அரசியல்

“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!

பயிர்க்கடன் என்ற பெயரில் போலித்தனமாக அறிவிப்பை வெளியிட்டு, விவசாயிகளை தவெக அரசு வஞ்சித்து வருவதாகவும், இதனால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகவும் கழக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் கண்டனம்.

“வாக்குறுதியை நிறைவேற்றாத  தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஏக்கத்தில் உயிர்விட்ட விவசாயி சோமசுந்தரம் விவசாயிகளின் உயிர்பலியை நிறுத்த அரசு முன்வரவேண்டும்! விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் கண்டனம்!

நாகப்பட்டினம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து 85 ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கியிருந்தார். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இரண்டு முறை விஜய் அரசு அறிவிப்பு வெளியிட்டும் 75 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் வாங்கிய கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாததால் சோமசுந்தரம் மன உளச்சலில் இருந்தார்.

பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் 4-ஆம் தேதி நடந்த விவசாயிகள் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பியதுமே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

’’5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கி பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். "5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்’’ என்று தேர்தல் பிரச்சாரத்தில் திருப்பூரில் 2026 ஏப்ரல் 14-ஆம் தேதி வாக்குறுதி கொடுத்தார் விஜய். இதே அறிவிப்பை தவெக தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார்கள்.

தனது பிரசாரத்தில் பச்சைத் துண்டு அணிந்து விவசாயிகளை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த விஜய் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை.

தேர்தல் வாக்குறுதியில் ’நிலத்தின் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டே தள்ளுபடி அமையும்’ என வாய் கிழியப் பேசிய விஜய், ஆட்சிக்கு வந்த பிறகு நிலத்தின் பரப்பளவைக் கணக்கில் கொள்ளாமல் கடன் தொகையின் அளவை அடிப்படையாக வைத்து அறிவிப்பை வெளியிட்டார். 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடி அளிக்கப்பட்டது. கடன் தொகை 50 ஆயிரத்திற்கு மேல் போகும்போது தள்ளுபடித் தொகை பெருமளவு குறைக்கப்பட்டது.

இந்த ஏமாற்றத்தைப் பொறுக்க முடியாமல் விவசாயிகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். இதனால், 75 ஆயிரம் வரையிலான பயிர்க் கடன், 100 சதவிகிதம் தள்ளுபடி எனவும் 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க் கடன் தள்ளுபடி எனவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பினாலும் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கவில்லை.

“வாக்குறுதியை நிறைவேற்றாத  தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!

2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சராகக் கலைஞர் பதவியேற்ற அன்றே அனைத்து விவசாயிகளுக்குமான 7,000 கோடி ரூபாய் கூட்டுறவு பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் 12,000 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கூட்டுறவு பயிர்க்கடன்களைத் திமுக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்து விவசாயிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கியது.

இந்த நடைமுறைகள் எதையும் விஜய் அரசு பின்பற்றவில்லை. இந்த அநியாயத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ‘’ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நிபந்தனைகள் விதிக்கப்பட்டது’’ என வியாக்கியானம் கொடுத்தார்கள். ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 2025 நவம்பர் 28 அன்று வெளியிடப்பட்டன. அதற்கு பிறகுதான் விஜய் வாக்குறுதி கொடுத்தார். அப்போது பனையூரில் பஞ்சு மெத்தையில் படுத்திருந்த விஜய்க்கு தெரியாதா? ஆட்சிக்கு வந்து பிறகுதான் ரிசர்வ் வங்கி என்று ஒன்று இந்தியாவில் இருப்பது தெரிய வந்ததா?

பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியான அதே காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவில் 55.72 லட்சம் விவசாயிகள் வாங்கிய. 36,585 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை மகாராஷ்டிரா அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. மகாராஷ்டிராவில் தள்ளுபடி செய்ய முடியும். தமிழ்நாட்டில் முடியாதா?

தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அந்த வாக்குறுதி நிறைவேற்றினால்தான் அனைத்து விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.

கடனை நிபந்தனைகள் இன்றி முழுவதும் நீக்கிய பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும் , திராவிட மாடல் அரசின் பிதாமகர் தளபதி அவர்களையுமே சாரும். ஆனால் தவெக அரசோ விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்கு வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை வஞ்சித்துவிட்டது.

சோமசுந்தரம் போல லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில் மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்து மேலும் மன உளைச்சலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி முழுமையான கடன் தள்ளுபடியை விஜய் அரசு செய்ய வேண்டும். இறந்த விவசாயி சோமசுந்தரம் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளை ஏமாற்றிய ஆட்சியாளர்கள் நீடித்து நிலைத்ததில்லை என்பதே வரலாறு.

banner

Related Stories

Related Stories