விளையாட்டு

வில்வித்தையில் இந்திய இணை காலிறுதிக்கு தகுதி.. துப்பாக்கிச்சுடுதலில் ஏமாற்றம்! #Olympics2021

வில்வித்தை (ரீகர்வ்) கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரியும் பிரவீன் ஜாதவும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டனர்.

வில்வித்தையில் இந்திய இணை காலிறுதிக்கு தகுதி.. துப்பாக்கிச்சுடுதலில் ஏமாற்றம்! #Olympics2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

துப்பாக்கிச்சுடுதலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவனும் அபூர்வி சந்தேலாவும் சொதப்பிய நிலையில், வில்வித்தை (ரீகர்வ்) கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரியும் பிரவீன் ஜாதவும் ரவுண்ட் ஆஃப் 16 ல் மிகச்சிறப்பாக குறி வைத்து காலிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டனர்.

நேற்று நடந்த ரேங்கிங் சுற்றில் தீபிகா 9 வது இடமும், பிரவீன் 31 வது இடமும் பெற்றிருந்தனர். கலப்பு இரட்டையர் பிரிவுக்கு இவர்கள் இருவருமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சீன தைபேவுடனான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் இன்று காலை தீபிகா - பிரவீன் இணை மோதியது.

முதல் செட்டை சீன தைபே வென்றிருந்த நிலையில், இரண்டாம் செட் ’டை’ ஆனது. கடைசி இரண்டு செட்டிலும் இந்தியா வென்றது. மூன்றாம் சுற்றின் நான்கு வாய்ப்புகளிலும் வட்டத்தின் மையத்தை துளைத்து முழுமையான 40 புள்ளிகளையும் தீபிகா-பிரவீன் இணை வென்றது.

கடைசி செட்டின் கடைசி 2 வாய்ப்பில் இரண்டிலும் 10 அடித்தால்தான் வெற்றி கிட்டும் என்ற நிலையில், குறிதவறாமல் வட்டத்தின் மையத்தை துளைத்து மிகச்சிறப்பாக வென்றது இந்திய இணை.

ரவுண்ட் ஆஃப் 16யில் சீன தைபேவை வென்றதன் மூலம் எட்டு அணிகள் பங்குபெறும் காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றது இந்திய அணி. இதன் மூலம் வில்வித்தையில் பதக்க நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது.

வில்வித்தை போட்டிக்கு முன்பாக பெண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் இளவேனில் வாலறிவனும் அபூர்வி சந்தேலாவும் களமிறங்கினர்.

இவர்கள் இருவர் மீதுமே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இருவருமே கூட இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்று பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருமே சொதப்பியிருக்கின்றனர்.

50 வீராங்கனைகள் பங்குபெற்ற இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பெறுபவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற முடியும். இளவேனில் வாலறிவன் 626.5 புள்ளிகளை பெற்று 16 வது இடத்தையும், அபூர்வி சந்தேலா 621.9 புள்ளிகளை பெற்று 36வது இடத்தையும் பிடித்தார். மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

பெரிய எதிர்பார்ப்பில்லாத வில்வித்தையில் இந்திய அணி அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியிருப்பதே தற்போதைய ஆறுதல்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories