அரசியல்

காங்கிரஸ் கேட்டது 130... அகிலேஷ் சொன்னது 26! - தொகுதி பேரம் பேச வந்தவர்களுக்குப் பேரதிர்ச்சி!

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக 130 கேட்ட காங்கிரஸ்... 26 கொடுத்த அகிலேஷ்! கூட்டணியில் காங்கிரஸுக்கு இவ்வளவுதானா செல்வாக்கு?

காங்கிரஸ் கேட்டது 130... அகிலேஷ் சொன்னது 26! - தொகுதி பேரம் பேச வந்தவர்களுக்குப் பேரதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

உத்தரப்பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டிடுவதற்காக, காங்கிரஸ் முதலில் 181 தொகுதிகளைக் கேட்டிருந்தது.

பின்னர், தனது கோரிக்கையைக் குறைத்து, 130 தொகுதிகள் அடங்கிய பட்டியலை சமாஜ்வாதி கட்சியிடம் வழங்கியது.

ஆனால், காங்கிரஸின் கோரிக்கைக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, வெறும் 26 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வந்தது.

இந்த 26 தொகுதிகளும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்று சமாஜ்வாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி வழங்கிய 26 தொகுதிகளில் 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ராம்பூர் காஸ், பரேந்தா ஆகிய இரண்டு தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

மற்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் மூன்றாவது அல்லது அதற்கு கீழான இடங்களையே பெற்றிருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் இம்ரான் மசூத், தொகுதிகளுக்காக சமாஜ்வாதி கட்சியிடம் கெஞ்ச வேண்டியது இல்லை என்ற வகையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கேட்டது 130... அகிலேஷ் சொன்னது 26! - தொகுதி பேரம் பேச வந்தவர்களுக்குப் பேரதிர்ச்சி!

2022 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 401 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதே தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 347 தொகுதிகளில் போட்டியிட்டு 111 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 17 தொகுதிகளில் 6 இடங்களிளும் சமாஜ்வாதி கட்சி போட்டியிட்ட 62 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றன.

சமாஜ்வாதி 33.8 சதவிகித ஓட்டுகளையும் காங்கிரஸ் 9.53 சதவிகித ஓட்டுகளையும் பெற்றிருந்தன.

இந்தத் தேர்தல் வெற்றி விபரங்களைக் கணக்கில் கொண்டு, தொகுதிகளின் எண்ணிக்கையை விட வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அகிலேஷ் யாதவ் நிலைப்பாடாக உள்ளது.

காங்கிரஸ் 130 தொகுதிகளைக் கேட்கும் நிலையில் சமாஜ்வாதி கட்சி வெறும் 26 தொகுதிகளை மட்டுமே முன்மொழிந்திருப்பது இந்தியா கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான சிக்கலை வெளிப்படுத்தியுள்ளது.

எனினும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 26 தொகுதிகளே இறுதியான ஒதுக்கீடு என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

உத்திரபிரதேசத்தில் பெரிய கட்சியாக இருக்கும் சமாஜ்வாதி, காங்கிரஸின் கோரிக்கையை ஏற்குமா? அல்லது 26 தொகுதிகளுக்குள் காங்கிரஸைக் கட்டுப்படுத்துமா?

2027 உத்திரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்கு இது முக்கியமான சோதனையாக உருவெடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories