விளையாட்டு

கொரோனா பாதிப்பை மறைத்த BCCI... இங்கிலாந்து தொடருக்கு பாதிப்பு ஏற்படுமா?

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் இந்திய அணியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து தொடருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

கொரோனா பாதிப்பை மறைத்த BCCI... இங்கிலாந்து தொடருக்கு பாதிப்பு ஏற்படுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் இந்திய அணியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பு செய்தியாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன? கொரோனா பாதிப்பால் இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

இந்திய அணி கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்தே இங்கிலாந்தில்தான் தங்கியிருக்கிறது. ஜூன் 18 ம் தேதி நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுவதற்காக இரண்டு வார குவாரண்டைனில் இருந்தது. இங்கிலாந்து செல்வதற்கு முன்பாகவே இந்தியாவிலும் குவாரண்டைனிலேயே இருந்தது. தொடர்ச்சியான கட்டுப்பாடுமிக்க குவாரண்டைனால் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை கொரோனா பாதிப்பின்றி வெற்றிக்கரமாக முடித்திருந்தது இந்திய அணி.

இதன்பிறகுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. ஜூன் 23 ம் தேதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதிதான் என்பதால், அவ்வளவு நாட்களுக் குவாரண்டைனில் இருக்க முடியாது என்பதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வீரர்கள் சுதந்திரமாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். குவாரண்டைன் தளர்த்தப்பட்டாலும் பெரும்பாலான வீரர்கள் சுயக்கட்டுப்பாட்டோடு தற்காப்பாக இருந்தனர். ஆனால், சில வீரர்கள் கொஞ்சம் கூடுதல் சுதந்திரத்தோடு நெரிசல்மிக்க பகுதிகளுக்கு ஜாலியாக விசிட் அடித்தனர்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் யூரோ கால்பந்து போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார். பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காணச் சென்றிருந்தார். இதெல்லாம் கொரோனா தொற்று பரவ சாதகமாக அமைந்துவிட்டது. இப்போது ரிஷப் பண்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடன் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த தயானந்த் ஹரணி என்பவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ரிஷப் பண்ட்டுடன் நெருக்கமாக இருந்த அபிமன்யூ ஈஸ்வரன், விருத்திமான் சஹா, பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே ரிஷப் பண்ட்டிற்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனால், பிசிசிஐ அப்போது இது குறித்து வாயே திறக்கவில்லை. இப்போது ரிஷப் பண்டின் குவாரண்டைனே முடிய இருக்கும் நிலையிலேயே பிசிசிஐ அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது ஐ.பி.எல்லை விடாப்பிடியாக நடத்தி கெட்ட பெயரை சம்பாதிருந்தது பிசிசிஐ. இப்போது, இங்கிலாந்துக்கு சென்றும் வீரர்களின் குவாரண்டைனை முறையாக திட்டமிடாமல் சொதப்பியிருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு இன்னமும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கிறது. அதனால், இந்த கொரோனா பாதிப்பால் அந்த தொடருக்கு எந்த சிக்கலும் இருக்காது என்றே தெரிகிறது. தொடர்ச்சியாக குவாரண்டைனில் இருப்பது வீரர்களுக்கு அயர்ச்சியையும் சோர்வையுமே ஏற்படுத்தும். ஆனால், அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டுதானே கிரிக்கெட் ஆடச் செல்கிறார்கள். அதனால் கொஞ்சம் கூடுதல் பொறுப்போடுதான் இருந்தாக வேண்டும்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories