விளையாட்டு

“உடம்பில் அடிவாங்கியதும் ஒரு ஸ்ட்ரேட்டஜிதான்” - ஆஸி. அனுபவங்கள் குறித்து பகிரும் புஜாரா!

ஆஸி அனுபவங்கள் குறித்து புஜாரா பேசியதிலிருந்து சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே..

“உடம்பில் அடிவாங்கியதும் ஒரு ஸ்ட்ரேட்டஜிதான்” - ஆஸி. அனுபவங்கள் குறித்து பகிரும் புஜாரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியை வெல்ல சுப்மன் கில் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோரின் அட்டாக்கிங் கிரிக்கெட் எவ்வளவு உதவியதோ, அதே அளவுக்கு புஜாராவின் டிஃபன்ஸிவ் ஆட்டமும் உதவியிருக்கிறது. ப்ரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸி வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களை உடம்பில் வாங்கி, காயம்பட்டும் விக்கெட்டை விடாமல் கடுமையாக போராடியிருப்பார். இப்போது இந்தியா திரும்பியிருக்கும் புஜாரா அந்த ஆஸி அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார். அவர் பேசியதிலிருந்து சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே...

'அடிலெய்டில் இரண்டு நாட்கள் சிறப்பாக ஆடிய பிறகு மூன்றாவது நாளில் அவ்வளவு மோசமாக ஆடியது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து இப்படி ஒரு வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னுடைய கெரியரில் நான் பார்த்த சிறந்த கம்பேக் இதுதான்.

ப்ரிஸ்பேன் டெஸ்ட்டின் 5 வது நாளில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான திட்டமிடல் என்னிடம் இருந்தது. ஆஸி வெல்ல வேண்டுமாயின் முதல் செஷனில் முக்கியமான விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அதற்காக அவர்கள் கடுமையாக முயற்சி செய்தார்கள். ஆனால், நாங்கள் அந்த செஷனை சிறப்பாக முடித்தோம். நான் சில அடிகளை வாங்கினேன். ஒரு எண்டிலிருந்து வீசும்போது மட்டும் சீரற்ற பவுன்ஸ் அதிகமாக இருந்தது. இதை ஆஸியினர் பேட்டிங் செய்யும்போதே நான் கவனித்து வைத்திருந்தேன். கடைசி நாளில் அந்த எண்டை நான் அதிகமாக எடுத்துக்கொண்டு ஆஸியின் பவுன்ஸ்களை சமாளித்தேன்.

“உடம்பில் அடிவாங்கியதும் ஒரு ஸ்ட்ரேட்டஜிதான்” - ஆஸி. அனுபவங்கள் குறித்து பகிரும் புஜாரா!

ஆஸியின் லபுஷேன், வேட் போன்றவர்கள் பவுன்ஸிங் பந்தை அட்டாக் செய்ய முயன்று அவுட் ஆனதை பார்த்திருந்தேன். அதனால், நான் புல் ஷாட்களை ஆடி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இரண்டு பவுண்டரிகள் அடிப்பதை விட என்னுடைய விக்கெட் விழாமல் இருப்பது முக்கியம் என உணர்ந்திருந்தேன்.

மேலும், அதற்காக முழுமையாக டிஃபன்ஸ் ஆட முயன்றாலும் பவுன்ஸினால் எட்ஜ்ஜாக வாய்ப்பிருக்கிறது. ஸ்மித் அப்படி டிஃபன்ஸ் ஆட முயற்சி செய்துதான் எட்ஜ் ஆனார். அதனாலயே அதிகமான பந்துகளை உடம்பில் வாங்கினேன். தொடர்ந்து அடிபட்டு கொண்டே இருந்தது என்னுடைய மன உறுதியை சோதித்து பார்க்கும் வகையில் அமைந்தது.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சிக்கலாம். ஆனால், மைதானத்தில் அணிக்கு என்ன தேவையோ, அதைத்தான் நான் செய்ய முடியும். மெல்பர்ன் போட்டிக்காக பயிற்சியில் இருக்கும் போதே எனக்கு விரலில் அடிபட்டுவிட்டது. சிட்னியிலும் ப்ரிஸ்பேனிலும் நான்கு விரலில்தான் பேட்டை பிடித்துக்கொண்டிருந்தேன். அதே விரலில் மீண்டும் அடிபடும்போது அந்த வலியை சமாளித்து ஆடுவதற்கு கடினமாக இருந்தது.

“உடம்பில் அடிவாங்கியதும் ஒரு ஸ்ட்ரேட்டஜிதான்” - ஆஸி. அனுபவங்கள் குறித்து பகிரும் புஜாரா!

அரைசதத்தை கடந்து, கடந்த ஆஸி சீரிஸை போல பெரிய இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பு அமையவில்லை. அப்படியிருந்திருந்தால் ஸ்ட்ரைக் ரேட் இன்னும் கூடியிருக்கும். பேட் கம்மின்ஸ் என்னை 5 முறை வீழ்த்தியிருக்கிறார். டெஸ்ட்டில் நம்பர் 1 பௌலரான அவருக்கு நாம் உரிய க்ரெடிட்டை கொடுத்தே ஆக வேண்டும். சிட்னியிலும் ப்ரிஸ்பேனிலும் ரன்கள் அடித்த பிறகு அவரின் பல நல்ல பந்துகளை சிறப்பாக சமாளித்த பிறகுதான் அவுட் ஆகியிருந்தேன் என்பதால் அதை பெரிய பின்னடைவாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

ரோஹித்தும் சுப்மனும் ஓப்பனிங்கில் அதிரடியாக ஆடுவது எனக்கு அதிக சௌகரியத்தை கொடுக்கிறது. அது என்னுடைய இயல்பான ஆட்டத்தை இன்னும் இயல்பாக ஆட வைக்கிறது. சேவாக்குடன் ஆடும்போது அவர் எதிரணியினரை அட்டாக் செய்து அவர்கள் மீது அழுத்தம் உண்டாக்கிவிடுவார். அதேமாதிரிதான் இந்த ஓப்பனிங் கூட்டணியும் செய்கிறது." என்றார் புஜாரா.

banner

Related Stories

Related Stories