விளையாட்டு

நிறவெறிக்கு எதிராகச் செயல்பட பணவெறி தடுக்கிறதா? - இந்திய அணியின் #BLM செயல்பாடு உளப்பூர்வமானதா?

BLM போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஓங்கி ஒலிக்கும் இயக்கங்களில் எந்தவித இரண்டாம்கட்ட யோசனையுமின்றி இந்தியா அந்த மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

நிறவெறிக்கு எதிராகச் செயல்பட பணவெறி தடுக்கிறதா? - இந்திய அணியின் #BLM செயல்பாடு உளப்பூர்வமானதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்க இனத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதுமே நிறவெறிக்கெதிரான கருத்துகள் அதிகம் பேசப்படத் தொடங்கின. இதனை தொடர்ந்து Black Lives Matter என்கிற கோஷமும் பிரபலமானது. இந்த BLM இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு வீரர்கள் முட்டி போட்டு கையை உயர்த்தி நிறவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்பது வழக்கமானது. கிரிக்கெட்டிலும் இது கடைபிடிக்கப்பட்டது. எல்லா கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாகவும் வீரர்கள் முட்டி போட்டு நிறவெறிக்கு எதிராக முட்டி போட்டி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆனால், இதற்கு விதிவிலக்காக அமைந்தது இந்தியா மட்டுமே. குறிப்பாக, ஐ.பி.எல்-இல் இதுதொடர்பாக ஒரு சிறிய வாக்கியம் கூட பேசப்பட்டிருக்கவில்லை.

2008 இல் ஐ.பி.எல் தொடங்கப்பட்டபோது அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு 8,400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

2017 சீசனோடு அந்த ஒப்பந்தம் காலாவதியாகியது.

2018 முதல் 2022 வரை அடுத்த ஐந்தாண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் குழுமம் 16,347 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

சோனி 10 ஆண்டுகளுக்கு 8,400 கோடி கொடுத்தது. ஸ்டார் 5 ஆண்டுகளுக்கே 16,000 கோடி கொடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல் இன் வியாபார எல்லை அதிபயங்கர வளர்ச்சியை அடைந்ததை உணர முடியும்.

அடுத்த சீசனோடு ஸ்டார் குழுமத்தின் ஒப்பந்தம் காலாவதியாகும்.

புதிதாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கு ஏலம் விடப்படும். குறைந்தபட்சம் 24,000 கோடி முதல் அதிகபட்சமாக 40,000 கோடி வரை ஒளிபரப்பு உரிமம் விலைக்கு போகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. இந்த தொகைகளை வெறும் பணமாக மட்டுமே பார்க்க முடியாது. 2008 இல் ஐ.பி.எல்-லுக்கான பார்வையாளர் எண்ணிக்கைக்கும் வரவேற்பிற்கும் இப்போதைய பார்வையாளர் எண்ணிக்கைக்கும் வரவேற்பிற்கும் கொடுக்கப்படும் மதிப்பாகவே பார்க்க முடியும்.

கிரிக்கெட் ஆர்வம் கொண்ட அத்தனை நாடுகளும் உற்றுநோக்கும் தொடராகவும், அதிகம் பேரால் பார்வையிடப்படும் தொடராகவும் ஐ.பி.எல் இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் கிரிக்கெட் மீது ஆர்வமில்லாத கிரிக்கெட் பார்ப்பதை விரும்பாத நபர்கள் கூட ஐ.பி.எல் ஐ ஆர்வமாக கண்டு களிப்பதை பார்த்திருப்போம். உலகமெங்கும் இதே கதைதான்.

விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய ஐ.பி.எல் தொடரில் Black Lives Matter க்காக எந்த அணியும் எந்த வீரரும் முட்டி போட்டு கைகளை உயர்த்தியிருக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா மட்டும் விதிவிலக்கு. கடந்த 2020 சீசனில் ஒரு போட்டியில் அடித்து வெளுத்துவிட்டு, பொல்லார்டை பார்த்து கொஞ்சம் பெண்ட் செய்து கையை உயர்த்தியிருப்பார். ஐ.பி.எல்-லில் BLM இயக்கத்திற்கான அதிகபட்ச ஆதரவு அவ்வளவு மட்டுமே.

ஜார்ஜ் ஃப்ளாய்டு படுகொலைக்குப் பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற தொடரிலேயே நிறவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் இந்த வழக்கம் உருவானது. அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங் நிறவெறி குறித்துப் பேசிய உரை ஆதிக்கவாதிகளின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கும். ஆவேசமாக எதிர்வினை மட்டும் ஆற்றிவிட்டு செல்லாமல் நிறவெறி குறித்த மக்கள் கற்பிக்கப்பட வேண்டும். கல்வியின் மூலம் மட்டுமே இந்த பிரச்சனையிலிருந்து மீள முடியும் எனப் பேசியிருப்பார்.

நிறவெறிக்கு எதிராகச் செயல்பட பணவெறி தடுக்கிறதா? - இந்திய அணியின் #BLM செயல்பாடு உளப்பூர்வமானதா?

ஆனால், ஐ.பி.எல் இல் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களாலயே BLM இயக்கத்திற்கு ஆதரவாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான ஜேசன் ஹோல்டர் 'ஐ.பி.எல் இல் BLM பற்றி ஒரு சிறிய உரையாடல் கூட அரங்கேறவில்லை. அங்கே அது ஒரு பிரச்சனையாக கூட பார்க்கப்படவில்லை என்பது வேதனையாக இருந்தது' எனக் குறிப்பிட்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேரன் ஷமி 'ஐ.பி.எல் இல் நானே நிறவெறி ரீதியிலான கமெண்டுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார். ஆக, ஐ.பி.எல்லும் நிறவெறிக்கு விதிவிலக்கில்லை என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. மேலும், அதிகப்படியான கரீபிய வீரர்கள் ஐ.பி.எல்லில் ஆடியதால் ஐ.பி.எல் தார்மீகரீதியாக அவர்கள் பக்கம் அவர்களுக்கு தோள் கொடுத்து நின்றிருக்க வேண்டும்.

இதே 2020-21 காலக்கட்டத்தில் ஐ.பி.எல் போன்றே ஆடப்படும் மற்ற ப்ரீமியர் லீக் போட்டிகளில் BLM க்கு ஆதரவாக வீரர்கள் முட்டி போட்டு கையை உயர்த்தியிருந்தனர். வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் ப்ரீமியர் லீகில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஸ் லீகில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. பிக்பேஸ் லீகில் ஒரு சில வீரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான வீரர்கள் தாமாக முன்வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த ப்ரீமியர் லீக் போட்டிகளெல்லாம் ஐ.பி.எல்லுக்கு பிறகு தொடங்கப்பட்டவையே. மேலும், இவர்களுக்கு ஐ.பி.எல் அளவுக்கு பார்வையாளர்கள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கையிலும் வியாபாரத்திலும் உச்சத்தில் இருக்கும் ஐ.பி.எல் இல் நிறவெறிக்கு எதிரான குரல் எழுப்பப்பட்டு தோனி, கோலி, ரோஹித் போன்ற வீரர்கள் முட்டி போட்டு கையை உயர்த்தியிருந்தால் அதன் தாக்கம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிதாக இருந்திருக்கும்.

இந்தியாவில் நிறவெறியை விட ஜாதிய மத பிரிவினைவாதங்கள் அதிகம் இருக்கிறது. அதற்கெல்லாம் குரல் கொடுக்காமல் நிறவெறிக்கு எதிராக இந்திய வீரர்கள் கையை உயர்த்துவது பொருத்தமானதாக இருக்காது என ஒரு சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

முட்டி போட்டு கையை உயர்த்துவதை வெறுமென ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை மற்றும் நிறவெறி பிரச்சனையோடு குறுக்கி பார்ப்பவர்களின் சிந்தனையாகவே இது இருக்கிறது. நிறவெறி என்பது பிரிவினைவாதத்தின் ஒடுக்குமுறையின் ஒரு வடிவம் மட்டுமே. ஜாதி, மதம், இனம் என அதற்கு இன்னும் பல வடிவங்கள் இருக்கிறது. அதனால் BLM இயக்கத்தை ஒற்றை வடிவத்தையும் ஒற்றை பிரச்சனையையும் மையப்படுத்தி மட்டுமே அணுகக்கூடாது என நினைக்கிறேன். காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் சம உரிமைக்கான கண்ணித்திற்கான எழுச்சிக்கான குறியீடாகவே முட்டி போட்டு கையை உயர்த்துவதை பார்க்க வேண்டும். அப்படி விசாலமான பார்வையோடு அணுகினால் இந்தியாவில் நிலவும் ஜாதிய மத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இயக்கமாகவும் BLM ஐ நம்மால் கிரகித்துக் கொள்ள முடியும்.

இப்போது கற்பனை செய்து பாருங்கள். தோனி, கோலி, ரோஹித் என இந்தியாவின் சூப்பர் ஹீரோக்கள் ஒரு ஐ.பி.எல் சீசன் முழுவதும் 60 போட்டிகளில் முட்டி போட்டு கையை உயர்த்தியிருந்தால் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் பிசிசிஐ எடுத்திருக்கவில்லை.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக தோள் கொடுக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்த பிசிசிஐ, இப்போது உலகக்கோப்பையில் இந்திய வீரர்களை முட்டி போட்டு கையை உயர்த்தச் சொல்லியுள்ளது. இந்திய வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதைச் செய்திருந்தனர். ஆனால், இது உளப்பூர்வமான ஆதரவாக பார்க்கப்படவில்லை. மற்ற அணிகள் ஆதரவு கொடுக்கும்போது இந்தியா ஆதரவு கொடுக்கவில்லையென்றால் உலக அரங்கில் கெட்ட பெயராகிவிடும் என்பதற்காகவே இப்படி செய்யப்பட்டிருக்கிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

கிரிக்கெட் மீதான இந்திய மக்களின் அதீத ஆர்வம் மட்டுமே பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டாக மாற்றியுள்ளது. அப்படியான நிலையில் BLM போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஓங்கி ஒலிக்கும் இயக்கங்களில் எந்தவித இரண்டாம்கட்ட யோசனையுமின்றி இந்தியா அந்த மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories