விளையாட்டு

சிங்கிள் திருட்டில் சிக்கல்; அஷ்வினை பார்த்து பம்மிய ஸ்மித்... Boxing Day Test Day 3 Analysis

நாளை ஆஸியை கொஞ்சம் விட்டுப்பிடித்தாலும் ஒரு 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடுவது இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தும்.

சிங்கிள் திருட்டில் சிக்கல்; அஷ்வினை பார்த்து பம்மிய ஸ்மித்... Boxing Day Test Day 3 Analysis
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான Boxing Day Test போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்தியா 131 ரன்கள் முன்னிலையோடு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆக, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி அணி முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளையெல்லாம் இழந்து, 133-6 என்ற நிலையில் தடுமாறி வருகிறது.

நேற்றைய நாளில் சதமடித்த ரஹானேவும் அவருக்கு சப்போர்ட்டாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜடேஜாவும் இன்றைய நாள் ஆட்டத்தை தொடருவதற்காக க்ரீஸிற்குள் வந்தனர். ஆஸியின் சார்பில் ஸ்டார்க்கும் கம்மின்ஸும் ஓப்பனிங் ஸ்பெல்களை வீசத்தொடங்கினர். இந்த செஷனின் தொடக்கத்தில் ஆஸியே பெரிதாக விக்கெட் எடுக்கும் மனநிலையில் இல்லாதது போலே இருந்தது. ஆனால், நம் வீரர்கள் தேடிப்பிடித்து போய் விக்கெட்டை தாரை வார்த்தனர்.

மெல்பர்னில் மூன்றாவது நாளிலிருந்து பிட்ச் பேட்டிங்குக்குதான் உதவும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதற்காக முதல் செஷனின் தொடக்கத்திலேயே ODI-க்கு வைப்பது போலவா ஃபீல்ட் செட் வைப்பது? பெய்ன் அப்படித்தான் ஆரம்பத்தில் வைத்திருந்தார். ஒரே ஒரு ஸ்லிப்பை மட்டும் நிறுத்திவிட்டு ரன்களை கட்டுப்படுத்துவதற்கான ஃபீல்ட் செட்டப் மாதிரி பாயின்ட், கவர், எக்ஸ்ட்ரா கவர், மிட் விக்கெட் என வட்டத்தை சுற்றி ஃபீல்டை பரப்பியிருந்தார்.

சிங்கிள் திருட்டில் சிக்கல்; அஷ்வினை பார்த்து பம்மிய ஸ்மித்... Boxing Day Test Day 3 Analysis

பந்தில் பெரிதாக மூவ்மென்ட் இருக்கப்போவதில்லை என்பதால் இந்த ஃபீல்ட் செட்டப் சரியானது போல தோன்றும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுப்பதற்கு பிட்ச்சையும் பந்தையும் மட்டுமே எப்போதும் நம்பியிருக்க முடியாது. அங்கே உளவியல் ரீதியாக சில விஷயங்களை செய்தால்தான் பலன் கிடைக்கும்.

முதல் செஷனின் முதல் ஓவரே மூன்று ஸ்லிப் ஷார்ட் லெக் இவற்றையெல்லாம் வைத்து அட்டாக்கிங்காக தொடங்கினால்தான் பேட்ஸ்மேனுக்கு பேட்டை விடலாமா, வேண்டாமா என்கிற குழப்பமே ஏற்படும். அந்த குழப்பம்தான் விக்கெட்டை பெற்றுத்தரும். மாறாக, பெயின் காலையில் வைத்திருந்த ஃபீல்ட் செட்டப் எதோ ஸ்கோரை டிஃபண்ட் செய்வதற்கு வைக்கப்பட்ட ஃபீல்ட் செட் ஆகத்தான் இருந்தது. ஆனால், இதிலும் தேடிச்சென்று ரஹானேவின் விக்கெட்டை பறிகொடுத்ததுதான் சோகம்.

அவர்களே ரன்னை கட்டுப்படுத்துவதை முதன்மையாகக் கொண்ட ஃபீல்ட் செட்டப்பைதான் வைத்திருக்கிறார்கள். அதில் சரியாக வட்டத்திற்குள் நிற்கும் ஃபீல்டரின் கையில் தட்டிவிட்டு அவசர அவசரமாக ஜடேஜா ஓட, பரிதாபமாக ரஹானே ரன் அவுட் ஆனார். முதல் போட்டியில் விராட் கோலியின் ரன் அவுட்டின்போது அஜய் ஜடேஜா ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது 'நீங்கள் ஷார்ட்டர் ஃபார்மட்களில்தான் ரன்களை திருட முயற்சிக்க வேண்டும். அதாவது, சிங்கிளுக்கு வழியே இல்லாத இடத்தில் சிங்கிள் எடுக்க வேண்டும், ஒரு சிங்கிளை டபுளாக மாற்ற வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதெல்லாம் தேவை இல்லை. அதுவும் நீங்கள் நல்ல செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருக்கும்போது அப்படி செய்வதற்கான அவசியமே இல்லை' என்றிருப்பார்.

சிங்கிள் திருட்டில் சிக்கல்; அஷ்வினை பார்த்து பம்மிய ஸ்மித்... Boxing Day Test Day 3 Analysis

ஜடேஜா அரைசதம் அடிக்க வேண்டிய அவசரத்தில் நாதன் லயன் வீசிய பந்தை தட்டிவிட்டு சிங்கிளை திருட முயன்றார். பதிலுக்கு ஆஸியினர் ரன் அவுட் மூலம் ரஹானேவின் விக்கெட்டை திருடிவிட்டனர். 223 பந்துகளில் 112 ரன்களை அடித்திருந்த ரஹானே தேவையே இல்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே நின்றிருந்தால் இன்னும் பெரிய லீடை எடுத்திருக்க முடியும். இந்த ரன் அவுட்டுக்கு ஜடேஜா காரணமாக இருந்தபோதும் ரஹானே அவரை தட்டிக்கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பியது ஒரு நிமிடம் சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டது.

கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரிலேயே உருப்படியாக ஒரு சிங்கிள் தட்டி அரைசதத்தை பதிவு செய்தார் ஜடேஜா. ரஹானே விக்கெட் கொடுத்த உற்சாகம் ஆஸியினரிடம் வெளிப்பட தொடங்கியது. ஜடேஜாவுக்கு ஷாட் பிட்ச் ப்ளானோடு வந்திறங்கி அதை செயல்படுத்த தொடங்கினார் ஸ்டார்க். அவர் வீசிய ஷார்ட் பால்களை எதிர்கொள்ள முடியாமல் ஜடேஜா கொஞ்சம் திணறவே செய்தார். 103, 105 என இரண்டு ஓவர்களிலும் தொடர்ந்து ஷார்ட் பாலாக வீசிக்கொண்டிருந்தார் ஸ்டார்க். இதுதான் சரியான அணுகுமுறை. ஒரு திட்டத்தை கையில் எடுத்தால், அது நிறைவேறும் வரை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

இந்த பண்புதான் நேற்றைய ஆட்டத்தில் ஆஸி பௌலர்களிடம் நேற்று மிஸ் ஆனது. இன்று சரியாக ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டு தொடர்ந்து செயல்படுத்தி வெற்றியும் கண்டார் ஸ்டார்க். 103,105 ஓவர்களுக்கு அடுத்து 107 வது ஓவரிலும் தொடர்ந்து நான்கு ஷார்ட் பால்களை போட்டு ஜடேஜாவை பீட்டன் ஆக்கி கடுப்பேற்றினார். 5–வது பந்தை போடுவதற்கு முன் வட்டத்திற்குள் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த கம்மின்ஸை டீப்புக்கு அனுப்பினார். 5–வது பந்தை முதல் நான்கு பந்துகள் மாதிரி unplayable ஷார்ட் லெந்தில் போடாமல் கொஞ்சம் அடிக்கும் அளவுக்கு இறக்கி போட்டார். இருந்தாலும் அது ஷார்ட் லென்த்துதான். அவசரப்பட்ட ஜடேஜா சரியாக கம்மின்ஸின் கையில் கேட்ச்சை கொடுத்து வெளியேறினார்.

இதுதான் உளவியல் ரீதியான அட்டாக். நான்கு பால்களில் பீட்டன் ஆனவர். 5–வது பந்தை லீவ் செய்திருக்கலாமே? ஸ்டார்க், ஜடேஜாவின் ஈகோவை கொஞ்சம் சுரண்டி பார்த்துவிட்டார். அதன் விளைவுதான் ஜடேஜாவை பேட்டை சுழற்ற வைத்தது. 159 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் எடுத்து இந்தியா வலுவான நிலைக்கு செல்வதற்கு ஜடேஜாவும் முக்கிய பங்காற்றினார்.

சிங்கிள் திருட்டில் சிக்கல்; அஷ்வினை பார்த்து பம்மிய ஸ்மித்... Boxing Day Test Day 3 Analysis

அடுத்தது எல்லாம் டெய்ல் எண்டர்கள்தான் என்பதால் முதல் செஷன் முடிவதற்குள்ளேயே இந்தியாவை ஆல் அவுட் ஆக்கிவிட்டது ஆஸ்திரேலியா. இந்தியா 326 ரன்னுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. 131 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 131 ரன்களை தாண்டி டார்கெட் வேறு செட் செய்ய வேண்டும் என்கிற மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள ஆஸி களமிறங்கியது. ஜோ பர்ன்ஸும் மேத்யூ வேடும் ஓப்பனர்களாக வந்தனர். பும்ராவும் உமேஷ் யாதவும் ஓப்பனிங் ஸ்பெல்லை வீசினர். ஒரே ஆள் ஸ்ட்ரைக்கில் நின்றுவிடக்கூடாது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது இவர்களின் ப்ளானாக இருந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் பௌலர்களின் லைன் & லென்த்தை குழப்ப முடியும்; சும்மா டொக்கு வைத்து சீக்கிரம் அவுட் ஆவதற்கு கொஞ்சம் ரன்களையாவது சேர்த்துவிட்டு அவுட் ஆகலாம் என்றும் யோசித்திருக்கலாம். இந்த நினைப்பிலே இரண்டாவது ஓவரிலேயே ஒரு ரன் அவுட்டில் சிக்க பார்த்து தப்பித்தது இந்த கூட்டணி. ஆனால், இவர்கள் எவ்வளவு ப்ளான் செய்தாலும் இந்திய பௌலர்கள் நெருப்பாக செயல்பட்டு அவர்களை தடுமாற செய்தனர். பும்ரா வீசிய 3–வது ஓவரில் ஒரு ஃபுல் லென்த் டெலிவரியில் பர்ன்ஸுக்கு lbw அப்பீல் செய்ய ரிவீயூவில் அம்பயர்ஸ் காலில் தப்பித்தார் பர்ன்ஸ். ஆனால், அடுத்த ஓவரே உமேஷ் யாதவின் பந்துவீச்சில் எட்ஜ் ஆகி பண்டிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் வெளியேறினார். இதற்கும் ஒரு ரிவியூவை எடுத்து வேஸ்ட் ஆக்கிவிட்டுதான் நடையைக் கட்டினார்.

அடுத்ததாக நம்பர் 3 ல் லபுஷேன் களமிறங்கினார். இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்பெசலிஸ்ட்டான உமேஷ் யாதவ் பந்துவீசும்போது எதோ அசௌகரியமானதால் வெளியேறினார். நன்றாக வீசத்தொடங்கிய உமேஷ் யாதவ் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால், மற்ற பௌலர்கள் சேர்ந்து அந்த குறையை நீக்கிவிட்டனர். உமேஷுக்கு பதில் சிராஜ் சீக்கிரமே அழைத்துவரப்பட்டார். முதல் இன்னிங்ஸ் மாதிரியே அஸ்வினும் சீக்கிரம் அழைத்து வரப்பட்டார்.

இந்த லபுஷேன்-வேட் கூட்டணி பொறுமையாக நின்று ஆட தொடங்கியது. லபுஷேனுக்கு ஒருமுறை அஸ்வினின் பந்தில் லெக் ஸ்லிப்பில் கேட்ச் மிஸ் ஆனது. அடுத்து, சிராஜ் வீசிய ஒரு டெலிவரி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனதால் ரிவியூவில் நாட் அவுட் வழங்கப்பட்டது. இந்திய பௌலர்களின் ரிலிஸ் பாயின்ட்டில் சிராஜுடையதுதான் இடதுபுறம் ரொம்பவே வைடாக இருக்கிறது. இதனால் கூட மற்ற பௌலர்களை விட சிராஜ் ஸ்டம்ப் லைனை மிஸ் செய்வதற்கு கூடுதல் வாய்ப்பிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். ஆனால் எல்லா அப்பீலுக்கும் ரஹானேவை ரிவியூ எடுக்க சொல்வது கொஞ்சம் ஓவர் சிராஜ்!

கொஞ்சம் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த லபுஷேனை 18–வது ஓவரில் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஒரு கேரம் பால் மூலம் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆக்கினார் அஸ்வின். லபுஷேன் 28 ரன்களில் வெளியேற அடுத்து ஸ்மித் வந்தார். அஸ்வினை பார்த்தாலே சிங்கிள் தட்டி நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டுக்கு ஓடி விடுகிறார் ஸ்மித். ஆனால், இந்த முறை அவரின் விக்கெட் பும்ராவின் பெயரில் எழுதப்பட்டிருந்தது. 33–வது ஓவரில் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் கிரியேட் செய்து லெக் ஸ்டம்பை நோக்கி வீசப்பட்ட பந்தை ஃப்ளிக் ஆட முயற்சி செய்து லெக் ஸ்டெம்ப் பெயில்ஸை பறிகொடுத்தார் ஸ்மித். இந்த ஓவருக்கு முன்பு பும்ரா வீசிய 31–வது ஓவரிலும் ஆங்கிள் கிரியேட் செய்து இன்கம்மிங் டெலிவரிகளாக வீசித்தான் தடுமாற செய்துக்கொண்டிருந்தார். 8 ரன்னில் ஸ்மித்தையும் வெளியேற்றிவிட்டதால் இந்திய பௌலர்கள் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர்.

சிங்கிள் திருட்டில் சிக்கல்; அஷ்வினை பார்த்து பம்மிய ஸ்மித்... Boxing Day Test Day 3 Analysis

இதன்பிறகு வந்த ட்ராவிஸ் ஹெட் கொஞ்ச நேரம் நின்று ஆடினார். மேத்யூ வேட் ஒரு எண்டில் நங்கூரம் போல நின்றார். அவரை ஜடேஜா 44–வது ஓவரில் வெளியேற்றினார். முட்டி போட்டு ஸ்பின்னை கொஞ்சம் ஃபைன் லெக்கில் தட்டிவிட்டு ஆடிக்கொண்டிருந்த வேடுக்கு ஷாட் லெக் ஃபீல்டரை இன்னும் கொஞ்சம் ஸ்கொயராக வைத்துவிட்டு அந்த ஃபீல்டரை நோக்கிய ஆங்கிளில் பந்தை வீசினார் ஜடேஜா. திடீரென உடம்புக்கு உள்ளே வந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் வேட் lbw ஆனார். நீண்ட நேரம் நிலைத்திருந்த வேட் 40 ரன்களில் வெளியேறினார்.

அவர் வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே சிராஜ் வீசிய 47வது ஓவரில் ஹெட்டும் அவுட்டானார். கொஞ்சம் ஃபுல்லாக வீசப்பட்ட டெலிவரியை ஷாட் ஆட முயன்று எட்ஜாகி ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுத்தார். நம்பர் 7 ல் வந்த கேப்டன் டிம் பெய்ன் நின்று ஆடுவார் என எதிர்பார்க்கையில் ஜடேஜா வீசிய பந்தில் ஒரு சர்ச்சைக்குரிய எட்ஜ்ஜில் கேட்ச் ஆகி அவுட் ஆனார். ஸ்நிக்கோ மீட்டரில் வேவ்ஸ் தெரிந்தாலும், ஹாட் ஸ்பாட்டில் எந்த தடயமும் இல்லை என்பதால் ஏமாற்றத்துடன் பெய்ன் நடையைக் கட்டினார். முதல் இன்னிங்ஸில் அவுட் கொடுக்கப்பட வேண்டிய ஒரு சர்ச்சைக்குரிய ரன் அவுட் முடிவில் டிம் பெய்னுக்கு நாட் அவுட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய விக்கெட்டுகளை எல்லாம் இழந்துவிட்ட நிலையில் கேமரூன் க்ரீனும் கம்மின்ஸும் கொஞ்சம் தடுப்பாட்டம் ஆடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தனர். கம்மின்ஸ் ஜடேஜாவின் பந்தில் ஒரு சில பவுண்டரிகளையும் அடித்தார். இறுதியில் இன்றைய நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 133-6 என்ற நிலையில் 2 ரன் லீடோடு இருக்கிறது. நாளை ஆஸியை கொஞ்சம் விட்டுப்பிடித்தாலும் ஒரு 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடுவது இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தும்.

banner

Related Stories

Related Stories