
தவெக அமைச்சர் கில்லி சரத்குமார் என்பவர், பொதுவெளியில், கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தற்போதுள்ள ஆட்சியிலுள்ள போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கில்லி சரத், அந்த வீடியோ 2 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் மைதானத்தில் குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதற்காக அதனை நுணுக்கியதாகவும் ஒரு அற்புதமான விளக்கத்தை அளித்தார். இந்த விளக்கத்திற்கு பின்புதான் உண்மையாகவே அது போதைப்பொருளாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்தளவுக்கு இருந்தது அந்த விளக்கம்.
இருப்பினும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஒரு அமைச்சரே போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்ற சந்தேகம் பொதுவெளியில் வந்துவிட்டபோது அவர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான திமுக கோரிக்கை வைத்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் இன்று (ஜூன் 29) அமைச்சர் சரத் குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாபெரும் போராட்டத்தை அறிவித்தனர்.

இன்று (ஜூன் 29) போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காலை 7 மணி முதலே தவெக அரசின் காவல்துறை அடக்குமுறைகளைக் கையாண்டு பல்வேறு இடங்களில் திமுக-வினரை கைது செய்துள்ளது.
குறிப்பாக சென்னை, எழும்பூரில் த.வெ.க அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
இதனைக் கண்டித்து சென்னை புரசைவாக்கம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“மாத்திரை தயார்.. அமைச்சர் மாத்திரையை பொடியாக்க தயாரா, தூய சக்தியா.. போதை சக்தியா” போன்ற முழக்கங்களை எழுப்பி கண்டனங்களைத் தெரிவித்தனர். இவர்களையும் வலுக்கட்டாயமாக அராஜகத்தில் ஈடுபட்டு கைது செய்தது தவெக அரசின் காவல்துறை.
மேலும், சென்னை மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதும் சேலம், ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராடிய திமுக-வினரை கைது செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கைது செய்தால் போராட்டதை நீர்த்துப் போகச் செய்யலாம் என தவெக அரசு நினைத்தால் அதைவிட முட்டாள்த்தனம் இந்த அரசுக்கு வேறொன்றுமில்லை.

அமைச்சர் சரத்குமார் மீது நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை மறக்க வேண்டாம். தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் குற்றச்சம்பவங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழிக்கலாம் என நினைப்பதுபோல் இந்த சம்பவத்தையும் ரீல்ஸ் போட்டு மடை மாற்றாமல், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






