
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - SIR என்கிற முறையை அறிமுகப்படுத்தி, இந்திய அளவில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வின் பாசிச போக்கிற்கு எதிராக செயல்படுபவர்களை தோற்கடிக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உந்துதலாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
இதனைக் கண்டித்து, ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் நடந்த பேரணியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், “தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி உருவாகக் காரணம் SIR முறைதான்” என வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

மேலும், “தமிழ்நாட்டில் SIR முறை, மும்முனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது. இல்லை என்றால், இருமுனைப் போட்டிதான். இதனால்தான், தேர்தல் முடிவுகளில் த.வெ.க வெற்றி பெற்றிருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிரான தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர். இதே நிலைதான் பிற மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. முடிவுகள் வந்தபோதே, இதை நான் கூறியிருந்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், வி.சி.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் த.வெ.க.வினர் வாயடைத்து போயுள்ளனர்.






