அரசியல்

“செக்காணுரணி காவல் சித்திரவதை மரணம்.. CBI-க்கு வழக்கை மாற்றுக” : கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!

மதுரை, செக்காணுரணி காவல்நிலையத்தில் புகாரளிக்க பாலகிருஷ்ணன் என்பவரை தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது என கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“செக்காணுரணி காவல் சித்திரவதை மரணம்.. CBI-க்கு வழக்கை மாற்றுக” : கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆர். பாலகிருஷ்ணன் என்பவர், நவம்பர் 14, 2026 அதிகாலை மதுரை செக்காணூரணி காவல் நிலைய கழிப்பறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 3, 2026 அன்று தேவரத்திலிருந்து மதுரைக்கு ஏலக்காய் ஏற்றிச் சென்ற லாரியை பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த லாரி வலையனூர் கண்மாய் கரை அருகே தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான புகார் மற்றும் விசாரணைக்காக பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். விசாரணைக்காக காவல்நிலையத்தில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் காவல்நிலையத்திலேயே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த நிலையில், இது காவல் சித்திரவதை மரணம் தான் என நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.

புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories