விளையாட்டு

புஜாரா : T20 யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவை உணர்ந்து விளையாடும் வீரன்!

புஜாராவின் ஆட்டத்தைப் புரிந்துகொள்ளா டெஸ் கிரிக்கெட்டின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

புஜாரா : T20 யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவை உணர்ந்து விளையாடும் வீரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சேவாக்குக்கு பிறகு ப்ரித்திவி ஷாதான் அந்த இடத்தை முழுமையாக நிரப்பப்போகிறார் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தோம். முதல் ஒரு சில போட்டிகளில் ப்ரித்திவி ஷாவின் ஆட்டத்தில் அதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. ஆனால், இப்போது அவரின் ஆட்டமுறை பெரியளவில் விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆஸி சீரிஸுக்கு பிறகு அவரை அடுத்த சேவாக் என யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேமாதிரிதான், தோனியின் இடத்தை ரிஷப் பன்ட் நிரப்புவார் என எதிர்பார்த்தார்கள்; அவரும் பெரும்பாடுபட்டு இப்போதுதான் செட்டில் ஆகியிருக்கிறார்.

போன தலைமுறையில் லெஜண்டுகளாக போற்றப்பட்ட வீரர்களின் வழித்தோன்றல்களாக அடுத்தடுத்த தலைமுறையில் வீரர்கள் உருவாவது அவ்வளவு எளிதானதல்ல. அந்த மாபெரும் வீரரின் வெற்றிகளையும் சாதனைகளையும் மட்டுமே நினைவில் வைத்திருக்கும் ரசிகர்கள் புதிதாக வரும் இளம் வீரரிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். அந்த புதிய வீரர், அவரே விழுந்து எழுந்து கற்றுக்கொள்வதற்கான நேரத்தை பெரும்பாலும் ரசிகர்கள் அவருக்குக் கொடுக்க விரும்புவதில்லை. இந்த விருப்பமின்மையின் வெளிப்பாடாகத்தான் ப்ரித்திவி ஷாவும் பன்ட்டும் அதீதமாக ட்ரோல் செய்யப்பட்டனர்.

வருங்காலத்தில் இவர்கள் பெரிய வீரர்களாக உருவெடுக்கலாம் அப்போது இதே ரசிகர்கள் தோனியை விடவும் சேவாக்கை விடவும் இவர்களை தூக்கி வைத்துக்கொண்டாடலாம். ஆனால், ஒரு மாபெரும் முன்னாள் வீரரின் இடத்தை ஒரு இளம் வீரர் நிரப்புவதற்கு இடையில் மிகப்பெரிய தொய்வு இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என்றைக்கும் இவர்கள் இருப்பார்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் இந்திய கிரிக்கெட்டில் இந்த தொய்வு ஏற்படாமல் மாபெரும் வீரர் ஒருவரின் இடத்தை அப்படியே நிரப்பியவர் யார் என்றால் அது புஜாராவாகத்தான் இருக்கும். ட்ராவிட் என்ற இந்தியாவின் பெருஞ்சுவருக்கு பிறகு அவர் இந்திய அணிக்கு செய்த அதே ரோலை அப்படியே செய்வதற்கு ஒரு வீரரை இந்தியா பெரியளவில் தேட வேண்டிய கட்டாயமே ஏற்படவில்லை.

2010 ஆம் ஆண்டே இந்திய அணிக்கு அறிமுகமாகிவிட்டார் புஜாரா. அடுத்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு 3 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். 2012 ம் ஆண்டு ஜனவரியில் அடிலெய்டில் ஆஸிக்கு எதிராக நடந்த போட்டிதான் ராகுல் ட்ராவிட் கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டி. வி.வி.எஸ் லட்சுமணுக்கும் கூட அதுதான் கடைசிப்போட்டி. அணிக்குள் புஜாராவின் தேர்வு என்பது இவர்களின் ரோலை பூர்த்தி செய்வதற்காகத்தான் இருந்திருக்கும். ஆனால் ராகுல் ட்ராவிட், லட்சுமண் மாதிரியான மாபெரும் வீரர்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் புஜாராவை ட்ரோல் செய்யவே இல்லை. ஏனெனில், புஜாரா அதற்கான இடத்தை கொடுக்கவில்லை.

2012 ம் ஆண்டில் மட்டும் 2 சதம் ஒரு இரட்டை சதத்துடன் 654 ரன்களை அடித்திருந்தார். மொத்தமாக அந்த வருடத்தில் மட்டும் 1364 பந்துகளை சந்தித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 47 மட்டுமே. 75% டாட் பால்கள் ஆடியிருந்தார். லட்சுமண் மற்றும் குறிப்பாக ட்ராவிட்டின் இடத்தை அணிக்குள் புஜாரா நிரப்புவதற்குள், எந்த தொய்வும் ஏற்படவில்லை. அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து அப்படியே அந்த வேலையை செய்யத் தொடங்கினார். அன்று தொடங்கிய அந்த வேலையை இன்று காபா வரைக்கும் எந்த குறையும் இல்லாமல், தன்னுடைய அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் செய்து வருகிறார். இதுவே மிகப்பெரிய சாதனைதான்.

புஜாரா : T20 யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவை உணர்ந்து விளையாடும் வீரன்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி செய்த மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று, ஆஸியில் தொடர்ந்து இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியை வென்றது. முதல் முறையாக 2018 ல் வென்றபோது புஜாராவின் பங்கு அதில் அதிகம் இருக்கிறது என சொன்னால் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. புஜாரா அந்த சீரிஸில் மட்டும் 3 சதங்களை அடித்திருந்தார். ஆனால், இந்த 2020-21 சீரிஸில் புஜாராவை பலரும் ட்ரோல் செய்வதை பார்க்க முடிந்தது. காரணம், புஜாரா பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஆம், ரன்கள் அடிக்கவில்லைதான்.

ரன்கள் அடிப்பது மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் கிடையாதே. டெஸ்ட் கிரிக்கெட், நோலன் படத்தின் திரைக்கதைகள் போல பல லேயர்களையும் புரிபடாத திருப்பங்களையும் கொண்டவை. புஜாரா ஒவ்வொரு முறையும் நாம் எதிர்பார்க்காத திருப்பத்தில் நின்று பெர்ஃபார்ம் செய்து கொண்டிருப்பார்.

பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியின் கடைசி இரண்டு போட்டிகள் காலம் கடந்து என்றைக்கும் பேசப்படும். இந்த சீரிஸில் அந்த இரண்டு போட்டிகள் மட்டும்தான் 5–வது நாளின் கடைசி செஷன் வரை சென்றவை. இந்த சீரிஸில் மட்டும் 928 பந்துகளை சந்தித்திருக்கிறார் புஜாரா. ஆனால், அந்த கடைசி இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸில் மட்டும் 686 பந்துகளை சந்தித்திருக்கிறார். சராசரியாக ஒரு இன்னிங்ஸுக்கு 171 பந்துகள். புஜாரா தன் கெரியரிலேயே அடித்த மெதுவான இரண்டு அரைசதங்கள் இந்த போட்டிகளில்தான் வந்தது.

சிட்னியின் பேட்டிங் பிட்ச்சில் லபுஷேனும் ஸ்மித்தும் ரன்களை வாரிக்குவிக்க, புஜாரா மட்டும் 101 வது பந்தில் தனது முதல் பவுண்டரியை அடிக்கும்போது ரொம்பவே கோபமாகத்தான் இருந்திருக்கும். காபாவில் சுப்மன் கில் ஒரு பக்கம் ஷாட் ஆடி வெற்றிக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது இன்னொரு எண்ட்டில் இலக்கே இல்லாமல் டொக்கு வைத்துக்கொண்டிருந்த புஜாராவின் ஆட்டம் எரிச்சலடையத்தான் செய்திருக்கும்.

இறுதியாக, ஒட்டுமொத்தமாக பார்த்தால்தான் புஜாரா ஆடிய ஆட்டத்தின் வீரியம் புரியும். புஜாரா அத்தனை மணி நேரம் க்ரீஸுக்குள் நின்று ஆஸி பௌலர்களை அயர்ச்சியடைய செய்ததன் விளைவுதான் அஸ்வினும் விஹாரியும் ஒரு செஷன் முழுவதும் வெற்றிகரமாக ஆஸியினரை எதிர்கொண்டதற்கு முக்கிய காரணம். காபாவில் புஜாரா அவ்வளவு நேரம் ஒரு எண்ட்டில் நின்று விக்கெட் விடாமல் ஆடியதன் விளைவுதான், கடைசி வரை ஆட்டம் கொண்டு செல்லப்பட்டு இந்தியா பக்கம் திரும்பியது.

2012–ல் எப்படி ஆடத்தொடங்கினாரோ அப்படியேதான் இன்றும் ஆடிக்கொண்டிருக்கிறார். இடையில் ஐ.பி.எல் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. உலகமெங்கும் டி20 ப்ரீமியர் லீகுகள் அறிமுகமாகத் தொடங்கின. லிமிட்டெட் ஓவர் மட்டும் ஆடும் கிரிக்கெட் வீரர்கள் பெரும் உச்சத்துக்கு சென்றனர். கிரிக்கெட்டின் வடிவமும் ரசிப்புத்தன்மையும் மாற தொடங்கியது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக அறிமுகமான வீரர்களுமே கூட இந்த டி20 வெளிச்சத்திற்கு இரையாகி தங்களின் ஸ்டைலையே மாற்றிக்கொண்டனர். இருந்தாலும் புஜாரா மட்டும் இன்று வரை அப்படியே இருக்கிறார். அவருக்கு டி20 க்கள் மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சம் தேவைப்படவில்லை. ஹீரோ பிம்பம் தேவையில்லை. அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார பலன்கள் தேவையில்லை.

'Three wise monkeys' மாதிரி அவருக்கு உகந்ததாகப்படாத இதையெல்லாம் விலக்கி வைத்துவிட்டு முழுமையாக டெஸ்ட் கிரிக்கெட்டை ரசித்து ரசித்து ஆடிக்கொண்டிருக்கிறார். Fab 4 பேட்ஸ்மேன்கள் என நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் ஆகட்டும் பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பன்ட் மாதிரியான வீரர்கள் ஆகட்டும் இவர்களுக்கெல்லாம் மாற்று வீரரைக் கண்டுபிடிப்பது ரொம்பவே சுலபம். அவர்களின் அடியொற்றிய சூப்பர் ஸ்டார்களை கிரிக்கெட் உலகம் உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கப்போகிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவை உணர்ந்து அதற்கு உண்மையாக ஆடிக்கொண்டிருக்கும் புஜாரா மாதிரியான இன்னொரு வீரரை கிரிக்கெட் உலகம் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது!

banner

Related Stories

Related Stories