நியுசிலாந்து.... அரையிறுதியில் நெருங்கி வந்து தோற்ற இங்கிலாந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி20 உலகக்கோப்பை போட்டிகள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இதில் இங்கிலாந்து அணியும் நியுசிலாந்து அணியும் மோதியிருந்தன. பரபரப்பான இந்த போட்டியில் நியுசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸே நியுசிலாந்துக்கு அணிக்கு சாதகமாகத்தான் அமைந்திருந்தது. டாஸை வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த உலகக்கோப்பை சம்பிரதாயப்படி சேஸிங்கை தேர்வு செய்தார். நியுசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இங்கிலாந்து காயமுற்றிருக்கும் ஜேசன் ராய்க்கு பதில் சாம் பில்லிங்ஸ் அணிய சேர்க்கப்பட்டிருந்தார். ஜேசன் ராயின் ஓப்பனிங் ஸ்லாட்டில் பட்லருடன் பேர்ஸ்ட்டோ இறங்கியிருந்தார்.

இங்கிலாந்தை பொறுத்தவரைக்கும் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் மெதுவாகவே தொடங்கினர். முதல் 3 ஓவர்களில் சவுத்தியும் ட்ரெண்ட் போல்டும் பந்தை ஸ்விங் செய்ய மூர்க்கத்தனமாக முயன்றனர். இந்த சமயத்தில் பேர்ஸ்ட்டோ, பட்லர் இருவராலுமே பெரிதாக அட்டாக் செய்ய முடியவில்லை.

T20 WC: பழி தீர்த்த நியுசிலாந்து.... அரையிறுதியில் நெருங்கி வந்து தோற்ற இங்கிலாந்து!

முதல் 3 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. அடுத்த 3 ஓவர்களில் 27 ரன்கள் வந்தது. ஆனால், ஆடம் மில்னே ஓவரில் பேர்ஸ்ட்டோ 13 ரன்களில் வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். அவர் அவுட் ஆன கொஞ்ச நேரத்திலேயே இஷ் சோதியின் பந்திவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று 29 ரன்களில் பட்லர் lbw ஆனார்.

இதன்பிறகு, டேவிட் மலானும் மொயீன் அலியும் கூட்டணி போட்டனர். இருவரும் பெரிதாக அடித்து ஆட முயற்சிக்காமல், கொஞ்சம் தற்காப்பான மனநிலையுடனே ஆடினர். இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஏனெனில் இவர்களுக்கு பிறகு அடித்து ஆட லிவிங்ஸ்டன், மோர்கன், சாம் பில்லிங்ஸ் மாதிரியான வீரர்கள் இருந்தும் மலானும் மொயீன் அலியும் ரிஸ்க் எடுக்காமல் ஆடியது இங்கிலாந்தின் ரன்வேகக்தை குறைத்தது.

மலான் 30 பந்துகளில் 41 ரன்களையும், மொயீன் அலி 37 பந்துகளில் 51 ரன்களையும் அடித்திருந்தனர். இக்கட்டான சூழலில் விக்கெட் அழுத்தத்தில் இப்படி ஆடியிருந்தால் இவற்றை நல்ல இன்னிங்ஸ் என சொல்லியிருக்கலாம். ஆனால், இங்கே சேஸ் செய்கிற அணிதான் அதிகம் வெல்கிறது என்கிற நிதர்சனம் புரிந்தும் இப்படி மெதுவாக ஆடியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 166 ரன்களை எடுத்திருந்தது. இது சராசரியான ஸ்கோர் மட்டுமே. ஆனால், நியுசிலாந்து அணியின் பேட்டிங் கொஞ்சம் வீக் என்பதால் இங்கிலாந்து அணி கொஞ்சம் நம்பிக்கையுடனேயே களமிறங்கியது.

T20 WC: பழி தீர்த்த நியுசிலாந்து.... அரையிறுதியில் நெருங்கி வந்து தோற்ற இங்கிலாந்து!

வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே மார்டின் கப்தில் நான்கு ரன்களில் அவுட் ஆனார். அதே வோக்ஸ் வீசிய மூன்றாவது ஓவரில் நியுசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஸ்கூப் ஆட முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார். இது நியுசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பவர்ப்ளே முடிவில் நியுசிலாந்து அணி 36-2 என்ற நிலையில் இருந்தது. நியுசிலாந்து அணிக்கு ரன்ரேட் அழுத்தம் விக்கெட் அழுத்தம் என இரண்டுமே உருவாகியிருந்தது. போட்டி இங்கிலாந்தின் பக்கமே இருந்தது.

ஆனால், டேரில் மிட்செல்-டெவன் கான்வே இந்த ஒரு கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருவரும் சேர்ந்து 82 ரன்களை சேர்த்தனர். போட்டி கடைசி வரை பரபரப்பாக செல்ல இந்த கூட்டணியே காரணமாக அமைந்தது. கான்வே 46 ரன்களில் லிவிங்ஸ்டனின் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். நியுசிலாந்து அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் க்ரீஸுக்கு வந்த நீஷம் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 27 ரன்களை சேர்த்தார். க்றிஸ் ஜோர்டனின் 17 வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் வந்தது. இந்த ஒரு ஓவர் ஆட்டத்தை மொத்தமாக நியுசிலாந்து பக்கமாக மாற்றியது. கடைசியில் டேரில் மிட்செலும் அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட ஒரு ஓவரை மீதம் வைத்து 19 வது ஓவரிலேயே நியுசிலாந்து போட்டியை வென்றது.

இந்த போட்டியை வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றிருக்கிறது. 2019 ஓடிஐ உலகக்கோப்பையில் இங்கிலாந்தும் நியுசிலாந்துமே மோதியிருந்தன. இதில் சூப்பர் ஓவர் வரை சென்று போட்டி டை ஆக பவுண்டரி கணக்கில் இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றிருக்கும். மோசமான விதிமுறைகளால் இங்கிலாந்திடம் தோற்று உலகக்கோப்பையை தவறவிட்ட நியுசிலாந்து அணி இப்போது அதே இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories