விளையாட்டு

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முனைப்பு: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்படி இருக்கும்? 

இந்தியா இங்கிலாந்து என இரு அணிகளும் முட்டிமோத தயாராக இருக்கும் நிலையில் எந்த அணி ஆதிக்கம் செல்லுத்தப்போகிறது என்பது குறித்த ஒரு சிறு அலசலை இங்கு காண்போம்.

 இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முனைப்பு: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்படி இருக்கும்? 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. 2-1 என இந்திய அணி முன்னிலையில் இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற இந்த போட்டியை குறைந்தப்பட்சம் டிரா செய்ய வேண்டும்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோற்றிருப்பதால் இந்த போட்டியை இங்கிலாந்து வீரர்கள் கௌரவப் பிரச்சனையாகவே பார்க்கின்றனர். எப்படியாவது வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துவிட வேண்டும் என்பதே இங்கிலாந்தின் எண்ணமாக இருக்கிறது. இரு அணிகளும் முட்டிமோத தயாராக இருக்கும் நிலையில் எந்த அணி ஆதிக்கம் செல்லுத்தப்போகிறது என்பது குறித்த ஒரு சிறு அலசலை இங்கு காண்போம்.

இந்தத் தொடரின் தொடக்கத்தில் இருந்தே பிட்ச்களைப் பற்றிக் கடுமையான சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து பெரிய வெற்றியை பெற்றிருந்தது. 'தார் ரோட்டில் பந்து வீசுவதை போல பிட்ச் இருந்தது' என இஷாந்த் சர்மா வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.

அடுத்த இரண்டு போட்டிகளுமே முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்திய அணியின் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் வெகுவாக தடுமாறினர். பிங்க் பால் டெஸ்டில், புற்கள் நிரம்பிய புதிய மைதானம் என நினைத்து 3 வேகப்பந்து வீச்சாளர்களோடும் ஒரே ஒரு ஸ்பின்னருடனும் களமிறங்கி கடந்த போட்டியில் இங்கிலாந்து கடுமையான ஏமாற்றம் அடைந்திருந்தது.

நாளையும் பிட்சில் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. பேட்டிங்குக்கும் சாதகமான வகையில் பிட்ச் அமைக்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வந்தாலும் ஸ்பின்னர்களுக்கும் ஒத்துழைக்கும் வகையில்தான் இருக்கப்போகிறது.

கடந்த போட்டியில் பௌலிங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பேட்டிங்கில் தடுமாறவே செய்திருந்தது. ஓப்பனர்களான ரோஹித்தும் கில்லும் இன்னும் கூடுதல் புரிதலுடன் நீண்ட நேரம் ஆடிக்கொடுக்க வேண்டும். கோலி சதம் அடித்து பல மாதங்கள் ஆகிவிட்டதால் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முனைப்பு: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்படி இருக்கும்? 

இந்தப் போட்டியில் கோலியிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வந்துவிட்டாலே இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஏறக்குறைய நுழைந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம். ரஹானே, சீரற்ற ஃபார்மினால் தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். மிடில் ஆர்டரில் நின்று சீனியர் வீரராக, மெல்பர்னில் ஆடியதை போல பொறுப்பான இன்னிங்ஸை ஆடியே ஆக வேண்டும்.

வேகப்பந்து வீச்சாளர்களே தேவையில்லை என்கிற ரீதியில்தான் ஆடுகளங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கவே செய்வார்கள். பும்ரா இந்த போட்டியிலிருந்து விலகியிருப்பதால் சிராஜை அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கலாம்.

மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கும் உமேஷ் யாதவ் விளையாடுவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. அஷ்வின், அக்சர் படேல் ஆகியோர்தான் இந்த போட்டியிலும் ட்ரம்ப் கார்டாக இருக்கப்போகிறார்கள். வாஷிக்கு அவ்வளவாக ஓவர்கள் கொடுக்கப்படாவிட்டாலும் பேட்டிங்கிற்காக வாஷியே இந்தப்போட்டியிலும் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

இங்கிலாந்தைப் பொருத்தவரை, கடந்த போட்டியில் ஒரே ஒரு ஸ்பின்னருடன் வந்து ஏமாந்திருந்தது. மொயீன் அலியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டதால் இந்த முறை ஜேக் லீச்சுடன் டாம் பெஸ்ஸை இறக்குவார்கள் என்று தெரிகிறது. ஆண்டர்சன், பிராட் இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம்.

பேட்டிங்தான் இங்கிலாந்துக்குப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. கேப்டன் ரூட்டைத்தான் பெரியளவில் நம்பியிருந்தது இங்கிலாந்து. ஆனால், அவர் முதல் போட்டியில் ஆடியளவுக்கு கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆடவில்லை. சிப்லேவும் அப்படியே. பேர்ஸ்ட்டோ, பென் ஸ்டோக்ஸ், போப் ஆகியோரெல்லாம் இன்னும் தங்களின் முழுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆடவில்லை.

ஜேக் க்ராளி கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடியிருந்தார் ஆனால், நின்று நிதானமாக பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். எந்த பந்து திரும்புகிறது, எந்த பந்து நேராக வருகிறது என்பதில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. அதிகமாக ஸ்வீப்புக்கு மட்டுமே முயலாமல் ஃபூட் வொர்கை நம்பி டிஃபன்ஸில் அதிகம் கவனம் செலுத்தினால் ஸ்பின்னை இன்னும் சிறப்பாக எதிர்கொள்ளலாம். சென்னையில் முதல் டெஸ்டில் ஆடியதை போல பேட்டிங் ஆடினால்தான் இங்கிலாந்து இந்தப் போட்டியை வெல்வது குறித்து நினைக்க முடியும்.

இப்போதைய நிலைமையை வைத்துப்பார்க்கும் போது இந்தியா எளிமையாக இந்தத் தொடரை வென்று நியுசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஆட தகுதிப்பெற்றுவிடும் என்றே தெரிகிறது. ஆனால், இங்கிலாந்து அவ்வளவு சுலபமாக தோல்வியை ஒத்துக்கொள்ளாது. நாளை இந்தியாவை கூடுதல் முனைப்புடன் எதிர்கொண்டு தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றே நினைக்கும். ஒரு சிறப்பான தரமான டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது!

இந்தப் போட்டியின் முடிவைப் பொறுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்படி இருக்கும்?

இந்தியா வெற்றி - நியூசிலாந்து vs இந்தியா

டிரா - நியூசிலாந்து vs இந்தியா

இங்கிலாந்து வெற்றி - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

banner

Related Stories

Related Stories