விளையாட்டு

நியூசிலாந்துடன் மீண்டும் படுதோல்வி... அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையில் இந்தியா! #T20WorldCup

முக்கியமான போட்டியில் இந்திய அணி போராடாமலேயே வீழ்ந்தது ஏமாற்றமான விஷயமாக அமைந்தது.

நியூசிலாந்துடன் மீண்டும் படுதோல்வி... அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையில் இந்தியா! #T20WorldCup
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி சுலபமாக வென்றிருக்கிறது. முக்கியமான போட்டியில் இந்திய அணி போராடாமலேயே வீழ்ந்தது ஏமாற்றமான விஷயமாக அமைந்தது.

துபாய் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த உலகக்கோப்பையில் துபாயில் நடைபெற்ற அத்தனை போட்டியிலும் டார்கெட்டை சேஸ் செய்த அணிகளே முழுமையாக வென்றிருக்கின்றன. பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதும் பனிப்பொழிவு பந்துவீச்சுக்கு பாதகமாக இருப்பதுமே இதற்குக் காரணம். எனவே டாஸ் ரொம்பவே முக்கியம். டாஸை வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்து வெற்றிக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும். நேற்றைய போட்டியில் டாஸ் நியுசிலாந்துக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சனே டாஸை வென்று சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். அங்கேயே இந்திய அணியின் தோல்வி பாதி உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால், டாஸை தோற்றபிறகும் கோலி கொஞ்சம் நம்பிக்கையுடன் பேசியிருந்தார். வழக்கமான ஸ்கோரை விட 20-25 ரன்களை கூடுதலாக அடிக்கும்பட்சத்தில் எங்களால் நியுசிலாந்து அணியை வெற்றிகரமாக சேஸ் செய்யவிடாமல் தடுக்க முடியும் என பேசியிருந்தார். ஆனால், கூடுதலாக 20-25 ரன்னில்லை, ஒரு சராசரியான ஸ்கோரை கூட இந்திய அணியால் எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பேட்டிங் மோசமாக இருந்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பியிருந்தது.

சூரியகுமார் யாதவிற்கு பதிலாக இஷன் கிஷன் அணிக்குள் வந்திருந்தார். இஷன் கிஷனுக்கு ஓப்பனிங் கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால் அவரை ஓப்பனராக இறக்க இந்திய அணி முடிவு செய்தது. அது நல்ல முடிவே. ஆனால், அவருக்காக பேட்டிங் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெருத்த பின்னடைவை கொடுத்தது.

இஷன் கிஷன் ஓப்பனிங்கில் வருவதற்காக ரோஹித் சர்மா நம்பர் 3 வீரராகவும் கோலி நம்பர் 4 வீரராகவும் மாற்றப்பட்டிருந்தார். உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடர்களுக்கு செல்லும்போது ஒரு நிலையான அணியோடு யார் யார் எந்த ரோலில் ஆடப்போகிறார்கள் என்ற தெளிவோடு செல்ல வேண்டும். கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்வது சரியாக அமையாது. அதுவும் கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் டாப் ஆர்டரை இப்படி மொத்தமாக மாற்றுவது நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆனால், இந்திய அணி ஒரு அசட்டு தைரியத்துடன் அதைச் செய்திருந்தது. அதற்கான பலனை அனுபவித்திருந்தது.

இதற்கு முன் பெரிதாக முயன்று பார்க்காத ராகுல் - இஷன் கிஷன் கூட்டணி 11 ரன்களை மட்டுமே சேர்த்தது. நம்பர் 3 இல் இறங்கிய ரோஹித் 14 பந்துகளில் 14 ரன்களிலும், நம்பர் 4 இல் இறங்கிய கோலி 17 பந்துகளில் 9 ரன்களிலும் அவுட் ஆகினார். தங்களுக்கான இடத்தில் இறங்காமல் ஆர்டர் மாறி இறங்கியது அவர்களுக்கு பெரும் தடுமாற்றத்தை கொடுத்தது. இந்திய அணியின் ரன் விகிதமும் பயங்கரமாக அடி வாங்கியது. இந்த உலகக்கோப்பையில் 7-15 இந்த மிடில் ஓவர்களில் குறைவான ரன்களை அடித்த அணியாக வெஸ்ட் இண்டீஸே இருந்தது. வெறுமென 6% பந்துகளை மட்டுமே பவுண்டரி அடித்திருந்தனர். ஆனால், நேற்று இந்தியா வெஸ்ட் இண்டீஸை விட மோசமாக ஆடியது. 7-15 ஓவர்களில் இந்திய அணி ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை.

கடைசி சில ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யாவும் ஜடேஜாவும் கொஞ்சம் ஸ்கோர் செய்ய இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்திருந்தது.

நியூசிலாந்துடன் மீண்டும் படுதோல்வி... அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையில் இந்தியா! #T20WorldCup

துபாய் மைதானத்தில் இதெல்லாம் ஒரு ஸ்கோரே இல்லை. சராசரியை விட ரொம்பவே குறைவான ஸ்கோர். டாஸில் 50% தோல்வி உறுதியான நிலையில் பேட்டிங்கை முடித்தவுடன் இந்திய அணி 90% தோல்வியை உறுதி செய்திருந்தது. பந்துவீச்சில் கொஞ்சம் கடினமளித்து போராடி நியுசிலாந்தை இந்திய அணி கொஞ்சம் திணறடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பந்துவீச்சும் படுமோசமாகவே இருந்தது. 111 என்கிற ஸ்கோரை துபாய் மைதானத்தில் எவ்வளவு சிறப்பாக வீசினாலும் டிஃபண்ட் செய்ய முடியாது என்றாலும் பௌலர்கள் சிறு நெருக்கடியை கூட கொடுக்கவில்லை.

பும்ரா மட்டுமே கொஞ்சம் நன்றாக வீசி 2 விக்கெட்டுகளக் வீழ்த்தியிருந்தார். மற்ற பௌலர்களின் பந்தையெல்லாம் வலைப்பயிற்சியில் ஆடுவதை போல நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் சுலபமாக ஆடினர். 15 வது ஓவரிலேயே நியுசிலாந்து இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் 49 ரன்களையும் வில்லியம்சன் 33 ரன்களையும் எடுத்திருந்தனர்.

பாகிஸ்தான், நியுசிலாந்து என ஆடிய இரண்டு அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு வெகுவாக குறைந்திருக்கிறது. அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணி வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி முடிவைப் பொறுத்தே இந்திய அணிக்கான வாய்ப்பு தெரிய வரும்.

முக்கியமான போட்டியில் இந்தியா அசட்டுத்தனமாகச் செய்த மாற்றங்களே இந்திய அணியை தோல்வியில் தள்ளியிருக்கிறது. மெண்ட்டராக தோனி அவரோடு கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி என மூன்று முக்கிய ஆளுமைகள் இருந்தும் இவ்வளவு மோசமான மாற்றம் ஏன் செய்யப்பட்டது என்பதுதான் மிக முக்கிய கேள்வியாக தொக்கி நிற்கிறது. முக்கியமான போட்டியில் சென்னை அணிக்காக கூட தோனி இப்படியான மாற்றத்தை செய்யமாட்டார்.

banner

Related Stories

Related Stories