
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா என்ற பரந்து விரிந்த நாட்டில், 22 மொழிகள் அங்கீகாரம் பெற்ற மொழிகளாகவும், ஆயிரக்கணக்கான மொழிகள் பேச்சு வழக்கு மொழிகளாகவும் இருக்கின்றன.
ஒவ்வொரு மொழியும் ஒரு இனத்தை அடையாளப்படுத்துகிறது; ஒவ்வொரு இனமும் ஒரு பண்பாட்டுச் சிறப்பைக் கொண்டுள்ளது.
இப்படியான நிலையில், ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய தனிப்பட்ட அரசியலையும், நில அமைப்பையும் பெற்றுள்ளது. இதனால்தான், இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்கிறோம்.
இத்தகைய சூழலில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்திய அளவில் சுமார் 28,000-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவதும், தாய்மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்காதது போன்ற சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் நிலவி வருகின்றன.
இந்நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில் மும்மொழிக் கொள்கையில் இடைக்கால விலக்கு அளிக்குமாறு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சி.பி.எஸ்.இ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “ஏற்கனவே இரண்டு மொழிகளை மட்டும் படிப்பவர்கள் அம்முறையையே தொடரலாம்; மூன்று மொழிகளைத் தேர்வு செய்தவர்கள், மூன்று மொழிகளைக் கற்கலாம். ஆனால், எந்த மாணவரையும் மும்மொழி கற்கக் கட்டாயப்படுத்தக் கூடாது” எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.






