
தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இன்று (22/06/2026) செய்தியாளர்களை சந்தித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு, மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுகையில்,
“மத்திய நீர்வள ஆணையம் 22.11.2018 அன்று கர்நாடக அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான அறிவுறுத்தலை வழங்கியது. அந்த அறிவுறுத்தலை எதிர்த்தே, அன்றைய அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு தொடர்பாக (13.11.2025) அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மத்திய நீர்வள ஆணையம் எந்தவித இறுதி அனுமதியையும் வழங்கவில்லை. மாறாக, சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒரு ஆரம்பகட்ட அறிவுறுத்தலையே வழங்கியுள்ளது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், அந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வது முன்கூட்டிய நடவடிக்கையாக அமையும் என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது.
அதாவது, மேகதாது திட்டத்திற்கு இறுதி அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என்ற நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், திட்டத்தின் அடுத்தடுத்த முன்னேற்றங்களை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வாய்ப்பும் மாநிலத்திற்கு இருப்பதை அந்தத் தீர்ப்பு மறைமுகமாக உணர்த்துகிறது.
அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட மூன்று முக்கிய நிபந்தனைகளை புறக்கணித்து கர்நாடக அரசு தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதனை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
நம்மைப் பொறுத்தவரை, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறோம். அதற்காக இந்த சட்டப்பேரவையில் பலமுறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு காலகட்டங்களில் பதவி வகித்த பிரதமர்களையும், ஒன்றிய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். அதுமட்டுமின்றி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி, மேகதாது பகுதியில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாட்டின் கடுமையான எதிர்ப்பை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தியுள்ளோம்.

ஆனால், கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்கு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அது பாஜக அரசாக இருந்தாலும், காங்கிரஸ் அரசாக இருந்தாலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் உணர்வுக்கும், தமிழ்நாட்டின் நலன்களுக்கும் முரணாக மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவிற்கும் உகந்ததாக இல்லை.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பையும் பேராபத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த விவகாரத்தை நாம் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் கையாளத் தவறினால், அது மீண்டும் மத்திய நீர்வளத் துறையின் அதிகாரிகளின் முடிவுகளுக்கு உட்பட்ட நிலையை உருவாக்கக்கூடும். அத்தகைய சூழலில், தமிழ்நாடு இந்த விவகாரத்தில் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், மேகதாது அணைத் திட்டம் தொடர்பான பிரச்சினை என்பது காவிரி நடுவர் மன்றம் அல்லது உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள விவகாரங்களின் தொடர்ச்சியாக மட்டும் பார்க்கப்பட முடியாது. இதுவரை நீதிமன்றங்களால் இறுதியாகத் தீர்மானிக்கப்படாத ஒரு புதிய நதிநீர் தாவா என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையுடன் மூன்று நீதிபதிகள் கொண்டோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படுவதுதான் இந்த விவகாரத்திற்கு பொருத்தமான தீர்வாக இருக்கும் என்று, இந்த வழக்கில் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகி வாதாடி வரும் மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும், நீண்டகாலமாக அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்களுடைய ஆலோசனையின்படி, மேகதாது அணைத் திட்டம் ஒரு புதிய நதிநீர் தாவா என்பதால், இதற்கென புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு கடந்த 2026 மார்ச் 4ஆம் தேதி ஒன்றிய அரசிடம் அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது.
இத்தகைய புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படுவதால், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை நான் தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அது ஒரு அரசியல் கட்சியின் முடிவாக அல்ல; தமிழ்நாடு அரசின் முடிவாகும். தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், மாநிலத்தின் உரிமைகளை நிலைநிறுத்தவும், குறிப்பாக காவிரி நீர் உரிமையை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டும்.

இன்று ஆட்சிப் பொறுப்பில் எந்த அரசியல் இயக்கம் இருந்தாலும், மேகதாது விவகாரம் என்பது தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தோடு நேரடியாக தொடர்புடைய பிரச்சினை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, அரசியல் வேறுபாடுகளையும், கட்சி சார்ந்த கருத்து முரண்பாடுகளையும் கடந்து, மாநில நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைவரும் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
அந்த அடிப்படையில்தான், புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தபோது, அதனை அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் ஒன்றிணைக்கும் வகையில் விவாதத்திற்கு உட்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பேரவையில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் திருத்தங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் கடந்த 19ஆம் தேதி அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படுவது எந்த வகையிலும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை பாதிக்காது. அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவோ, மீண்டும் திறக்கவோ இந்த நடைமுறையால் இயலாது என்பதையும் நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக ஏற்கனவே கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சித்தபோது, அதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு அணுகலாம் என்று அனுமதி வழங்கியது.
அதன் அடிப்படையில்தான், கடந்த 30.11.2019 அன்று தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியைத் தடுக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் முன்வைத்தது.
எனவே, புதிய நதிநீர் தாவாக்களில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற அணுகுமுறை என்பது புதிதான ஒன்று அல்ல; ஏற்கனவே தமிழ்நாடு பின்பற்றியுள்ள சட்டரீதியான வழிமுறையாகும் என்பதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அதைப்போலவே, மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சர் இந்த சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்துடன், நாங்கள் முன்வைத்திருந்த திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, திருத்தத்துடன் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பாதுகாப்பதும், குறிப்பாக டெல்டா மாவட்ட மக்களும் விவசாயப் பெருங்குடி மக்களும் சார்ந்துள்ள காவிரி நீர் உரிமையை உறுதிப்படுத்துவதும்தான். இதுவே இந்தத் தீர்மானத்தின் உண்மையான நோக்கமாகும்.
எனவே, ஏற்கனவே இந்த அவையில் வெளிப்பட்டுள்ள ஒற்றுமை உணர்வை பாதிக்கும் வகையில், இந்த விவகாரத்தை மீண்டும் அரசியல் விவாதப் பொருளாக மாற்றுவது யாருக்கும் பயன் அளிக்காது. மாறாக, தமிழ்நாட்டிற்குள் அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும் பிளவுகளும் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய நிலை உருவானால், அது தமிழ்நாட்டின் நலனுக்கு சாதகமாக அல்ல; கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கே வலு சேர்க்கக்கூடியதாக அமைந்துவிடும்.
எனவே, அத்தகைய சூழ்நிலையை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காவிரி உரிமை, தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயிகளின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாப்பது என்ற உயர்ந்த நோக்கத்துடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஓரணியில் நின்று, ஒருமித்த குரலுடன் செயல்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.






