விளையாட்டு

கவுண்டி போட்டியில் களமிறங்கும் அஷ்வின்... இங்கிலாந்து தொடரில் கலக்குவாரா?

கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய வீரர் அஷ்வின் முடிவெடுத்துள்ளார்.

கவுண்டி போட்டியில் களமிறங்கும் அஷ்வின்... இங்கிலாந்து தொடரில் கலக்குவாரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்து தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்திலேயே தங்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னோட்டமாக கவுண்டி போட்டியில் ஆடலாம் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் முடிவெடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ல் தொடங்க இருக்கிறது. இந்திய அணியினர் இப்போது கோவிட் கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக இருக்கின்றனர். வருகிற ஜுலை 14 லிருந்தே பயோ பபிளுக்குள் செல்ல இருக்கின்றனர்.

ஜுலை 11-14 இந்த நாட்களில், அதாவது இந்திய அணி பயோ பபிளுக்குள் செல்வதற்கு முன்பாகவே நடைபெற இருக்கும் ஒரு கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்தான் அஷ்வின் ஆடுவதாக முடிவெடுத்துள்ளார். சர்ரே அணிக்கும் சோமர்செட் அணிக்கும் இடையேயான இந்தப் போட்டியில் அஷ்வின் சர்ரே அணிக்காக களமிறங்குகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் ஆட வேண்டியிருப்பதால், இங்கிலாந்து சூழலில் நல்ல பயிற்சி வேண்டும் என்பதற்காக அஷ்வின் இந்த முடிவை எடுத்துள்ளார். அஷ்வினுக்கு கவுண்டி போட்டிகள் ஒன்றும் புதிதில்லை. இதற்கு முன்பாகவே கவுண்டி போட்டிகளில் ஆடி 54 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

கவுண்டி போட்டியில் களமிறங்கும் அஷ்வின்... இங்கிலாந்து தொடரில் கலக்குவாரா?

ஆஃப் ஸ்பின்னரான அஷ்வின் இந்தியாவில் சிறப்பாக பந்து வீசி பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால், வெளிநாடுகளில் பெரிய சாதனைகளைச் செய்ததில்லை. குறிப்பாக, இங்கிலாந்தில் 7 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கோலி-சாஸ்திரி கூட்டணியே வெளிநாடுகளில் அஷ்வினை ஒதுக்கி வைத்தது. அப்போதுதான் இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுண்ட்டி போட்டிகளில் ஆடும் முடிவை எடுத்தார் அஷ்வின்.

டியுக்ஸ் வகை பந்தில் இங்கிலாந்து சூழலில் கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவம் அஷ்வினை மெருகேற்றியது. இது வெளிநாடுகளில் அவர் சிறப்பாக வீசவும் வழி வகுத்தது. சில மாதங்களுக்கு முன்பு முடிந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக வீசியிருந்தார். சமீபத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கடைசி நாளில் அஷ்வின் மட்டுமே சிறப்பாக வீசி நியுசிலாந்துக்கு கொஞ்சமாவது தடுமாற்றம் கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு கவுண்டி போட்டியில் ஆடும் முடிவை அஷ்வின் எடுத்திருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்திய அணி வீரர்கள் இரண்டு பயிற்சி போட்டியில் மட்டுமே ஆடும் திட்டமிருக்க, அஷ்வின் மட்டும் கூடுதலாக கவுண்டி போட்டியிலும் ஆடவிருக்கிறார்.

நியுசிலாந்திடம் இந்திய அணி தோற்றதற்கு, மேட்ச் ப்ராக்டீஸ் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதனாலயே இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஆடவிருக்கிறது. அஷ்வின் கவுண்டி போட்டியில் ஆடவிருக்கிறார். இந்த அனுபவத்தை இங்கிலாந்துக்கு எதிராக அஷ்வின் இன்னும் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories