விளையாட்டு

IPL 2019;டெல்லியை பந்தாடியது ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணி

ஐ.பி.எல் தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.நேற்றிரவு நடந்த போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

Sun Risers Hyderabad
Sun Risers Hyderabad
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.நேற்றிரவு நடந்த போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் மூன்று மாற்றமாக அவேஷ்கான், ஹனுமா விஹாரி, ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், ராகுல் திவேதியா சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டன் வில்லியம்சன் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் புவனேஷ்வர்குமார் அந்த அணியை வழிநடத்தினார்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர்குமார், எதிரணியை பேட் செய்ய பணித்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும்,ப்ரித்வி ஷாவும் களமிறங்கினர்.தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு (11 ரன்), புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் ஆப்-ஸ்டம்பு பல்டி அடித்தது. மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (12 ரன்) சுழற்பந்து வீச்சாளர் முகமது நபியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

Shreyas Iyer
Shreyas Iyer

இதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பக்கம் நிலைகொண்டு விளையாட, மறுமுனையில் அந்த அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.ரிஷப் பன்ட், திவேதியா, காலின் இங்ராம் மூன்று பேரும் தலா 5 ரன்னில் கேட்ச் ஆனார்கள். முகமது நபியை தவிர, ரஷித்கானும் சுழலில் டெல்லியை வெகுவாக கட்டுப்படுத்தினர். ஓரளவு போராடிய ஸ்ரேயாஸ் அய்யரும் 43 ரன்னில் (41 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

கடைசி நேரத்தில் அக்சர் படேல் சிறிது அதிரடி காட்டினார்.அதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.அக்சர் பட்டேல் 23 ரன்களுடன் (13 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் முகமது நபி, சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டும், ரஷித்கான், சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Johny Bairstow
Johny Bairstow

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் வலுவான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ அடிக்கடி பந்தை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு, உற்சாகப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 64 ரன்களாக (6.5 ஓவர்) உயர்ந்த போது பேர்ஸ்டோ (48 ரன், 28 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்த ஓவரில் வார்னரும் வெளியேற்றப்பட்டார்.

சிறிய இடைவெளியில் மனிஷ் பாண்டே (10 ரன்), விஜய் சங்கர் (16 ரன்), தீபக் ஹூடா (10 ரன்) ஆகியோர் நடையை கட்டினர். இதனால் ஐதராபாத் அணி லேசான நெருக்கடிக்குள்ளானது. இருப்பினும் முகமது நபியும் (17 ரன்), யூசுப்பதானும் (9 ரன்) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.அந்த அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். டெல்லி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

banner

Related Stories

Related Stories