விளையாட்டு

ரசிகர்களின் ஏமாற்றம்.. சச்சினின் ஐடியா.. மழையால் ரத்தான முதல் நாள் - அடுத்து என்னவாகும்? #WTCFinals

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று தொடங்கவிருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களின் ஏமாற்றம்.. சச்சினின் ஐடியா.. மழையால் ரத்தான முதல் நாள் - அடுத்து என்னவாகும்? #WTCFinals
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா மற்றும் நியுசிலாந்தை கடந்து உலகமெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேருமே இந்த ஒரு போட்டிக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தனர். ஆனால், இங்கிலாந்தில் பெய்து வரும் தொடர் மழையால் டாஸ் கூட போடப்படாமலேயே முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இது இங்கிலாந்தின் சம்மர் சீசன் என சொல்லப்பட்டாலும் மழையின் குறுக்கீடு ஆட்டத்தில் எப்போதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து நியுசிலாந்து தொடரில் கூட மழை பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தது. ப்ளாட் ட்ராக்காக பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த பிட்ச் மழையின் காரணமாக தன்மை மாறி பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியிருந்தது. இதனால் சொந்த நாடான இங்கிலாந்தே பேட்டிங்கில் கடுமையாக திணறியது. இந்த தொடரையும் நியுசிலாந்திடம் இழந்தது.

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையிலும் மழை ஒரு தனி ஆட்டத்தை ஆடியிருந்தது. கிட்டத்தட்ட 5 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் ரிசர்வ் டே வரை சென்றிருந்தது. இந்த போட்டியில் இந்தியா தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருந்தது.

இதனாலயே இங்கிலாந்தில் வைத்து ஐ.சி.சி யின் பெரிய தொடர்களை நடத்த வேண்டாம் என ரசிகர்கள் ஐ.சி.சிக்கு கோரிக்கை வைத்து வருகின்றன.

ரசிகர்களின் ஏமாற்றம்.. சச்சினின் ஐடியா.. மழையால் ரத்தான முதல் நாள் - அடுத்து என்னவாகும்? #WTCFinals

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் ரிசர்வ் டே வைத்துள்ளது ஐ.சி.சி. ஆனால், போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டனில் தொடர்ந்து மழை இருக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் கூட தடைபடலாம் என்கிற செய்தியே வெளியாகியுள்ளது.

இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு விஷயத்தை பேசியிருந்தார். 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியாக இல்லாமல் இறுதி தொடராக இருக்க வேண்டும். ஒரு போட்டிக்கு பதிலாக பெஸ்ட் ஆப் 3 பாணியில் போட்டிகள் நடைபெற வேண்டும். அடுத்தடுத்த சீசன்களில் ஐ.சி.சி இதைப்பற்றி யோசிக்க வேண்டும்' என பேசியிருந்தார். சச்சினின் இந்த ஐடியாவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பெஸ்ட் ஆப் 3 என வரும்போது ஒரு போட்டி மழையால் தடைப்பட்டாலும் மற்ற போட்டிகளை வைத்து வெற்றியாளரை தீர்மானித்து விட முடியும். பல தரப்பிலிருந்தும் இந்த யோசனை முன் வைக்கப்படுவதால் ஐ.சி.சி இது குறித்து யோசிக்கும் என்றே தெரிகிறது.

போட்டி தொடங்குவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்திய அணி தனது ப்ளேயிங் லெவனை அறிவித்துவிட்டது. அந்த ப்ளேயிங் லெவனில் அஷ்வின், ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், நேற்று முழுவதும் மழை பெய்திருப்பதால் பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்க மறுக்கும். இதனால் இந்திய அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. மழையால் பிட்ச்சின் தன்மை மாறியிருப்பதால் 2 ஸ்பின்னர்கள் தேவையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்களின் ஏமாற்றம்.. சச்சினின் ஐடியா.. மழையால் ரத்தான முதல் நாள் - அடுத்து என்னவாகும்? #WTCFinals

இந்திய அணி டாஸுக்கு முன்பாக தனது ப்ளேயிங் லெவனை மாற்றிக்கொள்ள முடியும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி தனது தேர்வில் உறுதியாக இருக்கும்பட்சத்தில் மாற்றத்திற்கான தேவை எழாது. இல்லையேல் அஷ்வின் அல்லது ஜடேஜாவுக்கு பதில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணிக்குள் வருவார்.

இரண்டாம் நாளான இன்று லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இன்றையை நாள் ஆட்டம் நடைபெற்று விடும் என்றே ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories