விளையாட்டு

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவான்.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. 5வது நாளான இன்று மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. தகுதிச்சுற்றிலேயே மற்ற நாட்டு வீராங்கனைகளை பின் தள்ளி முதலிடத்தை பிடித்தார் தமிழக தங்கமங்கை இளவேனில் வாலறிவன்.

மொத்தம் 8 சுற்றுகளாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இளவேனில் வாலறிவான் துல்லியமாக இலக்கை நோக்கி தோட்டாவை பாய்த்து புள்ளிகளை பெற்றார். 8 வீராங்கனைகள் பதக்கத்திற்கு மல்லுக்கட்டிய இந்த இறுதிப்போட்டியின் கடைசியில் தங்கப்பதக்கத்திற்கு தமிழக வீராங்கனை இளவேனிலுக்கும், சீன தை பே வீராங்கனை Lin Ying-Shin-க்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முடிவில், துல்லியமாக செயல்பட்ட இளவேனில் 250.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததோடு தங்கப்பதக்கத்தையும் அலங்கரித்தார். சீனியர் பிரிவில் இளவேனில் தங்கப்பதக்கம் வெல்வது இது 2வது முறையாகும்.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில், தனது 2ஆம் வயதிலேயே குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 2012ஆம் ஆண்டு தனது 13வது வயதில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார் இளவேனில். விடாமுயற்சியின் பலனாக, 2018ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதுதான் இளவேனில் வென்ற முதல் உலகக்கோப்பை தங்கப்பதக்கம்.

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஷுல் பகுதியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2 தங்கப் பதக்கம் வென்று சாதனை மங்கையாக உருவெடுத்தார்.

தொடர்ந்து நடப்பாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். உலகக்கோப்பை தொடரில் 3வது முறையாக தங்கத்தை வென்றிருந்தாலும், சீனியர் பிரிவில் இளவேனில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

இதன்மூலம், பங்கேற்ற முதல் சீனியர் உலகக்கோப்பை தொடரிலேயே தங்கம் வென்றவர் என்ற வரலாற்று நிகழ்வையும் இளவேனில் படைத்தார். தற்போது சீனாவில் நடைபெற்று வரும் இந்த தொடரிலும் தமிழக வீராங்கனையான இளவேனில் தங்கமங்கை என்பதை நிரூபித்தார்.

சர்வதேச அரங்கில் துப்பாக்கிச்சுடுதலில் தங்கமங்கையாக திகழும் இவர், ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனையின் கனவும் ஒலிம்பிக் தான்... வாலறிவனின் ஒலிம்பிக் பதக்க பயணத்திற்கு வாழ்த்துகள்...

- மீனா

banner

Related Stories

Related Stories