விளையாட்டு

மாற்றி மாற்றி விமர்சித்துக் கொள்ளும் இந்தியா-ஆஸ்திரேலியா : கொரோனா சூழலில் பொறுப்புணர்வு அவசியமில்லையா?

ஆஸி. முன்னாள் வீரர்கள், ஆஸி. பத்திரிகைகள் என எல்லாமும் இந்தியாவை ஏகத்துக்கும் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். நிஜமாகவே தவறு யார் பக்கம் இருக்கிறது?

மாற்றி மாற்றி விமர்சித்துக் கொள்ளும் இந்தியா-ஆஸ்திரேலியா : கொரோனா சூழலில் பொறுப்புணர்வு அவசியமில்லையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆடுவதற்காக இன்று மெல்பர்னிலிருந்து சிட்னிக்கு பயணிக்கவிருக்கிறது இந்திய அணி. முன்னதாக, ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், நவ்தீப் சைனி, ப்ரித்வி ஷா, ரிஷப் பன்ட் என இந்திய அணியின் ஐந்து வீரர்கள் குவாரன்டைன் விதிமுறைகளை மீறி ரெஸ்டாரண்டுக்கு சென்றதாக சர்ச்சை எழுந்திருந்தது. 'விதியை பின்பற்ற முடியவில்லை எனில் கிரிக்கெட் ஆடவே வந்திருக்கக்கூடாது' என குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஒட்டுமொத்தமாக இந்திய அணி முழுமைக்கும் கோவிட்19 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில், விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் உட்பட யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி சிட்னிக்கு பயணப்படுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியுள்ளன.

'நீங்கள் மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்கிறீர்கள். ஆனால், வீரர்களை மட்டும் கடுமையான குவாரண்டைனில் இருக்கச் சொல்கிறீர்கள். இது மிகப்பெரிய முரண்பாடாக இருக்கிறது. ஆஸ்திரேலிய குடிமகன்களுக்கு என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ, அதையே நாங்களும் கடைபிடிக்க தயாராக இருக்கிறோம். ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை எனில், நாங்கள் குவாரண்டைனில் இருப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்கள் தளத்தை தாண்ட கூட கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டிருக்கிறது. மைதானத்தில் கிரிக்கெட் ஆட மட்டும் அனுமதித்து விட்டு ஹோட்டல் அறைகளில் அடைத்து விடுகின்றனர். நாங்கள் ஒன்றும் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் கிடையாது' என ஆஸியின் கிடுக்குப்பிடி கெடுபிடிகளுக்கு இந்திய அணியின் சார்பாக பதிலடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன் சென்று நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கும் இந்திய அணி ஆட்சேபனை தெரிவித்துள்ளது. சிட்னியில் வைத்தே அடுத்த போட்டியையும் நடத்தவேண்டும் என இந்திய அணி கூறியுள்ளது. இது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

ஆஸி. முன்னாள் வீரர்கள், ஆஸி. பத்திரிகைகள் என எல்லாமும் இந்தியாவை ஏகத்துக்கும் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். நிஜமாகவே தவறு யார் பக்கம் இருக்கிறது??

'நீங்கள் அணியில் இடம்பிடிக்க விருப்பம் தெரிவித்திருக்கக்கூடாது அல்லது குவாரண்டைன் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்திருக்க வேண்டும்' என சஞ்சய் மஞ்சரேக்கர் இந்திய அணி குறித்து ட்வீட் செய்திருக்கிறார். இது நியாயமான விமர்சனமாகவே தெரிகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் குவாரன்டைன் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது என்பது இந்திய அணிக்கு தெரியும். அந்த கடுமையான குவாரன்டைன் விதிமுறைகளை பின்பற்றித்தான் ஐ.பி.எல் ஆடியிருக்கின்றனர். ஆஸியிலும் அதேமாதிரியான விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும் என தெரிந்து அதற்கு ஒப்புக்கொண்ட பிறகுதான் ஆஸிக்கு ப்ளைட் ஏறியிருப்பார்கள். பிறகு ஏன் அங்கே இருந்து கொண்டு குவாரன்டைன் விதிமுறைகளை மீறயதாக சலசலப்பு ஏற்படும் அளவுக்கு நடந்துக்கொள்ள வேண்டும்? விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு களமிறங்கிய பின் சர்ச்சைகளை உண்டாக்குவது முறையானதாக இல்லை.

மாற்றி மாற்றி விமர்சித்துக் கொள்ளும் இந்தியா-ஆஸ்திரேலியா : கொரோனா சூழலில் பொறுப்புணர்வு அவசியமில்லையா?

எல்லாருமே குவாரன்டைன் விதிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பதை புரிந்துகொண்டிருக்க வேண்டும். உலகிலேயே முதன்முதலாக கொரோனா இல்லாத நாடு என அறிவிக்கப்பட்டது நியூஸிலாந்துதான். ஆனால், அங்கேயே இப்போது கிரிக்கெட் ஆட சென்றிருந்த பாகிஸ்தான் அணியில் பல பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

வெகு சமீபத்தில் தென்னாப்பிரிக்கா Vs இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரே கொரோனா பரவலால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையெல்லாம் இந்திய அணி கவனித்திருந்தால் நாங்கள் என்ன விலங்குகளா என்பது போன்ற எதிர்வினைகள் வெளிப்பட்டிருக்காது. குவாரன்டைன் கட்டுப்பாட்டுகள் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அதை முறையாகப் பின்பற்றுவதன் மூலம்தான் தங்கள் உடல்நலத்தை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையாவது இந்திய அணி உணர வேண்டும்.

இந்திய அணியை மட்டுமே இதில் குறை சொல்லிவிட முடியாது. ஆஸி தரப்பிலும் குறைகள் இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல் தொடரிலிருந்து கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் குவாரன்டைனில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணி லாக்டவுனுக்கு பிறகான முதல் தொடராக ஆஸிக்கு பயணப்படும் போது இந்திய வீரர்களுக்கான அதிகபட்ச சௌகரியத்தை உறுதி செய்து கொடுக்க வேண்டியது ஆஸி கிரிக்கெட் போர்டின் கடமை. ஆனால், அவர்கள் அதை முழுமையாக செய்ததாக தெரியவில்லை. உயிரைப் பணயம் வைத்து கிரிக்கெட் ஆட வந்திருக்கும் விருந்தாளிகளை கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆஸியின் முன்னாள் வீரர்களும் பத்திரிகைகளும் விமர்சனம் என்ற பெயரில் உளவியல் ரீதியாக தாக்கி வருகின்றனர். ஓரிரு மைதானங்களில் தொடரை நடத்துவதற்கு பதிலாக நான்கு போட்டிகளை நான்கு மைதானங்களில் நடத்துவதே சரியாக இல்லை. குறைந்தபட்சம், இந்திய அணி இப்போது கோரிக்கை வைக்கும் போதாவது ஆஸி கிரிக்கெட் போர்டு ப்ரிஸ்பேனுக்கு பதில் சிட்னியிலேயே அடுத்த போட்டியை நடத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறும் இந்த தொடர் என்பது, இருநாட்டு கிரிக்கெட் போர்டு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. அக்டோபர் - நவம்பரில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. அதை நடத்த வேண்டாம் எனக் கூறி ஐ.பி.எல் நடத்தியது BCCI. 'உலகக்கோப்பை கூட எங்களுக்கு வேண்டாம்; பார்டர் – கவாஸ்கர் டிராபி மட்டும் போதும்' எனக் கூறியது ACB. இந்த ஒரு தொடர் நடைபெறுவதற்காக பல நாடுகள் பங்குபெறும் உலகக்கோப்பை போட்டிகள் இரையாகியிருக்கிறது. தொடர்ந்து 3 வருடங்களில் 3 ஐ.சி.சி போட்டிகள் என்கிற எடக்கு முடக்கான அட்டவணை உருவானதற்கு இந்தத் தொடரும் ஒரு காரணம்.

அதை உணர்ந்தாவது, வீண் விதண்டாவாதங்கள் பேசி சர்ச்சை ஏற்படுத்தாமல் பரஸ்பர புரிதலோடு இந்தத் தொடரை சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories