விளையாட்டு

“Black Lives இயக்கத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?”: நாளை இன்னிங்ஸில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

ரேசிசம் எந்த வகையில் எந்த பகுதியில் வந்தாலும் வேரறுக்கப்பட வேண்டும்; நாம் பாதிக்கப்படும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை!

“Black Lives இயக்கத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?”: நாளை இன்னிங்ஸில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான சிட்னி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தனது இரண்டாவது இன்னிங்ஸை 312 ரன்களுக்கு டிக்ளேர் செய்து கொண்ட ஆஸி அணி, இந்தியாவுக்கு 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மாபெரும் இலக்கை நோக்கி சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 98-2 என்ற நிலையில் இருக்கிறது.

நேற்றைய நாளை சிறப்பாக முடித்திருந்த லபுஷேனும் ஸ்மித்தும் அதே மாதிரியே ஆட்டத்தை தொடருகிற மனநிலையில் இன்றும் க்ரீஸுக்குள் வந்தனர். இந்தியா சார்பில் பும்ராவும் சிராஜும் முதல் ஸ்பெல்லை வீசினர். பும்ரா வீசிய இரண்டாவது பந்திலேயே லபுஷேன் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுக்க அதை ஹனுமா விஹாரி ட்ராப் செய்தார். ஆஸி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கு இந்தியா வைத்திருக்கும் ஒரே ப்ளான் பேட்ஸ்மேனுக்கு இன்கம்மிங் டெலிவரிகளாக வீசி லெக் சைட் ஃபீல்டர்களிடம் கேட்ச் கொடுக்க வைப்பது.

அதன்படிதான் இந்த பந்தும் லபுஷேனின் உடம்புக்குள் வீசப்பட, அதை அவர் லெக் கல்லியில் நின்று கொண்டிருந்த ஹனுமா விஹாரிக்கு எளிமையான கேட்ச்சாக கொடுத்தார். ஆனால், ஹனுமா விஹாரி அதை ட்ராப் செய்ய இந்தியாவுக்கு இன்றைய நாளே கொஞ்சம் அயர்ச்சியாகத்தான் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தும் லபுஷேனும் இந்தியாவின் லெக் சைட் ப்ளானுக்கு பிடி கொடுக்காதபோதே இந்திய பௌலர்கள் அதே டெலிவரியை தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தனர்.

“Black Lives இயக்கத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?”: நாளை இன்னிங்ஸில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

இன்றைக்கு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அந்த ப்ளானுக்கு கொஞ்சம் பயன் இருப்பது தெரிந்ததால், இன்றைக்கும் அதையே தொடர்வது என்று முடிவெடுத்தனர். சிராஜ், சைனி, பும்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே இதே ப்ளானை வைத்துக்கொண்டு வீசத்தொடங்கினர். இதற்கிடையில் லபுஷேன் தனது அரைசதத்தையும் கடந்தார். லபுஷேன் மட்டுமே இன்றைக்கு கொஞ்சம் வேகமாக ஆடிக்கொண்டிருக்க, ஸ்மித் வழக்கத்தை விட மெதுவாகவே ஆடிக்கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் இந்திய அணியின் அந்த லெக் சைடு ப்ளானுக்கு லபுஷேன் இரையாகி வெளியே சென்றார். சைனி வீசிய 47வது ஓவரில் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தட்டிவிட்டு கீப்பர் ரித்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்தார் லபுஷேன். அவர் 73 ரன்களில் வெளியேற நம்பர் 5–ல் மேத்யூ வேட் வந்தார்.

மேத்யூ வேட் வந்த வேகத்தில் சைனி பந்தில் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு அவர் வீசிய அடுத்த ஓவரிலேயே எட்ஜாகி சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக வந்த கேமரூன் க்ரீன் ஸ்மித்துக்கு சப்போர்ட்டாக விக்கெட் கொடுக்காமல் ஆட, ஸ்மித் ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடித்து அரைசதத்தை கடந்தார். முதல் செஷன் முடிவில் ஆஸி அணி 182/4 என்ற நிலையில் இருந்தது. ஸ்மித் 58 ரன்களை அடித்திருந்தார். கேமரூன் க்ரீன் 20 ரன்களுடன் இருந்தார்.

இரண்டாவது செஷனில் எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியுமோ அவ்வளவு அதிகமாக சேர்த்துவிட்டு இந்தியா மாலை நேரத்தில் ஒரு 30 ஓவர் ஆட வைத்துவிட வேண்டும் என்பதுதான் ஆஸியின் ப்ளான். இது ஸ்மித்தின் அணுகுமுறை மாற்றத்தில் இருந்தே புரிந்தது. முதல் செஷனில் 92 பந்துகளை சந்தித்து 25 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், இரண்டாவது செஷன் தொடக்கத்தில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சரும் பவுண்டரியும் அடித்து மிரட்டினார். 12 பந்துகளில் 23 ரன் எடுத்து வேகமாக சதத்தை நோக்கி முன்னேறிய ஸ்மித் 81 ரன்களில் அஸ்வின் வீசிய ஒரு அட்டகாசமான ஆஃப் ப்ரேக்கில் lbw ஆகி வெளியேறினார்.

“Black Lives இயக்கத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?”: நாளை இன்னிங்ஸில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் அவுட் ஆகிவிட்டதால் அவ்வளவுதான் ஆஸி சீக்கிரம் ஆல் அவுட் ஆகிவிடும் என நினைக்கையில் கேமரூன் வெளுத்தெடுக்க தொடங்கினார். சிராஜ், அஸ்வின், பும்ரா என அத்தனை பேரின் ஓவர்களிலும் சிக்சரும் பவுண்டரியும் அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். கூடவே அணியின் கேப்டன் டிம் பெய்னும் ஒரு சில பவுண்டரிக்களை அடித்து க்ரீனுக்கு நல்ல சப்போர்ட் செய்தார்.

300 ரன்களை சேஸ் செய்வதே கடினம் என்ற நிலையில் கூடுதலாக இவர்கள் சேர்த்த ரன்களையும் இவர்கள் ஆடிய ஆட்டத்தையும் பார்க்கும்போது இந்திய அணிக்கு கதிகலங்கித்தான் போயிருக்கும். சிராஜ் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் எல்லாம் அடித்து மிரட்டிய க்ரீன், பும்ரா வீசிய 87– வது ஓவரில் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து அடுத்த பந்தே எட்ஜ்ஜாகி சஹாவிடம் கேட்ச் கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடித்த க்ரீன் 84 ரன்களில் ஆட்டமிழக்க 312 ரன்களில் ஆஸியும் டிக்ளேர் செய்தது. லீடோடு சேர்த்து 407 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது ஆஸி.

407 ரன்கள் என்கிற மாபெரும் இலக்கை நோக்கி இந்திய அணி பயணப்பட தொடங்கியது. முழுமையாக நான்கு செஷன்களை எதிர்கொள்ள வேண்டிய சவால் இந்திய அணிக்கு இருந்தது. ரோஹித்தும் கில்லும் ஓப்பனர்களாக இறங்கி முதல் இன்னிங்ஸை போலவே ரொம்ப அழகாக ஆட தொடங்கினர். சரியான பந்துகளை மட்டும் பவுண்டரியாக மாற்றி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சிறப்பாக ஆடினர்.

இரண்டு முறை இந்த கூட்டணி அம்பயரின் தவறான முடிவால் சீக்கிரமே வெளியேறும் வாய்ப்பு உருவானது. ஆனால், DRS–ல் இரண்டுமே நாட் அவுட் என வந்ததால் தப்பித்தனர். க்ரீன் வீசிய ஒரு ஷார்ட் பாலை மடக்கி மிட் ஆனில் பவுண்டரியாக்கி கில் அசத்த, இன்னொரு பக்கம் ரோஹித் கவர் ட்ரைவும் புல் ஷாட்டும் அடித்து மிரட்டினார். 20 ஓவர்களை தாண்டிய பிறகுதான் இந்த கூட்டணியை ஆஸியால் பிரிக்க முடிந்தது.

ஹேசல்வுட் வீசிய 23–வது ஓவரில் வீசிய ஸ்ட்ரெய்ட் டெலிவரியை Front foot டிஃபன்ஸ் ஆட முயன்று கில் எட்ஜ்ஜாகி கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் வெளியேறினார். இந்த ஓப்பனிங் கூட்டணி 71 ரன்களை சேர்த்தது. இதன்பிறகு, புஜாரா உள்ளே வந்தார். கடந்த இன்னிங்ஸில் பவுண்டரி அடிப்பதற்கு 100 பந்துகளை செலவிட்ட புஜாரா, இந்த முறை சீக்கிரமே தனது முதல் பவுண்டரியை அடித்துவிட்டார்.

“Black Lives இயக்கத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?”: நாளை இன்னிங்ஸில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

நாதன் லயனின் பந்தில் இறங்கி வந்து பவுண்டரி அடித்த ரோஹித் அரைசதத்தை கடந்தார். அடுத்த ஓவரிலேயே கம்மின்ஸ் ஷார்ட்டாக வீசிய ஒரு பந்தை புல் ஷாட் ஆட முயன்று ஸ்கொயரில் நின்ற ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சரியாக ஃபீல்டரை நிறுத்தி ஆஸி விரித்த ஷார்ட் பால் வலையில் ரோஹித் வீழ்ந்தார். இன்றைய நாள் முடிவதற்கு 4 ஓவர்களே இருந்த நிலையில் இப்படி ஒரு ஷாட் தேவையே இல்லை. இதன்பிறகு ரஹானே உள்ளே வர ரஹானே-புஜாரா கூட்டணி மேற்கொண்டு விக்கெட் விழாமல் இன்றைய நாளை முடித்தது. இறுதியில் இந்திய அணி 98/2 என்ற நிலையில் உள்ளது. வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை.

இந்த டிகேடில் இந்திய அணி செய்த அதிகபட்ச சேஸிங்கே 274 தான். மேலும், சிட்னியில் செய்யப்பட்ட அதிகபட்ச சேஸிங் 288 தான். இந்நிலையில் இந்திய அணி மிகப்பெரிய சவாலைத்தான் நாளை எதிர்கொள்ளப்போகிறது. ட்ராவுக்காக ஆடினாலும் சரி, வெற்றிக்காக ஆடினாலும் சரி ரஹானேவும் புஜாராவும் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

நாளைக்கு இந்தியாவின் சுவர் என போற்றப்பட்ட டிராவிட்டின் பிறந்தநாள். ஈடன் கார்டனிலும் அடிலெய்டிலும் லட்சுமணோடு கூட்டணி போட்டு டிராவிட் ஆடிய அசாத்தியமான இன்னிங்ஸ்கள் எல்லாருக்குமே நினைவிருக்கும். நாளை ரஹானேவும் புஜாராவும் அப்படியொரு இன்னிங்ஸை ஆடிவிட்டால் அது இந்தியாவின் மாபெரும் வீரரான ட்ராவிட்டுக்கு செய்யும் ட்ரிபியுட்டாக கூட அமையலாம்!

ஆஸி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜை சில ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்த, ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, அந்த ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த இனவெறி தாக்குதலுக்கு எதிராக பல வீரர்களும் கடுமையாக எதிர்வினைகளை தெரிவித்து வருகின்றனர். இனவெறி என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுதான் நம் கருத்து.

“Black Lives இயக்கத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?”: நாளை இன்னிங்ஸில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

ஆனால், அந்த இனவெறியால் நாம் பாதிக்கப்படும்போது மட்டும்தான் நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமா? வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரேசிசத்திற்கு எதிராக Black Lives விஷயத்தை பெரிய இயக்கமாக முன்னெடுத்தபோது, கிட்டத்தட்ட கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் அவர்களுக்கு சப்போர்ட் செய்துவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் முட்டி போட்டு கைகளை உயர்த்தி தங்களது தார்மீக ஆதரவை ஒவ்வொரு நாடும் தெரிவித்தது. ஆனால், இந்தியா?

உலகம் முழுவதும் அதிகம் பேரால் பார்க்கப்படும் ஐ.பி.எல் தொடரில் ப்ளாக் லிவ்ஸ் மேட்டருக்காக ஒரு நொடி கூட செலவழிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா மட்டும் ஒரு போட்டியில் சிறப்பாக ஆடிவிட்டு பொல்லார்டை பார்த்து முட்டி போட்டு கையை உயர்த்தி தனது ஆதரவை தெரிவித்திருப்பார்.

இப்போது ஆஸியில் நடத்தப்பட்டு வரும் பிக்பேஷ் லீக் கூட ரேசிசத்திற்கு எதிராக ஆதரவு தெரிவித்து வருகிறது. ஆனால், இந்த சீரிஸில் கூட நாம் ஒன்றும் செய்யவில்லை. ரேசிசம் எந்த வகையில் எந்த பகுதியில் வந்தாலும் வேரறுக்கப்பட வேண்டும். நாம் பாதிக்கப்படும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை!

banner

Related Stories

Related Stories