விளையாட்டு

கவனம் ஈர்த்த ட்ரம் பெல்மேன்.. முதல் வெற்றியை பெற்ற நமீபியா.. தொடர் வெற்றியை பெற்ற இங்கிலாந்து!

ஸ்காட்லாந்தின் டாப் ஆர்டரை ஒற்றை ஆளாக ட்ரம்பெல்மேன் காலி செய்திருந்தார். அந்த வீழ்ச்சியிலிருந்து ஸ்காட்லாந்து அணியால் மீண்டே வர முடியவில்லை.

கவனம் ஈர்த்த ட்ரம் பெல்மேன்.. முதல் வெற்றியை பெற்ற நமீபியா.. தொடர் வெற்றியை பெற்ற இங்கிலாந்து!
Jana Ni
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் வங்கதேசமும் இங்கிலாந்தும் மோதியிருந்தனர். இதில் இங்கிலாந்து வென்றிருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் நமிபியாவும் ஸ்காட்லாந்தும் மோதியிருந்தன. இதில் நமிபியா வென்றுள்ளது.

இங்கிலாந்து vs வங்கதேசம் ஆட்டத்தில் வங்கதேச அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இங்கிலாந்து அணி வங்கதேசம் என்றால் எப்போதும் கொஞ்சம் ஜாக்கிரதையுடனே எதிர்கொள்ளும். 2015 ஓடிஐ உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோற்ற பிறகே, இங்கிலாந்து தங்களை மறுபரீசலனை செய்து டெஸ்ட் அணி என்ற முத்திரையிலிருந்து டி20 க்களுக்கான அணியாக மாறியது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு போட்டியில் வங்கதேசத்தை இங்கிலாந்து அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் வங்கதேசம் இங்கிலாந்துக்கு பெரிய அளவில் எந்த சிரமத்தையும் கொடுக்கவில்லை.

மொயீன் அலி, லிவிங்ஸ்டன், க்றிஸ் வோக்ஸ் என தங்களின் ஆல்ரவுண்டர்களை வைத்தே இங்கிலாந்து அணி வங்கதேசத்தை காலி செய்துவிட்டது. ஆஃப் ஸ்பின்னரான மொயீன் அலி ஓப்பனர்களான லிட்டன் தாஸ், நைம் ஆகியோரை மூன்றாவது ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்மத்துல்லா இருவரும் மட்டுமே கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடினார். ஆனால், இவர்களாலும் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை. 29 மற்றும் 19 ரன்களை எடுத்த இவர்களை லிவிங்ஸ்டன் வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே வங்கதேச அணி எடுத்திருந்தது.

இங்கிலாந்துக்கு டார்கெட் 125. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் அதிரடியாக ஆட அவருக்கு உறுதுணையாக ஜாஸ் பட்லர், மலான் இருவரும் பொறுமையாக ஆடியிருந்தனர். ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். ஜாஸ் பட்லர் 18 ரன்களையும் மலான் 28 ரன்களையும் அடித்திருந்தார். 15வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டி வெற்றியடைந்தது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி எளிதில் வென்ற இங்கிலாந்து இந்த போட்டியையும் சுலபமாக வென்றது. இதனால் இங்கிலாந்தின் ரன்ரேட் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. வங்கதேச அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோற்றிருக்கிறது.

நமீபியா மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற இன்னொரு போட்டியில் நமீபியா வென்றிருந்தது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 109 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. நமீபியா சார்பில் பந்துவீசிய ட்ரம்பெல்மேன் எனும் இளம் வீரர் அதிக கவனத்தை ஈர்த்திருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசியிருந்த ட்ரம்பெல்மேன் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியிருந்தார். மேலும் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 4 ஓவர்களை வீசிய ட்ரம்பெல்மேன் 19 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். ஸ்காட்லாந்தின் டாப் ஆர்டரை ஒற்றை ஆளாக ட்ரம்பெல்மேன் காலி செய்திருந்தார். அந்த வீழ்ச்சியிலிருந்து ஸ்காட்லாந்து அணியால் மீண்டே வர முடியவில்லை.

லீஸ்க், க்ரீவ்ஸ் இருவரும் மட்டுமே ரன்னை உயர்த்தியிருந்தனர். லீஸ்க் 44 ரன்களையும் க்ரீவ்ஸ் 25 ரன்களையும் எடுத்திருந்தார். இவர்களின் ஆட்டத்தால் மட்டுமே ஸ்காட்லாந்து அணி 100 ரன்களை கடந்து நமீபியாவுக்கு 110 ரன்களை டார்கெட் ஆக்கியது. சேஸிங்கில் நமீபியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டு தடுமாறினாலும் கடைசி ஓவரில் சென்று போட்டியை வென்றுவிட்டது. அதிகப்பட்சமாக ஸ்மித் 23 பந்துகளில் 32 ரன்களை அடித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories