விளையாட்டு

டாஸ் சென்டிமென்ட்டை தகர்த்தெறிந்த இங்கிலாந்து... இலங்கை பவுலிங்கை நொறுக்கிய ஜாஸ் பட்லர்! #T20WorldCup

டாஸை தோற்று முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் தோல்வியையே தழுவுகின்றன. இந்த எழுதப்படாத விதியை இங்கிலாந்து அணி நேற்று தகர்த்திருந்தது.

டாஸ் சென்டிமென்ட்டை தகர்த்தெறிந்த இங்கிலாந்து... இலங்கை பவுலிங்கை நொறுக்கிய ஜாஸ் பட்லர்! #T20WorldCup
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இலங்கையை வீழ்த்திய பட்லரின் பொறுப்பான பேட்டிங்கும்....இங்கிலாந்தின் விறுவிறு ஃபீல்டிங்கும்...!

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்தும் இலங்கையும் நேற்று மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் 67 பந்துகளில் 101 ரன்களை அடித்து மிரட்டியிருந்தார்.

இந்த உலகக்கோப்பையில் டாஸை வெல்லும் அணிகளே போட்டியை வெல்லும் என்கிற ட்ரெண்ட் இருந்தது. அதாவது, டாஸை வெல்லும் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து டார்கெட்டை எளிதில் சேஸ் செய்து வெற்றி பெறுகின்றனர். பெரும்பாலான போட்டிகளில் இதுதான் நிலை. டாஸை தோற்று முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் தோல்வியையே தழுவுகின்றன. இந்த எழுதப்படாத விதியை இங்கிலாந்து அணி நேற்று தகர்த்திருந்தது. டாஸை தோற்று முதலில் பேட்டிங்கை செய்து போட்டியை வென்றிருக்கிறது.

முதலில் பேட் செய்கையில் இங்கிலாந்து அணியும் கொஞ்சம் தடுமாறவே செய்தது. ஜேசன் ராய், பேர்ஸ்ட்டோ, மலான் டாப் 3 விக்கெட்டுகளை சீக்கிரமே இழந்தது. ஆனாலும் ஓப்பனிங்கில் இறங்கிய ஜாஸ் பட்லர் மட்டும் நின்று நிதானமாக சிறப்பாக ஆடினார்.

இலங்கையின் பலமே அதன் ஸ்பின்னர்கள்தான். வனிந்து ஹசரங்காவும் மஹீஸ் தீக்ஷனாவும் பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரையும் பட்லர் லாவகமாக எதிர்கொண்டார். இவர்கள் இருவரின் ஓவரிலும் ரிஸ்க்கே எடுக்காமல் ரொம்பவே டிஃபன்ஸிவ்வாக ஆடினார். இதனால் முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி பெரிதாக ஸ்கோர் செய்யவே இல்லை. முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 47-3 என்ற நிலையிலேயே இருந்தது. பட்லர் 30 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

டாஸ் சென்டிமென்ட்டை தகர்த்தெறிந்த இங்கிலாந்து... இலங்கை பவுலிங்கை நொறுக்கிய ஜாஸ் பட்லர்! #T20WorldCup

ஆனால், அடுத்த 10 ஓவர்களில் பட்லர் வெறியாட்டம் ஆடினார். ஸ்பின்னர்களை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்களை வெளுத்தெடுத்தார். 45 பந்துகளில் அரைசதத்தை எடுத்தவர், அடுத்தடுத்து ராக்கெட் வேகத்தில் ஸ்கோர் செய்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் 43 பந்துகளில் 89 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். 67 பந்துகளில் 101 ரன்களை எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டதிலும் பட்லரிடம் ஒரு தெளிவு இருந்தது. ஃபுல்லாக வந்த பந்துகளில் பட்லரின் ஸ்ட்ரைக் ரேட் 170 ஆக இருந்தது. அதேநேரத்தில் ஷார்ட் பிட்ச்சாக வந்த பந்துகளில் ஸ்ட்ரைக் ரேட் 200+ ஆக இருந்தது. அதேநேரத்தில் குட் லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளில் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. அதாவது, பௌலர் ஃபுல்லாகவோ ஷார்ட்டாகவோ தவறான லெந்த்தில் வீசினால் அதை பட்லர் தவறவே விடவில்லை. ஆனால், அதேநேரத்தில் குட்லெந்தில் வீசப்பட்ட பந்துகளில் அவர் பெரிதாக ரிஸ்க்கே எடுக்கவில்லை.

பட்லர் இன்னிங்ஸின் கமெண்ட்ரியில் 'Man of all occasions' என பாராட்டியிருப்பர். அதாவது எல்லா சந்தர்ப்பங்களுக்குமான வீரர் எனப் புகழப்பட்டார். இந்த புகழ்ச்சிக்கு பட்லர் 100% பொருந்தியவரே. கடந்த போட்டியில் துபாயின் பேட்டிங் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 32 பந்துகளில் 71 ரன்களை அடித்திருப்பார். க்ரீஸுக்குள் வந்த நொடியிலிருந்தே அதிரடிதான். ஷார்ஜா மந்தமான பிட்ச். பேட்டிங் செய்வதற்கு கடினமான பிட்ச். அங்கே முதலில் மெதுவாக நிலைத்து நின்று விக்கெட்டை காத்து போகப் போக அதிரடியாக ஆடி சதத்தை அடித்தார். எல்லா விதமான சூழல்களிலும் அவரால் ஆட முடியும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 163 ரன்களை எடுத்திருந்தது. சேச் அணிக்கு சாதகமாக போட்டியின் முடிவு அமையும் என்பதை இங்கிலாந்து தகர்த்திருந்தது. 137 ரன்களுக்கு இலங்கையை ஆல் அவுட் ஆக்கியிருந்தது. பௌலிங், ஃபீல்டிங் குறிப்பாக கடைசி சில ஓவர்களில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் உயர்தரமாக இருந்தது. பதும் நிஷாங்கா, ஷனாகா இருவரையும் ரன் அவுட் ஆக்கியிருந்தனர். வனிந்து ஹசரங்காவை பவுண்டரி லைனில் ராயும் சாம் பில்லிங்ஸும் அட்டகாசமாக கேட்ச் செய்தனர். இந்த மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். மூன்றுமே இங்கிலாந்து வீரர்கள் ஃபீல்டிங் திறனுக்கு கிடைத்த வெற்றிகள்.

26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியது. 4 போட்டிகளில் ஆடியிருக்கும் இங்கிலாந்து அணி 4 போட்டிகளிலும் வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories