விளையாட்டு

சச்சின் முதல் தோனி வரை.. சென்னை சேப்பாக்கத்தில் இந்திய வீரர்களின் சிறந்த அதிரடி ஆட்டங்கள் !

சேப்பாக்கத்தில் இந்திய வீரர்களின் சில சிறந்த பெர்ஃபார்மென்ஸ்..

சச்சின் முதல் தோனி வரை.. சென்னை சேப்பாக்கத்தில் இந்திய வீரர்களின் சிறந்த அதிரடி ஆட்டங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியாவுடைய பழமையான கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியமும் ஒன்று. இந்திய வீரர்கள் பலரின் பிடித்தமான ஸ்டேடியங்களின் பட்டியலில் சேப்பாக்கத்துக்குதான் முதலிடம் இருக்கும். இங்கே இப்போது முதல்முறையாக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இந்திய வீரர்களின் சில சிறந்த பெர்ஃபார்மென்ஸ்களை இங்கே பார்ப்போம்.

சச்சின் 136 Vs பாகிஸ்தான் (1999)

90களில் இந்தியாவுக்காக சச்சின் மூலம் வந்த ஹீரோயிக் இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.

1999–ல் பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்தபோது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 238 ரன்களை அடிக்க, இந்திய அணி 254 ரன்களை அடித்திருக்கும். 16 ரன்கள் லீட். இந்த முதல் இன்னிங்ஸில் சச்சின், சக்லைன் முஷ்டக் பந்து வீச்சில் டக் அவுட் ஆகியிருப்பார். இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் முடிக்கும்போது இந்தியாவுக்கு 271 ரன்கள் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது.

சடகோபன் ரமேஷ், லக்ஷ்மண், கங்குலி, அசாருதீன் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆக ட்ராவிட்டும் 10 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றியிருப்பார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சச்சின் இந்த இன்னிங்ஸில் மோங்கியாவுடன் கூட்டணி போட்டு அணியை மீட்டெடுக்க தொடங்கினார். டாப் ஆர்டர் மொத்தமும் சொதப்பிய நிலையில் சச்சின் தன்னுடைய கெரியரில் ஆகச்சிறந்த ஒரு இன்னிங்ஸை ஆடினார். நின்று நிதானமாக பாகிஸ்தானின் பௌலிங் அட்டாக்கை ஒரு கை பார்த்த சச்சின் டார்கெட் நெருங்கும்போது கொஞ்சம் வேகமெடுக்க தொடங்கினார்.

சச்சின் முதல் தோனி வரை.. சென்னை சேப்பாக்கத்தில் இந்திய வீரர்களின் சிறந்த அதிரடி ஆட்டங்கள் !

அந்நேரத்தில் சச்சினுக்கு காயம் ஏற்பட, சுனில் ஜோஷி 'நான் ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுக்கு செல்கிறேன்' என சொல்ல, சச்சின் அதை மறுத்து தொடர்ந்து பவுண்டரிகளை அடித்துவிட்டு, மீண்டும் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயல்கையில், சக்லைன் முஷ்டக் பந்திலேயே வாசிம் அக்ரமிடம் கேட்ச் ஆனார். 273 பந்துகளில் 136 ரன்களை எடுத்து ஆட்டத்தையே முழுமையாக மாற்றிவிட்டு சச்சின் வெளியேறியபோது இந்திய அணிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கையில் 3 விக்கெட்டுகள் இருந்தது. ஆனாலும், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணி தோற்றாலும், பாகிஸ்தான் அணிக்காக சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஸ்போர்ட்ஸ் குறித்த தங்களின் மேம்பட்ட அறிவை வெளிப்படுத்தியிருப்பர்.

சேவாக் 319 vs தென் ஆப்பிரிக்கா (2008)

முழுக்க முழுக்க எந்த பயமும் பதற்றமுமற்ற ஒரு டிபிகல் சேவாக் இன்னிங்ஸ் இது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹோம் சீரிஸின் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சென்னையில் வைத்து நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி சார்பில் க்ரீம் ஸ்மித், மெக்கன்சி, மார்க் பவுச்சர் அரைசதம் அடிக்க, ஹசிம் ஆம்லா 159 ரன்களை அடித்து ஸ்கோரை 540 ஆக உயர்த்தியிருப்பார்.

இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்ஸை ஜாஃபரும் சேவாக்கும் தொடங்கினர். வழக்கம் போல தனது பாணியில் பவுண்டரியுடன் சேவாக் தொடங்க, இனிமேல் நமக்கென்ன வேலை இருக்கிறது என ஜாஃபர் இன்னொரு எண்டில் கட்டையைப் போட்டு வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டார். ஸ்டெய்ன், நிதினி, மோர்னே மார்கெல், காலிஸ் என பாரபட்சமேயின்றி அத்தனை பேரையும் வெளுத்து வாங்கினார். டி20 போட்டிகளை போல ஓவருக்கு 15-16 ரன்களையெல்லாம் அசால்ட்டாக அடித்தார் வீரு.

சச்சின் முதல் தோனி வரை.. சென்னை சேப்பாக்கத்தில் இந்திய வீரர்களின் சிறந்த அதிரடி ஆட்டங்கள் !

90..190 ஆகிய நிலைகளில் இருக்கும் போதெல்லாம் அவருடைய வழக்கமான பாணியில் எந்த பதற்றமுமின்றி சிக்சர்தான். ஒரு எண்டில் டிராவிட் தன் பாணியில் உருட்ட, இன்னொரு பக்கம் சேவாக் சூறாவளியாக பவுண்டரி அடித்துக்கொண்டிருந்தார். 278–வது பந்தில் தனது இரண்டாவது முச்சதத்தை சென்னையில் வைத்து பதிவு செய்தார் சேவாக். இறுதியில் 319 ரன்னில் நிதினி பந்துவீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த இன்னிங்ஸில் மட்டும் 42 பவுண்டரிகள் 5 சிக்சர்கள். ஸ்ட்ரைக் ரேட் 104.93.

சச்சின் 103 Vs இங்கிலாந்து (2008-09)

சச்சின் சென்னையில் வைத்து மட்டும் 5 சதங்களை அடித்திருக்கிறார். அதில், இது ரொம்பவே முக்கியமான ஒன்று. 2008–ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வைத்து நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. தோனி மட்டுமே ஒரு அரைசதம் அடித்திருப்பார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 75 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி 387 ரன்களை இந்தியாவுக்கு டார்கெட் செட் செய்தது.

முதல் இன்னிங்ஸில் மொத்தமாக சொதப்பி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி கடைசி 4 செஷன்களில் 387 ரன்களை எடுக்க வேண்டும். சேவாக்-கம்பீர் கூட்டணி சிறப்பான தொடக்கம் கொடுத்து அவுட் ஆகிவிட சச்சின்-யுவராஜ் கூட்டணி நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கும். சச்சின் மெதுவாக நின்று வழக்கம்போல தன்னுடைய ஆட்டத்தை ஆட யுவராஜ் அதிரடியாக ஆடியிருப்பார். கடைசியில் வின்னிங் ஷாட்டாக ஒரு பவுண்டரி அடித்து சச்சினும் தனது சதத்தை நிறைவு செய்திருப்பார். இந்தியாவில் வைத்து இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங் இதுதான்.

சச்சின் முதல் தோனி வரை.. சென்னை சேப்பாக்கத்தில் இந்திய வீரர்களின் சிறந்த அதிரடி ஆட்டங்கள் !

தோனி 224 Vs ஆஸ்திரேலியா (2013)

டெஸ்ட் போட்டிகளில் தோனியின் பெஸ்ட் இன்னிங்ஸ் இதுதான். நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் வைத்து நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸி 380 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருக்கும். இந்தியா சார்பில் கோலி சதம் அடித்து அவுட் ஆகிவிடுவார். காலையில் முதல் செஷனில் உள்ளே வந்த தோனி அன்றைய நாள் முடிவதற்குள் இரட்டை சதத்தை அடித்துவிடுவார். வழக்கமாக முதலில் மெதுவாக தொடங்கும் தோனி இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே அதிரடியாக தொடங்கிவிடுவார்.

'இது டெஸ்ட் மேட்ச் போன்று இல்லை தோனி ODI-டி20 மூடுக்கு சென்றுவிட்டார்' என கமென்ட்ரி பாக்ஸிலும் குதூகல குரல்கள் ஒலித்தன. வாட்சனின் டெலிவரிகளையெல்லாம் ஸ்பின்னரை போல முட்டி போட்டு லாங் ஆஃபில் சிக்சராக்கியிருப்பார். ஸ்டார்க் பௌலிங்கில் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்து மிரட்டியிருப்பார். டெஸ்ட் போட்டியில் தோனியிடம் இப்படி ஒரு பெரிய இன்னிங்ஸை அவரது ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். அது, அவரின் ஆஸ்தான மைதானமான சென்னையில் வைத்தே வந்தது. 24 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் அடித்து 224 ரன்களை எடுத்து அந்த போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதையும் வென்றிருப்பார் MSD.

கருண் நாயர் 303 Vs இங்கிலாந்து (2016)

இதுதான் சென்னையில் வைத்து நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி. இந்த சீரிஸில் அறிமுகமான கருண்நாயரின் 3வது போட்டி இது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 477 ரன்களை எடுத்திருக்கும். பதிலுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 759 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்திருக்கும். ஓப்பனரான ராகுல் 199 ரன்களில் அவுட் ஆகியிருப்பார். இதே இன்னிங்ஸில்தான் கருண் நாயர் முச்சதம் அடித்தார். சேவாக்குக்கு பிறகு இந்திய வீரர் ஒருவர் அடித்த முச்சதம் இதுவே. அதையும் தனது அறிமுக சீரிஸிலேயே அடித்து சாதனை செய்தார் கருண் நாயர். முதலில் கொஞ்சம் தடுமாற்றத்துடன் ஆடியிருப்பார் கருண் நாயர். ஒரு சில கேட்ச்சுகளும் ட்ராப் ஆகியிருக்கும். ஆனால், அவர் சதம் அடித்த பிறகு எந்த தடுமாற்றமும் இன்றி அழகாக ஆர்த்தோடாக்ஸ் ஷாட்களை ஆடி அசத்தியிருப்பார். இந்த சீரிஸை ஏற்கனவே வென்றுவிட்டதால் இந்த போட்டியில் கருண்நாயர் முச்சதம் அடிக்கும் வரைக்கும் கேப்டன் கோலியும் டிக்ளேர் செய்யாமல் இருந்தார்.

banner

Related Stories

Related Stories