விளையாட்டு

#T20WORLDCUP: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - இந்தியாவின் முடிவு ஆப்கனின் கையில்..என்ன நடக்கப்போகிறது?

ஆஃப்கானிஸ்தான் ஆடும் விதத்தை பொறுத்தே இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் அடுத்தக்கட்டம் முடிவு செய்யப்படும்.

#T20WORLDCUP: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - இந்தியாவின் முடிவு ஆப்கனின் கையில்..என்ன நடக்கப்போகிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மிக முக்கியமான போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. க்ரூப் 2 விலிருந்து பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், அரையிறுதிக்கு முன்னேறப்போகும் இன்னொரு அணி எது? எனும் கேள்வு எழுந்துள்ளது. அந்த கேள்விக்கான விடையாக இந்த போட்டி அமையப்போகிறது.

நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் மூன்றில் வென்று இப்போதைக்கு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி ஆடிய 4 போட்டிகளில் இரண்டில் வென்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியும் ஆடிய 4 போட்டிகளில் இரண்டில் வென்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

இன்று நடைபெறும் நியூசிலாந்து Vs ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் நியூசிலாந்து வெல்லும்பட்சத்தில் எந்த சந்தேகமுமின்றி அந்த அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுவிடும். ஆப்கானிஸ்தானும் இந்தியாவும் அடுத்தச்சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறும். ஆனால், ஆப்கானிஸ்தான் இந்த போட்டியை வெல்லும்பட்சத்தில் ஆப்கனுக்கு ஒரு சிறிய வாய்ப்பும் இந்தியாவிற்கு ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்கும்.

இந்த போட்டியை ஆப்கன் வெல்லும் போது நியூசிலாந்தும் ஆப்கனும் மூன்று போட்டிகளில் வென்று ஒரே நிலையில் இருப்பார்கள். நாளை நமீபியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெல்லும்பட்சத்தில் இந்தியாவும் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று நியூசிலாந்து, ஆப்கானிஸ்தானோடு இணைந்து சமநிலைக்கு வரும். அப்போது இந்த மூன்றில் ஒரே ஒரு அணி மட்டுமே அரையிறுதிக்கு தகுதிப்பெறும் என்ற சூழல் நிலவுகையில் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு தகுதிப்பெற அதிக வாய்ப்பிருக்கிறது.

#T20WORLDCUP: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - இந்தியாவின் முடிவு ஆப்கனின் கையில்..என்ன நடக்கப்போகிறது?

ஆக, இந்தியா அரையிறுதிக்கு தகுதிப்பெற வேண்டுமாயின் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும்.

ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து இரண்டையும் கையில் எடுத்து பார்த்தால் நியுசிலாந்து அணி எளிமையாக வென்றுவிடும் என்றே தோன்றும். ஆனால், உண்மை அப்படியில்லை. இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக ஆடி வருகிறது. ஸ்காட்லாந்தை 60 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆக்கியிருந்தது. நமீபியாவை 98 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் நெருங்கி வந்து தோற்றிருந்தது.

எனவே நியுசிலாந்தை அவ்வளவு எளிதாக ஆப்கானிஸ்தான் வெல்ல விடாது. ஆப்கானிஸ்தானின் ஸ்பின் ட்வின்ஸான ரஷீத்கானும் முஜுபுர் ரஹ்மானும் நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்களை கடுமையாக திணறச் செய்வர். முஜிபுர் ரஹ்மான் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் ஆடவில்லை. இந்த போட்டியில் ஆடும் வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் எவ்வளவு சிறப்பாக வீசினாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஃபுல் லெந்த்திலேயே வீசிக்கொடுத்து ரன்களை வாரி வழங்குகின்றனர். அது இந்த போட்டியில் தவிர்க்கப்பட வேண்டும் பேட்டிங்கிலும் ஆப்கானிஸ்தானிடம் சீரான தன்மை இல்லை. அதுவும் மாற வேண்டும்.

#T20WORLDCUP: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - இந்தியாவின் முடிவு ஆப்கனின் கையில்..என்ன நடக்கப்போகிறது?

நியூசிலாந்து அணியும் பேட்டிங்கை விட பௌலிங்கில்தான் பலமிக்கதாக இருக்கிறது. போல்ட், சவுத்தி, மில்னே, சாண்ட்னர், சோதி என வலிமையாக இருக்கும் இந்த அட்டாக் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் லைன் அப்பை எளிதில் சுருட்டவும் வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் இரண்டு அணியும் இன்று பந்துவீச்சில் மிரட்டும். இது ஒரு பந்துவீச்சு யுத்தமாக கூட இருக்கும்.

இந்த போட்டியில் இந்திய ரசிகர்களின் ஆதரவு மொத்தமும் ஆப்கானிஸ்தானுக்கே இருக்கப்போகிறது. ஆப்கானிஸ்தான் ஆடும் விதத்தை பொறுத்தே இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் அடுத்தக்கட்டம் முடிவு செய்யப்படும்.

banner

Related Stories

Related Stories