
திருப்பரங்குன்றம் தீப வழக்கின் மனு தாரர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் மதுரையில் இன்று (ஜூன் 09) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பழைய நிலை நீடிக்கும் என சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சிக்கந்தர் தர்காவில் ஆடு,கோழி வெட்டப்பட்டு கொண்டிருந்தது. அந்த நிலை தொடருமா, இல்லையா?
ஏற்கனவே 3 நீதிபதிகள் அமர்வு இது குறித்து 10.10.25 அன்று ஆடு,கோழி வெட்டக்கூடாது என தீர்ப்பு அளித்துள்ளது. இதை எதிர்த்து இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. அப்படியெனில் எப்படி பழைய நிலை தொடரும்?
தீப வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தூணில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதன் மேல்முறையீட்டு மனுவில் 6.1.26 அன்று தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனால், இன்று வரை அதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. எனில் எப்படி பழைய நிலை நீடிக்கும்? இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இதுவரை வாயே திறக்கவில்லை. பழைய நிலை தொடரும் என அமைச்சர் நிர்மல்குமார் சொல்வதை எப்படி செயல்படுத்துவார்? போற போக்கில் பேசலாமா? இது இந்த அரசுக்கு தெரியுமா?
திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என கே.கே.ரமேஷ் தொடுத்த மனுவை, ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என 19.2.25 அன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்கள். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அந்த வழக்கில் 8.4.25 அன்று ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு மதுரை ஆட்சியரை தாமாக சேர்த்து மலையை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆட்சியர் கடந்த 25.5.26 அன்று 7 பேர் கொண்ட வருவாய் துறை குழுவினர் மலையை அளந்து விட்டார்கள். இதில் தர்கா தரப்பு சேர்க்கப்படவில்லை.

மலையை அளக்கும் நடவடிக்கையில் தவெக அரசு தர்கா தரப்புக்கு எந்த நோட்டீசும் வழங்கவில்லை. அவர்களுடைய முதுகுக்கு பின்னால் சர்வே நடத்துவது தவறு. சிறுபான்மை மக்களின் ஓட்டை வாங்கி வந்துவிட்டு அந்த மக்களுக்கே தெரியாமல் சர்வே நடத்துவீர்களா? இந்த அரசின் கொள்கையை எப்படி நீதிமன்றத்தில் நிலைநாட்டுவீர்கள்? சட்டவிரோதமாக போடப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் எப்படி நடைமுறைப்படுத்துவீர்கள்?
மதச்சார்பின்மை தான் இந்த அரசின் கொள்கை என்றால் எப்படி அதை வழிநடத்துவீர்கள். மலையில் இப்போது புதிதாக ஒரு பாதை வேறு போடுகிறது தொல்லியல்துறை. இதுபற்றி எந்த தகவலும் இல்லை. இதை சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அனைத்து தீர்ப்பு, உத்தரவுகளையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தர்கா தரப்பினர் மீது பதியப்பட்ட பொய் வழக்கை வாபஸ் வாங்கினால் தான் இது மதச்சார்பற்ற அரசு. இவற்றையெல்லாம் செய்யாவிட்டால் நிச்சயம் இந்த அரசு நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் தடுமாறும். இந்த அரசின் கொள்கை தலைவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை தவெக தலைவர், அமைச்சர்கள் சரியாக படிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தை தடை செய்வது முழுக்க அரசியல் சட்ட விதிமீறல். இவர் பொம்மை முதல்வரா? இது முழுக்க கருத்துரிமைக்கு எதிரானது. ஜனநாயகன் படத்தை வெளியிட போராடும் நீங்கள் திருப்பரங்குன்றம் படத்தை தடை செய்வது ஏன். இதே போல அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை உடனடியாக அச்சுறுத்தும் வகையில் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.






