
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் பெறப்பட்டதாகவும் அதற்கு தான் நேரடி சாட்சி என தவெக அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பேசிய இருந்தார். இந்த விவகாரம் குறித்து மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்குவது போல், கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டமன்றத்தில் அமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வெறும் அரசியல் பேசியதாக புறந்தள்ளிவிட முடியாது என மனுவில் தெரிவித்துள்ள அவர், சட்டமன்றத்தில் உறுப்பினர் பேசும் பேச்சு தொடர்பாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்ற சட்டப்பாதுகாப்பு என்பது, சட்டமன்றத்துக்கு வெளியில் நடந்த இந்த நிகழ்வுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






