
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தீபஒளி நாளன்று (நவ.8) ஒரே நாளில் 17-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி, த.வெ.க ஆட்சியின் 6 மாதகால தோல்வி நிர்வாகத்தை எடுத்துரைத்துள்ளார் தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன்.
இது குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,
“இந்த 6 மாதகால த.வெ.க ஆட்சிக்கு தீபஒளி பண்டிகையில் நடந்த சட்டம் - ஒழுங்கு சீர்கேடுதான் சாட்சி!
“பண்டிகை காலம் என்றால்... அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்” என்கிறார் ஸ்டாண்ட்-அப் காமெடியன் அமைச்சர் ராஜ்மோகன். தீபஒளி அன்றைக்கு ஏதாவது பேசுவதற்கு இது பட்டிமன்றம் இல்லை. “நீங்கள் அமைச்சர்! ஆட்சியில் இருக்கிறீர்கள்!” அதனை உணர்ந்து பேசுங்கள்.
The Purge என்னும் ஆங்கிலப் படத்தில் 12 மணிநேரத்திற்கு கொலை, கொள்ளை என எது நடந்தாலும் அதற்கு தண்டனை இல்லை என்பதாக கதைக்களம் இருக்கும். ஆதுபோல், தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய்.
முதலமைச்சர் விஜய் அவர்களே... கடந்த மூன்று நாட்களில் 17-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. இந்த மூன்று நாட்கள் செய்தித்தாள் படித்தீர்களா?

உங்கள் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. 24/7 வேலை செய்வதுதான் முதலமைச்சர் பொறுப்பு. காலை 10 முதல் மாலை 6 வரை செய்யும் பணி கிடையாது.
பண்டிகை காலத்தில் தண்ணீர் வரவில்லை என்றால் சாதாரண மனிதருக்கு பெரும் சிரமம்தான். முதலமைச்சரே... நீங்கள் ‘மிட்டா மிராசு’ சார்... உங்களுக்கு தண்ணீர் இருக்கும். உங்கள் துணை சபாநாயகருக்கு இரண்டு தண்ணீர் இருக்கும். உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்க வருவார். ஒரு அடிப்படை சிக்கலை சொல்வதற்கு வரும் சாமானியரை சரியாக அணுகும் பக்குவம் கூட இல்லாமல், காட்டாட்சி நடத்துகிறதா த.வெ.க?
அரசியல் கைதுகளை மட்டும் விடியற்காலையில் மேற்கொள்ள முதலமைச்சர் பாய்ந்து பாய்ந்து உத்தரவு போடுகிறாரே தவிர... பொதுமக்களின் பாதுகாப்புக்கு உடனடி உத்தரவு போடவில்லை என்று அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும்.
த.வெ.க.வில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களெல்லாம் இதற்கு முன்பு ரசிகனாக இருந்து டிக்கெட் விற்றதைத்தவிர, வேறு எதாவது மக்கள் பணி செய்திருக்கிறார்களா... என தெரியவில்லை. பெண் ஆட்சியரிடம் இப்படியா நடந்துகொள்வது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ செய்யும் செயலா இது?

சாமானியர் மீது தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் ரவிசங்கர், பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய அருள் விக்னேஷ் ஆகிய இரு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும். இவர்கள் மீது குற்ற வழக்குகள் தொடரப்பட வேண்டும்.
இதுபோன்ற த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களின் அட்டூழியங்களுக்கு காரணம், முதலமைச்சர் விஜய்தான். அவர்தான் நம்பர் 1 குற்றவாளி.
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி இனியும் அமைதியாக இருக்கக்கூடாது. இது காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கும் இழுக்கு. உங்கள் துறையின் துணை ஆய்வாளரே கொலை செய்யப்பட்டிருக்கும் வேளையில் இப்படி அமைதியாக இருக்கக்கூடாது. இங்கு காவல்துறைக்கே பாதுகாப்பில்லை.
பெண் அதிகாரிகளை அருகில் வைத்துக்கொண்டு, ஸ்டாண்ட்-அப் காமெடியன் அமைச்சர் ராஜ்மோகன், “ஆண்மை இருக்கிறதா...” என பேசுகிறார். நான் கேட்கிறேன்... உங்கள் முதலமைச்சருக்கு “ஆளுமை இருக்கிறதா?” ஆட்சி செய்கிற திறன் இருக்கிறதா?
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த 6 மாதங்களுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவருவோம் என சட்டமன்றத்தில் பேசினார்கள். ஆனால், இந்த 6 மாதங்களில் என்ன மாற்றம் வந்துள்ளது?”






