உலகக்கோப்பை 2019ஐ நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்த மூன்று நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தோல்வி குறித்து விளக்கமளிக்க பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலிக்கு பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.ஏ.என்.எஸ் தளத்துக்குப் பேட்டியளித்துள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், “ ரோஹித்துக்கும், கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. இருப்பினும் இவ்விவகாரம் குறித்து விவாதம் நடத்த பி.சி.சி.ஐ தயாராக உள்ளது. ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்க இதுவே சரியான தருணம். இருப்பினும் அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய கட்டாயமும் ஏற்கெனவே உள்ள யோசனைகளுக்கு புதுவடிவம் கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித்தும், டெஸ்ட் போட்டிகளுக்கு கோலியையும் கேப்டனாக நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கலாம். சில விஷயங்களில் ஒரு புதிய பார்வை தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ரோஹித் அதற்குத் தகுதியான நபராக இருப்பார். மறுஆய்வு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அப்போது இந்த பிரச்னையில் முடிவு எடுக்கப்படலாம். அப்போது இந்த வதந்திகளுக்கு முடிவு ஏற்படும் " எனக் கூறியுள்ளார்.