விளையாட்டு

IND vs NZ : “நாங்கள் எந்த அணிக்கும் சளைத்தவர்கள் அல்ல” - முதல் டெஸ்ட் குறித்து விராட் கோலி பேட்டி!

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எந்த அணியுடனாவது பகிர்ந்து கொள்ளும் சூழல் வந்தால், நியூசிலாந்துடன்தான் பகிர்ந்து கொள்வோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

IND vs NZ : “நாங்கள் எந்த அணிக்கும் சளைத்தவர்கள் அல்ல” - முதல் டெஸ்ட் குறித்து விராட் கோலி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணியின் வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் இறங்கியுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்த தொடர் நடைபெறுவதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் தோல்வியே காணாமல் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய அணியைப் பொறுத்தவரை, ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் தொடக்கம் கொடுப்பர் என கோலி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா இருவரில் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிட்டும். சுழல் மன்னன் அஸ்வினுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா அணிக்கு கூடுதல் பக்கபலமாக இருக்கிறார். தவிர, காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள இஷாந்த் சர்மாவின் வருகையும் அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் வகையில் உள்ளது.

IND vs NZ : “நாங்கள் எந்த அணிக்கும் சளைத்தவர்கள் அல்ல” - முதல் டெஸ்ட் குறித்து விராட் கோலி பேட்டி!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுப்பர் என நம்புவதாகவும், அதற்கான அனைத்து சூழ்நிலைகளையும் அணியாக உருவாக்குவோம் எனக் கூறினார்.

காயத்தில் இருந்து திரும்பிய இஷாந்த் குறித்து பேசிய கோலி, முன்பு எப்படி பந்து வீசினாரோ, அதே உத்வேகத்துடன்தான் இஷாந்த் காயத்திலிருந்து மீண்டு பந்து வீசுவதாகக் கூறிய கோலி, ஏற்கனவே நியூசிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் இஷாந்த் சர்மாவுக்கு கைகொடுக்கும் எனத் தெரிவித்தார்.

உலக கிரிக்கெட் அரங்கில் திறமையான நியூசிலாந்து அணியை வீழ்த்த எல்லா வகையிலும் முயற்சிப்போம் எனவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவோம் எனவும் கோலி குறிப்பிட்டார்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, சொந்த மண்ணில் விளையாடுவது அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் திரும்பியிருப்பது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை வலுப்படுத்துகிறது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை இந்தப் போட்டி மிக முக்கியமானது என்றே சொல்லலாம். காரணம், அனுபவ வீரரான ராஸ் டெய்லருக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் மூன்று வித போட்டிகளிலும் 100 போட்டிகளில் கால் பதித்த முதல் வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் படைக்க காத்திருக்கிறார்.

நியூசிலாந்து அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரை வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் முனைப்பில் உள்ளது நியூசிலாந்து அணி.

IND vs NZ : “நாங்கள் எந்த அணிக்கும் சளைத்தவர்கள் அல்ல” - முதல் டெஸ்ட் குறித்து விராட் கோலி பேட்டி!

விராட் கோலி- வில்லியம்சன் காம்போ போட்டியை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இவ்விரு அணிகளும் இதுவரை எதிரெதிராக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதில் 21ல் இந்திய அணியும், 10-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 26 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்திய நேரப்படி முதல் டெஸ்ட் போட்டி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

banner

Related Stories

Related Stories